திரண்ட வெண்ணெயை
திருட்டுப் பூச்சிகள்
திருடி விடாதிருக்க
வெண்மேனி ரம்புத்தானிற்கு
முள்வேலி பாதுகாப்பாம்!
உச்சிவரை தித்திக்கும்
மஞ்சள் சுளைக்கும்
கரடுமுரடு கிரீடக் கேடயமாம்!
ஊர்ந்தேறி உதிர்த்தாமலிருக்க
அலர்ந்த முளரிக்கும்
அவந்திகை அலகு முட்காவலர்களாம்!
கவினும் பிரமிப்பும்
பிறப்பிலே சுயக்காப்பு கொள்ளுமெனில்
மங்கைக்கு மட்டும் மறுதலித்திடுமோ!
மகாத்மா சொற்படி
கூர்ந்த நகமும்
நரநரக்கும் பற்களும்
அன்னெமென வர்ணனை கொள்பவளின்
அம்பறாத்தூணியின்
அக்னி ஆயுதமன்றோ!
புனிதா பார்த்திபன்
