ஒரு நாள் போட்டி கதை: அலேக்ஸா காட்டில் அன்பு நண்பர்கள

by admin 2
50 views

எழுதியவர்: கீதாராணி. இரா

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனசரோடு!

“அடேய்…! கன்னியப்பா நீ நல்லா இருப்பே…? மாட்டே…! காட்டுக் போகலாம், காட்டுக்கு போகலாம்னு இப்புடி டைனோசர் இருக்க காட்டுக்கு கூட்டி வந்திருக்கயே உனக்கே நியாயமா இருக்கான்னு சொல்லு?

        ஆறு வருஷம் சைட் அடிச்சு அப்பன் ஆத்தா கால்ல விழுந்து இப்பதான் கலியாணம் பண்ணேன் டா. இரண்டு மாசத்துல காட்டுலே ஆராய்ச்சி அது இதுன்னு படத்துல பாத்த டைனோசரை நேரிலே பாக்க வெச்சிட்டானே இந்த நாசமாப்போனவன்…!

      என் பொண்டாட்டி என்னையே காணமே தவியா தவிப்பாலே…! காடு வெட்டி முனியா எனையே இந்த காட்டுலே இருந்து காப்பாத்து, உனக்கு படையல் போடறேன். அட கருப்பா…!” என்று ஆரம்பித்த காளியப்பனின் கன்னத்தில் ஓங்கி ஒன்று விட்டான் கன்னியப்பன்.

     “வாயை மூடு நாயே…! மொகரையப்பாரு… நா கூட்டியாந்தனாமே கதையைக் கேளுடா செவளை, இந்த நாய் தான் கல்யாணத்துக்கு முன்னாலே இருந்து, அடேய்…! எனக்கு கலியாணம் ஆகப்போகுது. இந்த அக்ரி படிச்சு வேலையும் கிடைக்கலே, விவசாயம் பண்ணி ஏதும் சம்பாதிக்க முடியலே, அமேசான் காடு மாதிரி அலேஸ்கா காடுன்னு ஒன்னு இருக்கு, அங்க இருக்கிற மூலிகை, கல்லைக் கூட தங்கமா மாத்துதாமா… நீயும் வாடா போகலாம்னு சிவனேன்னு கிடந்தவனை உசுப்பி விட்டுட்டு, இப்ப என்னை சொல்றான் பாரு.

       காசு இல்லாம ஆத்தா நகையை புடிங்கி வித்திட்டு ஏரோப்பிளேன் ஏறி எங்க கூட்டியாந்திருக்கான்னு பாரு. நான் நாசமாப் போகமாட்டேன் டா, நீ தான் போவே…” என்று கன்னியப்பனும், காளியப்பனும் மாறி மாறி அடித்துக் கொள்ள, மூன்றாவதாக இருந்த செவளை என்று அழைத்தவனிடம் எந்த சத்தமும் இல்லை.

      ஒருவழியாக இவர்களே சமாதானமாகி நிமிர்ந்து பார்க்க, அவன் வாயைத் திறந்து கொண்டு எதிர்ப்புறம், பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

     அப்படி எதைப் பார்க்கிறான் என்று இவர்கள் இருவரும் திரும்பிப் பார்க்க ” அம்மே…!”என்று இருவரும் ஒன்றாக கத்திக் கொண்டு ஓடிப்போய் செவளைக்கு பின்புறம் ஒளிந்து கொண்டனர்.

      எதிர் புறத்தில், மிகப்பெரிய கழுத்து நீண்டு,யானை கால்களோடு மஞ்சள் நிறத்திலிருந்த ‘அதை’ப் பார்த்து பயந்து போன காளியப்பன் “சோலி முடிஞ்சு.. கல்யாணம் பண்ணியும் வாழ முடியலையே…” அவன் கதற, அவனை எட்டி உதைத்த கன்னியப்பன் ” நீ கத்தினதாலே நானும்  பயந்தேன். படிக்காதவனே இது தவர உண்ணி டா… இலை தழை தான் தின்னும். இது பேரு கூட ஹெர்பிவர்ஸ்னு நினைக்கிறேன். உன் ஒப்பாரிய அப்புறம் வையி. இப்ப ஒதுங்கு…” அவர்களிடம் பேசியபடியே செவளையை ஒதுக்கி விட்டு முன்னே வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

       “ஏண்டா நிசமாலுமே இது இலை தான் தின்னுமா…?” முதன் முறையாக தன் திருவாய் திறந்து செவளை கேள்வி கேட்க, “அட! படிச்சும் படிக்காதவனே…! போனுலே ரீல்ஸ் மட்டும் பாக்கக் கூடாது. இது மாதிரி எல்லாம் இருக்கான்னும் பாக்கணும். அதுவும் தெரியலையா… நம்ப ஜூராசிர்பார்க் படமாது நினைப்பு வரணும்.

     நினைவு இருக்கா டூரிங் டாக்கீஸ்ல எட்டு வாட்டி படம் பார்த்த இல்லே… அதை மண்டைதட்டி ரீவைண்ட் பண்ணு. தெளிவா தெரியும்.” என்றபடியே அருகிலிருந்த பெரிய கிளையை ஒடித்து அதற்கு முன்பு ஆட்ட, அது நின்ற இடத்திலிருந்தே தன் நீண்ட கழுத்தை நீட்டி வாங்கிக் கொண்டு மெதுவாக மென்றபடி அசைந்து அசைந்து சென்றது.

        செவளையும், காளியப்பனும் அதை பார்த்து அதிசயித்துப் போனார்கள். ஹெர்பிவர்ஸ் சென்றதும் இவர்களிடம் திரும்பிய கன்னியப்பன், “ஆஹா… பயலுக்களுக்கு படிச்சது நினைவு வந்திருச்சா..! இல்லே படம் நினைவு வந்துச்சா? எதுவா இருந்தாலும் சந்தோஷம் டா மாப்பிள்ளைகளா…” அவர்கள் இருவரின் தோள் தட்டி பாராட்டியவனை காண முடியாது இருவரும் தலைகுனிந்தார்கள்.

     உண்மை அவர்களுக்கு மட்டும் தானே தெரியும். எட்டு முறையும் டூரிங் டாக்கீஸ் போனது படம் பார்க்க இல்லை. காளியப்பன் வனஜாவையும், செவளை அவன் தங்கை கிரிஜாவையும் பார்க்க என்று.

        இருவரும் ஒருவரை ஒருவர் திருட்டுத்தனமாக பார்த்தபடியே அவனோடு இணைந்து நடக்க… சற்று தொலைவில் ” உர்…ர்ர்…உர்…” என்று சத்தம் கேட்கவும் பயந்து போய் அருகில் இருந்த பெரிய மரத்திற்கு பின் மூவரும் ஓடிப் பதுங்கினர்.

          ஒரு குள்ளமான, இறக்கைகள் சொருகியது போன்ற குட்டை வாலுடைய டைனோசரை, சற்று வளர்ந்த ஒடக்கானைப் போன்ற பின்ங்காலும், கைகள் போன்ற முன்ங்கால்களோடு ஒன்று குதித்து குதித்து துரத்திக் கொண்டு வந்தது.

     அதைக் கண்ட செவளை ” நான் ஏதோ பெரிசா இருக்கும்னு நினைச்சேன். குட்டைகாட்டுலே இருக்குமே பெரிய ஒடக்கான் அது மாதிரி போல…” என்று அவன் சிரித்து முடிப்பதர்க்கு முன் செவளை சொன்ன, அந்த ‘பெரிய ஒடக்கான்’ தனக்கு முன்னால், தன்னை விட இரண்டு மடங்கு எடை கூடிய அந்த டைனோசரசின் மீது பாய்ந்து ஏறி கழுத்தைக் கடித்துக் குதறியது!

       அதைக் கண்டதும் மூவரும் வெலவெலத்துப் போயினர். “ஊருக்கு உயிரோட போவமா மச்சான்…” இது செவளை.

      ” எனக்கு ஏழரைச்சனி நடக்குதுன்னு அப்பத்தா அப்பவே சொல்லுச்சு. நான் கூட, உங்க ரெண்டு பேர் கூடவும் சேரதாலே தான் சொல்லுதுன்னு நினைச்சேன். அதே மாரி என் பொண்டாட்டியும் உங்களைக் காட்டித்தான், அளவா வெச்சுக்க சொன்னா,, நான் தான் கேட்கலை. இப்ப தெரியுது.

        ஆண்டி சோசியன் எனக்கு ஏழரைன்னு சொல்லி இருந்தாலும் சொல்லி இருப்பான்…” இது காளியப்பன்.

      பேசிவிட்டு அவன் திரும்பி பார்க்க, இருவரும் முறைத்து வண்ணம் நின்றனர். அப்போதுதான், தான் வாய் விட்டு விட்டோம் என்பதைப் புரிந்து கொண்டு பம்மி விட்டான்.

      அதற்குள் அந்த பெரிய ஒடக்கான்,  முதுகில் இறகு வைத்த டைனோசரைத் தின்று முடிந்திருந்தது.

      “ஆத்தாடி…” அதைப்பார்த்த நொடியே வாய்விட்டு அலறினான் செவளை. சத்தம் வந்த திசையில் திரும்பியது அது!

      மூவருக்கும் இதயம் வாய் வழியாக வந்து விடும் போலானது. மூச்சு கூட விடாது அப்படியே அமர்ந்து விட்டனர்.

        அதற்குள் முதுகில் விசிறி வைத்தது போன்ற ஒரு டைனோசர் ஓடி வர, அதனிடமிருந்து தப்பிக்க நினைத்து ‘கங்காரு’ போல குதித்து குதித்து ஓடி விட்டது.

        முதுகில் விசிறி வைத்திருந்த டைனோசர் சற்று பெரியது. அது ஓடும் போது பூமி அதிர்வது போல் இருந்தது.

        இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த செவளை, ” டேய் மச்சான்… எங்க ஆத்தாளுக்கு நான் ஒரே பிள்ளை.” என பேச ஆரம்பிக்க, அவனை இடைமறித்த காளி ” ஏண்டா, இன்னொரு பிள்ளை பெத்துக்க வேண்டாம்னு எங்க ஆத்தாளுங்க சொல்லிட்டாங்களா என்ன..! என்றான்.

      எரிச்சலான செவளை ” நாரப்பயலே…! தலி கட்டினவளை நல்லா வெச்சுக்க வேண்டி அம்புட்டு பேரையும் இக்கட்டுலே மாட்டி உட்டுட்டு… இப்ப நையாண்டி பண்றியா? வாயை மூடி சும்மா இரு. மண்ணை தங்கமாக்குறேன்னு நீ சொல்லும் போதே வேண்டாம்னு போயிருந்தா எனக்கு இந்த நிலை வந்திருக்காது…

         அப்பவே சொன்னேன்… இது எல்லாம் சித்த ரகசியம்னு… நீதான் டா கேட்கவே இல்லே. என்னை நம்பி என்னைப் பெத்தவளும், கை விட மாட்டேன்னு காதலிச்சவளும் காத்திருக்க… உங்கூட வந்து சீரழியறேனே…! யாரு காப்பாத்துவா? என்னை யாரு காப்பாத்துவா ?” சீரான ராகத்தில் பாடி அழுதான் செவளை.

      அவனை கொலைவெறியோடு  முறைக்கும் கன்னியப்பனை அவன் கவனித்திருந்தால் மேற்கொண்டு பேசியிருக்கவே மாட்டான்.

      இதை கவனித்த காளியப்பன் வேறுபக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டான். செவளை தன் அழுகயை யாரும் சமாதானம் செய்யாதது கண்டு அவனே ஓய்ந்து போய், நிமிர்ந்து பார்த்தான்.

         எதிரில் கண்கள் சிவக்க நின்ற கன்னியப்பன் தெரிய, ” ஏண்டா மச்சான்…?” என்றான் கேள்வியாக.

      அவன் பதிலேதும் கூறாது வெறிக்கவும் வார்த்தையை விட்டு விட்டோம் என்று புரிந்து கொண்டான். திருட்டு முழியுடன் இவன் அவனைப் பார்க்காது திரும்ப, வெடுக்கென்று அவன் தலையை திருப்பியவன் ” என்னடா சொன்னே? காதலிக்கிறயா…! அது யாரு? எத்தனை நாளா நடக்குது இந்த கூத்து? படிக்கும் போதிருந்து காதல் கலியாணம் எல்லாம் வேண்டாதததுன்னு ரெண்டு பேரும் எனக்கு சொல்லிட்டு, அவன் என்னடான்னா எனக்கேத் தெரியாம பண்ணையார் மவ வனஜாவை கரெக்ட் பண்ணி கட்டிக்கிட்டான்.

      நீ என்னடான்னா லவ்வு பண்றேன் நிக்கிறே. என்னதான்டா நடக்குது இங்க. ஐயோ! உங்க ரெண்டு பேரையும் இணைபிரியாது இருந்து சுஜாவே வேண்டாம்னு சொன்னேனே… இனி நான் என்ன பண்ணுவேன். கன்னி, கன்னின்னு நீங்க கூப்பிடும் போதே நான் தெளிஞ்சிருகாணும். அந்த கன்னியாகுமரி மாதிரி என்னை நிக்க வைக்கப் போறீங்கன்னு. இவ்வளவு மோசமானவங்களை நான் பார்த்ததே இல்லை.  நீங்க  நண்பர்களே இல்லடா. இனி என் முகத்திலே முழிக்காதீங்க…” கோபாவேசமாக பேசி விட்டு முதுகில் பையை மாட்டிக் கொண்டு எதிர் திசையில் போய் விட்டான் கன்னியப்பன்.

       இருவரும் மாறி மாறி கன்னியப்பா, கன்னி என்று கதறக் கதற அவர்களை கைவிட்டு விட்டு விட்டுச் சென்று விட்டான். திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகள் போல் இருவரும் திருதிருவென விழித்தபடியே இருக்க மீண்டும் “ர்ர்ர்…. ர்ர்ர்…” என்ற சப்தத்துடன் பூமி அதிர, பீதியில் நண்பன் விட்டுப்போன கவலையை மறந்து, உயிர் பயத்தில் பாய்ந்தனர் மரத்திற்கு.  அதில் வேகமாக ஏறத்தொடங்கினர்.

       நிற்காமல் ஏறிவர்கள் சில நிமிடங்களில் மரத்தின் பாதி தூரத்தை கடந்து விட்டனர். அதற்குள் இலேசாக இருட்டவும் தொடங்கி இருந்தது. தூரத்தில் யாரோ ஒரு மனிதனின் அலறலும் கேட்டது!

      இருவரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டனர். தங்களைப் போன்றே யாரோ‌ ஒருவன் இங்கு இருக்கிறான் என்று நினைத்து மகிழ்ச்சியுடன், கண்களுக்கு கீழே கை கொடுத்து சப்தம் வந்த திக்கில் உற்றுப் பார்க்க. முதுகில் பையோடு தலைதெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தது கன்னியப்பன்!

       அவனுக்கு சற்று தள்ளி மிக பிரமாண்டமாக வளர்ந்திருந்த டைனோசர், மற்றொரு டைனோசர் கூட்டத்தையேத் துரத்திக்கொண்டு வந்தது!

       பூமி அதிர்வில் அவர்கள் அமர்ந்திருந்த அந்த பிரமாண்ட மரமே ஆடியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த காளியப்பன் “அட! கொலகாரப்பாவி…இந்த நாய் கோவிச்சிட்டு போறேன்னு, நம்மலே கொல்ல பிளான் பண்ணி, அந்த டைனோசரை கூட்டிட்டு வராண்டா… மனசிலே வெச்சு பழி வாங்கிட்டான் பாருடா…” என்று அலறினான்.

         இதற்குள் செவளை இரண்டு கிளைகள் தாவி கீழே இறங்கி போனபடியே “லூசு மாதிரி பேசறதே நிறுத்து டா… அவனே உயிரைக் கையிலே புடிச்சு ஓடியாறான், இவன் வேற பினாத்திட்டு…”காளியப்பனை திட்டி விட்டு கீழே வந்து தன் கால்களால் கிளையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு காத்திருந்தான்.

        தலைதெறிக்க ஓடி வந்த கன்னியப்பன் “புடிங்கடா, புடிங்கடா…” என்று தொண்டை கிழிந்து போகும் அளவிற்கு கத்தினான்.

       “எது புடிக்கிறதா…? வெந்த பய அத்த பெரிய டைனோசரை நாங்க ரெண்டு பேர் புடிக்க முடியுமா? நான் சொல்லுலே இவன் பிளான் பண்ணி தான் நம்பலை மாட்டி விடுறான்னு…” காளி கத்த, “விளங்காதவனே… என் கையை புடிக்க சொன்னேன் டா…” என எகிறி குதித்தவனை, ஏற்கனவே காத்திருந்த செவளை தலை கீழாக தொங்கியபடியே பிடித்தான்.

         கன்னியப்பன் எப்படியோ தக்கி முக்கி மரத்தில் ஏறிய நொடி மரத்திற்கு முன்னே வந்தது நின்றது அந்த ராட்சச டைனோசர்!

       காளியப்பன் உட்கார்ந்த இடத்திலேயேவயிறு அலாசுவதை உணர்ந்தான். அதற்குள் கன்னியப்பனனும், செவளையும் சத்தம் காட்டாது காளியப்பன் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

         அந்த ராட்சச டைனோசர் மரத்தினடியில் ஒரு டைனோசர் கூட்டத்தையே வேட்டையாடிக் கொண்டிருந்தது.

      வாயில் இரத்தத்துடன் ஒவ்வொரு முறை அது நிமிரும் போதும் மூவரும் பயத்தில் நெஞ்சைப் ‘ஹக்’ என்று பிடித்துக் கொண்டனர்.

        கன்னியப்பன் முதுகிலிருந்த பையில் அதிர்வு கேட்கவும் அலறிப் புடைத்துக்கொண்டு அதை எடுத்தான். அவனின் அலைபேசி நல்லவேளையாக அது அலறவில்லை. இதுவரை இருந்த டவர் பிரச்சினையால் மூவரும் அப்படி ஒன்று இருப்பதையே மறந்து போயிருந்தார்கள். மரத்தின் உச்சிக்கு வந்த பிறகுதான் அது நான் உள்ளேன் ஐயா என்கிறது.

      வேகமாக மூவரும் தங்களின் அலைபேசியினை அமைதிப்படுத்தி விட்டு, குத்துக்காலிட்டு அமர்ந்த கொண்டனர். விடிய விடிய மரத்தை சுற்றி வேட்டையில் இருந்த டைனோசர் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை.

       மூவரும் கண் மூடக் கூட பயந்து போய், அமர்ந்த நிலையிலேயே நடுங்கிக் கொண்டு இருந்தனர். ஒருவழியாக லேசான மஞ்சள் வெயில் தலைகாட்ட ஆரம்பித்து.

        ராட்சச டைனோசர் மோப்பத்தால்  ஆகாரம் இருப்பதை உணர்ந்து  மெதுவாக மரத்தை  தன் முட்டை கண்களால் தேடத் தொடங்கியது.

      அதற்கு வேலை வைக்காமல் மாட்டினர் மூவரும். அந்த நேரம் சரியாக செவளையின் செல் அலாரத்தை அடித்தது. “நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு நாளு தூங்க மாட்டே…

மோதி பாரு வீடு போயி சேர மாட்டே…” அத்தோடு சேர்ந்து இவர்கள் மூவரும் அலற… இவர்களைப் பார்த்து விட்டு அருகே சென்ற டைனோசர், செல்லைப் பார்த்து விட்டு ஒரே ஓட்டமாக காட்டிற்குள் ஓடி மறைந்தது!

       மூன்று நண்பர்களுக்கும் இப்போதுதான் மூச்சே வந்தது. கன்னியப்பன் தன் செல்லில் அதைப் பற்றிய விபரங்களை தேட அதன் பெயர்
‘டி ரெகஸ்’ ‌என்று தெரிந்து ஆச்சரியம் கொண்டான். எப்படி அது தங்களை விட்டு சென்றது என்றே அவர்களுக்குப் புரியவில்லை. மெதுவாக மரத்திலிருந்து இறங்கி வீட்டைக் நோக்கி நடையைக் கட்டினர்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!