ஒரு கதை (க)விதையாகிறது
தன் பிள்ளைகளுக்காக வாழ்க்கையே தியாகம் செய்யும் பிள்ளைகளை பெற்ற அப்பாகளுக்கு இக் கவிதை சமர்ப்பணம்.
கோயிலில் இல்லாத கடவுள் நீ
கோபப் படாத தங்கம் நீ
பத்து மாதம் கருவறையில்
சுமக்காத தாய் நீ
அம்மா இரத்தத்தை பாலாக்கி
உணவூட்டினாள்
நீ உன் உயிரை உழைப்பாக்கி
உணவூட்டினாய்
உயிர் அணுவால்-என்னை
உருவாக்கிய சிற்பி நீ
தாயின் சுமை பத்து மாதம் தான்-ஆனால்
உன் சுமை நான் ஆளாகும் வரை
திரையில் காட்டாத
கதா நாயகன் நீ
நிஜ வாழ்க்கையில் நடிக்காத
மகா நடிகன் நீ
நான் அரசனாக அவதாரம்
எடுத்திருந்தால்
நிச்சயமாக
உனக்கொரு
தாஜ்மஹால் கட்டி இருப்பேன்.
உதவாக்கரையை
இருபது வருடம்
உன் தோளில்
சுமந்தவன் நீ.
அசலான நீ
நகலை நிஜமாக்க
நிழலாகி போனவன் நீ.
தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பதை
நிரூபித்து காட்டியவன் நீ.
கல்வி முதல் எனது காதல் வரை
நான் பகிர்ந்து கொண்ட நல்ல தோழன் நீ.
என்னை கரை சேர்க்க
தினம் தினம் சோர்ந்து
போனவன் நீ.
கெட்ட பழக்கம் எனக்கு
எட்டா வகையில்
பார்த்து கொண்டவன் நீ.
படிப்பும் முடிந்தது
புத்தியும் வந்தது.
எங்களுக்காக உழைத்து உழைத்தே
உன் தேவைகளை செய்து கொள்ளாதவன் நீ.
உன் காலம் வரை
எங்களுக்காக கஷ்டப் பட்டு பட்டே கரைந்து போனவன் நீ.
உனக்காக
அம்மாக்காக
கனவு இல்லம்
கட்டாதவன்,
30 வருடம் வாடகை வீட்டு வேதனையிலேயே
வெந்தவன்.
நீ பட்ட கஷ்டத்தை
நான் அனுபவிக்கக் கூடாது
என்பதற்க்காக-உன்
கடைசி மூச்சு வரை
உழைத்தவன்
எனக்காக நானே கவலை படாத போது
என் வாழ்க்கை பற்றி
எனக்கே அக்கறை இல்லாத போது
என்னை அன்புடன் அரவணைத்து
வாழ்க்கையை புரிய வைத்தாய்.
எனக்கு தன்னம்பிக்கை ஊட்டி
மிக சொகுசான கனவு இல்லம்
கட்ட ஆதரவாய் இருந்தாய்.
பணம் பிரச்சனை வந்து
மனதை தின்ன
நான் திணற
வாடி தடுமாறும் சமயங்களில் எல்லாம்
நான் இருக்கேண்டா,
எதுக்கும்
பயப்படாதே
என சிங்கமாய் நீ தரும்
ஆதரவு குரல்கள் தான்
என்னை தூக்கி நிறுத்தும்.
கனவு இல்லம்
நிறைவு பெறும்
சில மாதங்களுக்கு முன்
எத்தனை
என்னை பற்றிய சிந்தனைகள்,
கனவுகள் உனக்குள் இருந்தது.
எனக்காகவே
எப்போதும்
கவலைப் படும்
உன்னை போன்ற குணம்
இனி இந்த உலகில் யாருக்கு வரும்?
இன்னும் சில மாதங்களில்
சந்தோசமான பல
நிகழ்வுகள்
நடக்க போகிறது என்று
காத்திருந்த நம் குடும்பத்தினருக்கு
பேரிடியாய்
அமைந்தது
உன் உடல் நலக் குறைவு.
படிக்க தெரியாத
உலகை எதுவும் அறியாத
அம்மா
என்ன செய்வாள்.
கிடைத்த ஒன்னு ரெண்டு
சொந்தங்களை
அழைத்து கொண்டு
எத்தனை மருத்துவ மனை
உன்னை தூக்கி சென்றிருப்பாள்.
கும்பகோணத்திலிருந்து
தஞ்சாவூர் அனுப்பினர்
தஞ்சாவூரிலிருந்து
திருச்சி அனுப்பினர்
திருச்சியிலிருந்து
சென்னை அனுப்பினர்.
எத்தனை டெஸ்ட்,ஸ்கேன்
படித்த
பண ஆசை பிடித்த
மருத்துவர்கள்
ஒவ்வொரு சோதனைக்கும் பிறகும்
ஒவ்வொன்றாக சொன்னனர்.
லட்ச கணக்கில்
பணம் செலவாகும்
என படித்த மேதாவிகள்(மருத்துவர்கள்)
பறை சாற்றினர்.
கடல் கடந்து வந்த
அப்பாவின் செய்தி கேட்டு
துடித்து போய் ஓடினேன்
இந்தியாவுக்கு.
எப்போதும் சிங்கம் போல
கம்பீரமாய் இருக்கும்
அப்பா,
நான் பெரியவன் ஆகியும் தூக்கி விளையாடும்
அப்பா
நடக்க கூட முடியாத நிலையில்
காணும் போது
கண்கள் எல்லாம் சிவந்தன.
அழுவதற்க்கு விழிகளில்
கண்ணீர் இல்லை…
வணங்கா முடியாக
என்னை வளர்த்த அப்பா
அந்த
அப்பாவுக்காக
மருத்துவரின் காலில் விழாத குறையாக
மன்றாடி கேட்டேன்
எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர் என்று
DONT FEEL
ஆறு லட்சம் பணத்தை கட்டுங்க.
ஒரு MAJAR OPERATION தான்
அதுக்கப்புறம் உங்க அப்பா
பழைய மாதிரி ஆயிடுவார் என
தன்னம்பிக்கை வார்த்தை உதிர்த்தார்.
ஆறு லட்சம் பெரிதல்ல-என்
ஆல மரம் நீ தான் பெரிது என
கட்டினேன்…..
அற்ப பணத்தை…
பிணம் திண்ணும் கழுகுகள்(மருத்துவர்கள்)
உன் உடம்பை கூறு போட்டன…..
ஆப்ரேஷனும் முடிந்தது….
OPERATION SUCCESS
என
பொய் பிரசங்கம் செய்தது.
இனி உனக்கு எதுவும் ஆகாது
நீ நன்றாய் இருக்கிறாய்
என்ற மன நிறைவோடு
பிரிய மனமில்லாமல்
கடனுக்காகவும்-நீ ஆசைப்பட்ட மாதிரி
என் வாழ்க்கை
கேள்விகுறி ஆகி விட கூடாது
என்பதற்காகவும்
வேறு வழியே இல்லாமல்
வளைகுடா நாட்டிற்க்கு
வலிகளுடன் மீண்டும் வந்தேன்.
ஒரு மாதம் கூட
முழுமை பெறாத நிலையில்
வந்தது
அந்த செய்தி…..
ஆம்
என் ஆழ்மனதை
நடுங்க வைத்த செய்தி,
என் உயிரை குலைய வைத்த செய்தி.
உன் கடைசி முகம் காண முடியாத
துர்பாக்கியசாலி ஆகி விட்டேன்…
இனி வரும்
வெள்ளிக்கிழமைகளில்
யாருடன் பேசுவேன்….
என் சுக துக்கங்களை
யாருடன் பகிர்ந்து கொள்வேன்.
நான் தினம் பார்க்கும்
கண்ணாடியாய் இருந்தவனே,
என் புன்னகையை
ஏன் எடுத்து சென்றாய்?
என் வழி காட்டியாய் இருந்தவனே
என்னை ஏன்
பாழும் நரகத்தில்
தனியே விட்டு விட்டு
சென்று விட்டாய்?
புன்னகையுடன் இருக்கும் அம்மா
இப்போதெல்லாம்
கண்ணீர் தோய்ந்த முகத்துடனே
காணப்படுகிறாள்.
நான் அம்மாவோடு உரையாடும்
தொலைபேசி பேச்சுக்கள்
பெரும்பாலும்
மௌனமும் ,கண்ணீரும் தான்
நிறைந்து இருக்கிறது…
நீ உயிர் விடும் கடைசி நொடியில் கூட ஏன் சொன்னாய்
எனது பெயரை?
உன் உயிரை விட எனக்காக எதற்க்கு அதிக கவலை பட்டாய்?
யாருடனும் உன்னை போல பேச பிடிக்க வில்லை…
பழக பிடிக்க வில்லை….
நீ என்னுடன் இருக்கும் போது
எது என்னுடன் அதிகம் இருந்ததோ
அது இப்போது ஒரு துளி கூட இல்லை…..
இப்படி
கண்ணீர் துளிகளையும்,கவலைகளையும் தந்து விட்டு சென்றதற்க்கு
உன்னுடன்
என்னையும் அழைத்து கொண்டு
சென்றிருக்கலாமே???
அம்மா கவலை பட கூடாது என நானும்
நான் கவலை பட கூடாது என
அம்மாவும்
பொய்யான புன்னகையுடன்,
நிரந்தரமற்ற வாழ்க்கையில்
ஏனோ உயிரை தொலைத்து விட்டு
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
என்னிடமிருந்து
உன் உடலை தான்
அந்த கடவுளால் பிரிக்க முடியும்-ஆனால்
உன் நினைவுகளையும்,உன் ஆன்மாவையும் என்னிடமிருந்து
பிரிக்க கூடிய சக்தி-இந்த
பிரபஞ்சத்தில் யாருக்கும்
இல்லை.
உனக்கு நல்ல மகனாய் இருந்தேனா?
என்று எனக்கு தெரியாது.
ஆனால் உனக்கு
நல்ல தந்தையாக இருப்பேன்.
மறுஜென்மம் எடுத்து வா.
எனக்கு மகனாக வா….
நீ கொடுத்த அன்பை
உனக்கு இரட்டிப்பாக
கொடுப்பேன்.
நான் இறக்கும் வரை!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)