வாசகர் படைப்பு: புத்தனின் தந்தை

by admin 2
14 views

எழுதியவர்: சாந்தி ஜொ

“அப்பா, உலகில் எவரும் என்றென்றும் நிலைத்திருக்கப் போவதில்லை. என்றோ ஒருநாள் பிரிய வேண்டியவர்களே. ஆகையால், ஓர் உன்னத லஷியத்தை நாடி நான் பிரிகிறேன். அதில் தாங்கள் தடை
நிற்கலாகாது” என வேண்டினார். தந்தையின் கண்களில் நீர் ஆறாய் பெருகியது.
காலை 6 மணி. லேனின் வாசலில் நீல நிற ஆட்டோ நின்று கொண்டு இருக்கிறது. உரிமையாளர் ஜோதிபால அதன் அருகில் இல்லை. ஆட்டோவுக்கு மட்டுமா அவர் உரிமையாளர்? எங்கள் சங்கராஜா லேனில் உள்ள பதினைந்து வீடுகளில் ஒரே வரிசையில் இரண்டு வீடுகள் அவருடையது. அதில் ஒன்று மாடி வீடு. அதை பூட்டியே வைத்துள்ளார். மற்றொன்று மூன்று படுக்கையறைகள், பெரிய ஹோல் கொண்ட விசாலமான வீடு.
அதுமட்டுமா? களனியில் ஒரு பெரிய வீடும் அவருக்கு உண்டு. 52 வயதில் இவ்வளவு சொத்தை வைத்துக் கொண்டு அனுபவிக்கலாம் தானே என்று சொல்ல தெரிந்த நமக்கோ, அவரது மனம் இறுப்புக் கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் படும் வேதனை தெரியாது. எனக்கும் ஆரம்பத்தில் தெரியவில்லை. என் மனைவி சொல்லி தான் அவரைப் பற்றி தெரிந்துத் கொண்டேன்.
என் மனைவி பிறந்து வளர்ந்தது இந்த சங்கராஜா லேனில் தான். தினமும் தன் மகளை பார்க்காமல் இருக்க முடியாது என்று என் மாமியும், மாமனாரும் அடம் பிடித்ததற்காக வேண்டி கல்யாணத்திற்குப் பிறகு அதே லேனில் நாங்களும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொண்டோம்.
அதிலும் என் மாமனார் அவளின் மீது உயிரையே வைத்திருக்கிறார். அவள் ஏதாவது சொன்னாள் மறுபேச்சு பேசாமல் இருப்பார். அப்பாக்கள் தாழ்ந்து போவது பிள்ளைகளிடம் மட்டும் தான் போல.
அன்று ஜோதிபால எங்கள் வீட்டிற்கு வந்தார். அவிசாவளையில் அமைந்துள்ள அந்த இடத்திற்கு நாளை காலை தான் செல்வதாகவும், என் மனைவியையும், அவள் அம்மாவையும் உடன் வருமாறும் கேட்டுக்கொண்டார். மாமியும் கேட்டவுடன் கண்டிப்பாக வருவதாக உறுதிக் கூறினாள்.
அவர் போன பிறகு என் மனைவி ஜோதிபாலவின் சொந்தக் கதையை என்னிடம் விவரித்தாள். அது அவருக்கு மட்டும் சொந்தமான கதையல்ல. இவரை போன்ற பல பேர்களின் கதையென்று பிறகு
எனக்குப் புரிந்தது. குடிக்காரர்களுக்கு குடித்த பிறகு ஏற்படும் வெறியைக் காட்டிலும் குடிப்பழக்கமில்லாத ஜோதிபாலவுக்கு அவர் மனைவியின் முகத்தை பார்த்ததும் உள்ளுக்குள் தீ கசிய ஆரம்பித்து விடுமாம். தினமும் வீட்டில் இருவருக்கும் சண்டை சண்டை தான். ஜோதிபாலவுக்கு தன் மகள்கள் இருவர்களிடமும் கொள்ளை பாசம். சிறு வயதாக இருந்ததிலிருந்தே தங்கள் முன் சண்டை போட்டுக் கொண்டு நாட்களை கடத்திய பெற்றோர்கள், தங்களுக்கு விவரம் தெரிந்த பிறகும் அப்படியே
இருக்கிறார்களே என்று மகள்கள் இருவரும் கவலைப்பட்டார்கள். இருவருக்கும் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. வாழ்க்கை என்பதையே வெறுக்கத் தொடங்கினார்கள். இறுதியில் அக்கா,
தங்கை இருவரும் புத்தரின் கொள்கைககளில் ஆறுதல் கண்டு புத்த பிக்குவாக மாறி விட்டார்கள். பிள்ளைகள் மாறி சில நாட்களில் தாயும் அவர்களுடன் மடத்தில் போய் சேர்ந்து விட்டாள். ஜோதிபாலவும் யாரும் இல்லாதவர் ஆனார். தனிமை அவரை வாட்டி வதைத்தது. வாரத்தில் ஒருநாள் ஞாயிற்றுகிழமை மகள்கள் தங்கியுள்ள அவிசாவளை புத்த மடத்திற்கு அவர்களை பார்க்க செல்லும் ஜோதிபால மகள்களிடம் பேசி பழையபடி வீட்டிற்கு வந்து தங்க சொல்லுமாறு பக்கத்து வீட்டுக்காரர்கள்,
சில சமயம் தெரிந்தவர்கள் போன்றோரை உடன் அழைத்து சென்று பேசி பார்க்க சொல்வார்.
அதில் இந்த வாரம் அவரின் மகள்கள் இருவருடன் சிறு பிள்ளை பருவத்திலிருந்தே ஒன்றாக பழகி வளர்ந்த என் மனைவியை அழைத்து செல்ல வந்திருந்தார் ஜோதிபால. அவளுடன், அவள் அம்மாவும், நானும் உடன் சென்றோம்.

மழை விடாமல் பெய்தது. மடத்தில் ஒரு ஓரத்தில் நாங்கள் நின்றோம். மனதுக்குள் சொல்ல முடியாத ஒரு வித அமைதி. பிக்குவான ஜோதிபாலவின் மகள்கள் சொன்ன வார்த்தைகள் மட்டும் என்னுள்
ஒலித்துக் கொண்டே இருந்தது. ‘உலக வாழ்க்கை வாழ்வதால் தான் மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்து அதற்கு தகுந்தாற் போல எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ள
வேண்டியதாயிருக்கிறது. அதனால் பாவம் தான் மிச்சம். நாங்கள் தேர்ந்தெடுத்த இப்பாதை அதிலிருந்து விடுபட உதவுவதுடன் வாழ்க்கை என்றால் இதுதான் என்பதை கற்றுக் கொடுக்கிறது’.
தாய் தந்தையின் சண்டையை பார்த்து வளர்ந்த இவர்கள் உலகம், வாழ்க்கை, திருமணம் போன்றவற்றை வெறுத்து ஒதுக்கி அதில் கிடைக்காத அமைதியை இங்கு தேடுகிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.
மழை நின்றப்பாடில்லை. மனைவி அவள் அம்மாவுடன் ஒரு குடையிலும், நானும் ஜோதிபாலவும் ஒரு குடையிலும் மடத்திலிருந்து ஆட்டோ நிறுத்தியிருந்த இடத்திற்கு ஒன்றாக நடந்தோம். குடை பிடித்தும்
எங்கள் மீது மழைத்துளி விழுந்துக் கொண்டு தான் இருந்தது. அதில் ஒரு துளி சூடாக என் கை மீது விழுவதை போல உணர்ந்தேன். அது ஜோதிபாலவின் கண்ணீர் துளி என்று அவரின் முகத்தை பார்க்கமாலே புரிந்து கொண்டேன். எத்தனையோ முறை முயன்றும் தன் புதல்வனை அரண்மணைக்கு திருப்பிக் கொண்டுவர முடியாத புத்தனின் தந்தை சுத்தோதனரின் ஞாபகம் தான் அவர் அருகில் இருந்த போது எனக்கு வந்தது. அவரும் தந்தை தானே!
மாதத்தில் முதலாம் ஞாயிற்றுகிழமையான இன்று ஜோதிபாலவின் ஆட்டோ வழமைப்போல் எங்கள் தெருவிலிருந்த இன்னொரு குடும்பத்தை ஏற்றிக் கொண்டு புத்த மடத்தை நோக்கி செல்கிறது. சுத்தோதனரும் அன்றே இப்படியான முயற்சிகளை செய்திருப்பார் தானே!

முற்றும்.

📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!