படம் பார்த்து கவி: அயல் நாட்டு வாழ்க்கை

by admin 1
44 views

வெளியே அழகாய் மிளிரும்
அடுக்கு மாடி கட்டிடங்கள்..

உள்ளே அலங்கோலமாய்
அடுக்கு மாடிகட்டில்கள்…
வீட்டில் முதுகு தட்டி
உறங்க வைப்பாள் என் அன்னை-இங்கு
உறங்க விடாமல் உடம்பை
இரணப்படுத்துகிறது மூட்டப் பூச்சி..
பம்பு செட்டு குளிகை,வாய்க்கால் பாய்ச்சல்,ஆற்று நீராடல்
மறந்தே போச்சு???
அரபு நாட்டு வெந்நீர் குளியலில்!!!!!
அம்மா ஊட்டும்
அறுசுவை உணவுக்கு ஈடாகுமா!!!!
அரபு நாட்டு குளிர் சாதன பெட்டிகளில் கிடைக்கும்
காஸ்ட்லி பீசாவுக்கும்,பர்கர்க்கும்???
பாவாடை,தாவணி உடுத்தும் குமரிகள்,
பட்டு சேலை கட்டும் மங்கையர்கள் என
பார்த்து ரசித்த விழிகள்-ஏனோ
பார்க்க மறுக்கிறது
வெளிநாட்டவரின் வெள்ளை விகாரத்தை…..
இங்கு நட்பு கூட நாடகமாய் தான் உள்ளது.
நான் அழுதால் அழுவதற்க்கும்,
சிரித்தால் சிரிப்பதற்க்கும் யாருமில்லை
முகம் பார்க்கும் கண்ணாடியை தவிர…..
மனைவியின் செல்போன் முத்தம்,
மழலையின் புகைப்பட வருடல்,
அம்மாவின் ஆறுதலான தொலைபேசி பேச்சு
நின்னு போகும் மூச்சுக்கு-ஆங்காங்கே
நிம்மதி அளிக்கிறது….
ரம்ஜான் கொண்டாட்டம்,
தங்கையின் திருமணம்,
தந்தையின் மரணம் என்று
எந்த சுக துக்கங்களிலும்
கலந்து கொள்ள முடியாத
பாவியாய் ஆகி விட்டேன்..
இத்தனை பட்டும்
கிடைத்ததா எங்கள் வாழ்க்கை?
எங்கள் நிம்மதி?
வங்கி கடன்,
வீட்டு கடன்,
திருமண கடன்
என்று
கடனிலேய வாழ்க்கை கழிந்துவிடுமோ?
என்று பயம் வேறு?
எத்தனை குறை கூறினாலும்
வசை பாடினாலும்
எங்களை அனைத்து கொள்ளும்
தாயகமாக
இந்த அரபு நாடு உள்ளது…
இது நரகமே ஆனாலும்
இங்கே பயணிக்கிறோம்
எங்கள் குடும்பத்தின்
நல்வாழ்விற்க்காக..
நாங்கள் சேர்த்த காசு
இளமையையும்,நிம்மதியையும் தொலைத்து சேமித்தது….
நாங்கள் இளமைதொலைத்து சேமித்த காசை
தண்ணீரை போல செலவாக்காதீர்
கண்ணீரை போல நினைத்து செலவு செய்யுங்கள்…
-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!