படம் பார்த்து கவி: புன்னகைக்கும் கடவுள்

by admin 1
58 views

தோற்று விட்டேனா ?
என்னை பார்த்து சிரிக்கின்றான்
கடவுள் .
திடீரென்று
என் வாழ்வில் வந்துபோனாலும்
திருக்குறள் நீ என்பதை எப்படி சொல்வேன் ??
உன் நினைவை உணவாய் எடுத்து கொண்டுதான்
உயிர் வாழ்கிறேன் .
டேப்ரிக் கார்டில் ஒலிக்கும்
அந்த திமிர் பிடித்த
இளையராஜா பாடல் நீ
அவன் இசையை போல
உன்னையும் பேரன்போடு
பித்து பிடிக்க வைத்து
காதல் செய்ய வைத்தது நீ
யாருக்கும் தெரியாமல்
படிக்க விரும்பும் இரவு நேர கவிதை தொகுப்பு நீ .
ஒரு நொடி உன்னை நினைத்தால் கூட
பனிக்கட்டியும் அனலடிக்கும்
அனலடிக்கும் நெருப்பு கூட உன் நினைப்பில்
நமத்து (அணைந்து) போகும்
உன்னை பற்றி எழுத
உயிர் தமிழ் எழுத்தும் போதாதடி
உன்னை பற்றி கிறுக்கிய வரிகளால் கூட
காதல் புதுமைப்பித்தனானேன்டி
நிரந்தரமாய் உறங்குவதற்கு முன்
காற்றை தூதுவிட்டு
உனக்கொரு உண்மை சொல்கிறேன்
கர்வத்துடன் கேள் …
உன்னை போல இன்னொருத்தியை
சத்தியமாய்
எனக்கு காதல் செய்ய தெரியாது
நீ என்னை விட்டு சென்ற போதும்
நீ என்னுடையவளாக இல்லாத போதும்
பாழாய் போன மனது
உன்னை மட்டும் தானடி காதல் கொள்கிறது
காதல் சேர்வதும் இல்லை
பிரிவதும் இல்லை
உணர்வது!!
செல்கள் எல்லாம் என்னை செல்லரித்து போடும் வரையில்
செல்லுலார் உலகில்
இயந்திரமாய் ஓடி உழைத்து களைத்தாலும்
எவளோ ஒருத்திக்கு
தாலி கட்டி ஊர் உலகத்துக்காக வாழ்ந்தாலும்
ஏதோ ஒரு மூலையில்
விழித்திருக்கும் உன் நினைவுகளை யார் அழிப்பது …??
நான் தோற்றுவிட்டேன்
நான் தோற்றுவிட்டேன் என்று கிண்டலடிக்கும்
கடவுளை பார்த்து சிரிக்கின்றேன்
பல யுகங்கள் கடந்தும்
அவள் காதலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
என் ஆன்மாவின் இதயமாய் !

எண்ணமும் -எழுத்தும்
நௌஷாத் கான் .லி

You may also like

Leave a Comment

error: Content is protected !!