உங்கள் பெயர்:
தமிழினியா
வெளியிட்டிருக்கும் புத்தகங்கள்:
அச்சம் தவிர், பொழுது புலரும் நேரம், கல்லாமை எனும் பெருங்குற்றம்.
உங்கள் படைப்புகள் கிடைக்கும் இடம்: amazon, flipkart, Notion press and அகழ் பதிப்பகம், பெரம்பலூர்.
1. உங்கள் படைப்பிற்கான தேடலின் போது நீங்கள் கண்டறிந்த அல்லது கற்றறிந்த ஒரு புதிய விஷயம் என்ன?
எழுத வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும். தேடல் நிறைந்த வாழ்வில் இறுதியில் நிலைத்து இருப்பது எழுத்துக்கள் மட்டுமே.
2. உங்கள் எழுத்தில் உருவான எந்த கதாப்பாத்திரத்தின் வழி தற்போதைய உலகத்தை நீங்கள் காண விரும்புகீறீர்கள்?! அது ஏன்?
பொழுது புலரும் நேரம் – தூயவன்.
காரணம் : எந்த பிரச்சனை வந்தாலும் முதல்ல பதட்டப்படக்கூடாது. நமக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சாலும் நமக்கான நேரம் வர வரைக்கும் அமைதியா காத்துட்டு இருக்கணும். வாழ்க்கைய வாழ்ந்து பாக்கணும். அதனால எனக்கு தூயவன ரொம்ப பிடிக்கும்.
3. நீங்கள் எழுத யோசித்த அல்லது தயக்கம் கொண்ட எழுத்து வகை எது? காரணம் என்ன?
ரொமான்ஸ். சுட்டு போட்டாலும் ஆரம்பத்துல வரல. ஏன் இப்போ கூட தான். வரலன்னு சொல்றத விட, அத மையமா வச்சு கதை எழுத என் மனசுக்கு ஒப்பவில்லை.
4. ரைட்டர் ப்லோக் (writer block) பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
அடிக்கடி அதில் சிக்குண்டு கொள்கிறேன். ரொம்ப அதிகளவு போகுறப்போ ரெண்டு விஷயம் செய்வேன், ஒன்னு படுத்து தூங்கிடுவேன். இல்லன்னா எனக்கு எங்க போகணும் ன்னு தோணுதோ கிளம்பிடுவேன். குறைந்தளவு எதை பத்தியும் நினைக்காம அப்டியே விட்ருவேன். அதுக்கு அப்ரோம் மனசு ஒரு நிலைக்கு வந்துடும்.
5. எழுத்தாளர்களுக்கு இருக்க கூடாதென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?
ஆணவம், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எழுத கூடாது.
6. எழுதிட நீங்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் எது? ஏன்?
குறிப்பிட்டு சொல்ல முடியாது. காரணம், இது தான் நேரம் ன்னு நான் எடுத்துக்க மாட்டேன். எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ யோசித்து வைத்ததை எழுதி முடித்து விடுவேன். அவ்வளவுதான்.
7. அப்படி உங்களுக்கொரு வாய்ப்பு கிடைத்தால், இதுவரை நீங்கள் படித்த சங்க இலக்கிய கதைகளில் (பொன்னியின் செல்வன்/ மஹாபாரதம்/ ராமாயணம்/ இன்னும் பல) எந்த கதையின் நடையை அல்லது ஏதாவது ஒன்றை அந்நாவலில் மாற்றி அமைத்திட விரும்பிடுவீர்கள்? அது ஏன்?
நிச்சயமாக வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய மாட்டேன். எழுத்து நடை என்பது அவரவரின் தனிப்பட்ட அழகு நடை. அதில் வாய்ப்பு கிடைத்தாலும் அந்த படைப்பின் அழகு நடையை குழைக்க மனது எனக்கு வராது. அது அப்படியே இருந்தால் தான் அழகு என்பது எனது தனிப்பட்ட கருத்து.
8. எங்கு உங்களின் கதை சார்ந்த விடயங்களை பற்றி யோசிப்பீர்கள்?
அதற்கு இடம் பொருள் எல்லாம் இல்லை. எப்போ கதை எழுத உட்காந்தாலும் நமக்கு வராது. திடீர்னு சில சமயம் தோணும்.. அத அப்டியே மூளைல பதிய வச்சுப்பேன்.
9. எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?
நேர மேலாண்மை, எதையும் மற்றொருவரின் கருத்தில் இருந்து யோசிக்கும் தன்மை, பொறுமை அவசியம்.
10. நீங்கள் எழுதியதில் உங்களின் மாஸ்ட்டர் பீஸ் எது? ஏன்?
அப்படி சொல்ற அளவுக்கு இன்னும் நான் எழுத்துல மேம்படல. இன்னும் நல்லா எழுதணும். கொடுக்குற படைப்பு கருத்துள்ளதாக இருந்தால் எழுதும் அனைத்தும் மாஸ்டர் பீஸ் தான்.
11. நீங்கள் எழுதியிருக்கவே கூடாதென்று நினைத்த உங்களின் ஒரு படைப்பு எது?
எனது முதல் நாவல். அது புத்தகமாக வெளியிடவில்லை. அடிக்கடி தோன்றும். அதை எழுதி இருக்க கூடாதென்று.
12. எழுத்துத் துறையை பொறுத்த மட்டில் உங்களின் தாரக மந்திரம் என்ன?
எழுத்து என்பது ஒரு எழுத்தாளனின் சமூகம் சார்ந்த கடமை.
நன்றி. வணக்கம்.