ஒரு நாள் போட்டி கதை: கடல் மீன்கள் – சற்று பெரியது….

by admin 2
97 views

எழுதியவர்: குருமூர்த்தி

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் சுறாவோடு !

எனக்கு நீச்சல் தெரியாது, தண்ணியில் கண்டம். அதனால் சுறாவை பற்றி அதிகம்
ஞானமில்லை. ஆனாலும், அந்த சுறா(1974), ஆங்கில படம் மட்டும் பார்த்திருக்கிறேன்.
அந்த சுறா படம் வந்தபோது, சிறு வயது, அவ்வளவு விவரம் பத்தாது. சில வருடங்கள்
கழித்து, உலக விஷயங்கள் புலப்பட தொடங்கியபோது படம் பார்த்தது.
நண்பர்கள் எல்லாம் சேர்ந்து, வா, ஒரு ஆங்கில படம் போகலாம் என்று அழைத்தார்கள்.
அப்போதெல்லாம், ஆங்கில படங்கள் பற்றி, நமக்கே உரித்தான ஒரு கற்பனை இருக்கும்
என்பதனால், அப்பாவிடம் யார் திட்டு வாங்குவது என்று பயந்தேன்.
இருந்தாலும், நண்பர்கள் , சென்சார் சான்றிதழை காட்டியதால், ஒத்து கொண்டேன்.
படம் ஆரம்பித்து, முதல் சில காட்சிகளில், அந்த சிறுவன் மரணிக்கும் போது, அந்த 70mm
திரையில் பார்த்தபோது, பயம் பிடித்து கொண்டது.
படம் போக போக, அடுத்து வந்த காட்சிகளில், அந்த சுறா மனிதர்களை திண்பது
விலாவாரியாக காட்டினார்கள். எனக்கு பயம் ஜாஸ்தியாகி, “வீல்” என்று ஒரு அலரல்
போட்டேன்.
பக்கத்தில் இருந்தவர்கள், டென்ஷன் ஆகி, “சின்ன பசங்கள்லாம் ஏம்பா, இந்த படத்துக்கு
விடறீங்க என்று குரல் கொடுக்கவே, நண்பர்கள் சமாதானம் செய்தார்கள். “சாரி சார்”
என்று சொல்லிவிட்டு, என்னை பிடித்து கொண்டார்கள்.
“டேய், ஏன்டா இப்படி மானத்தை வாங்கறே, கம்முனு இருடா, இன்னும் கொஞ்ச நேரம்
தான், வீட்டுக்கு போயிடலாம் என்றார்கள் . கண்ணை கர்சீப்பால் மூடிக்கொண்டு சும்மா
இரு, என்றார்கள். நானும் அப்படியே இருந்தேன்.
படத்தில், கிளைமாக்ஸ் நெருங்க, என்னை இப்ப பாருடா, முடிய போவது. மிஸ்
பண்ணாதே, என்று தூண்டி விட்டார்கள். கூடவே நான் கத்தாதபடி என் வாயை அழுத்தி
பிடித்து கொண்டார்கள். கடைசியில், மேலும் பலி கொடுத்து, ரொம்ப நேர
போராட்டத்தின், அந்த சுறா வெடித்து சிதறியது. அந்த கடல், வெள்ளி திரை எல்லாம் ஒரே ரத்தம்.

காட்சிகளின் அதிர்ச்சியோடு, கூடவே இவர்கள் நான் மூச்சு கூட விட முடியாதபடி பிடித்து
கொண்டதால், நான் மூர்ச்சையானேன். பின்னர் தண்ணீர் தெளித்து என்னை வீட்டில்
கொண்டு விட்டார்கள்.
அந்த அதிர்ச்சியோடு தூங்க போனதால், ராத்திரி அந்த சுறாவை கனவில் வந்து பயமுறுத்தியது.
தூங்கி கொண்டிருந்த என்னை, கொசு கடித்து வைக்க, அந்த சுறா என்னை கடிக்க
வருவதாக நினைத்து, ஓங்கி ஒரு அடி போட்டேன். ரத்தம் சிதறியது.
வீல் என்று ஒரு அலரல் போட்டு, விழித்து கொண்டேன். உடம்பெல்லாம், இல்லை
இல்லை, கையில் ஒரே ரத்தம்.
சுறா என்னை கடிச்சுடித்து என்று ஓவென, அலறினேன்.
பயந்து போய் எழுந்து வந்த அம்மா, இந்த கொசு கடிச்சதுக்கு இந்த பாடா… என்று கத்தினாள்.
இந்த வேண்டாத படத்துக்கெல்லாம் போகாதேன்னு சொன்னா கேட்கிறயா, உன்
பிரண்ட்ஸ் வரட்டும், ஒரு கை பார்க்கிறேன் என்று ருத்திரதாண்டவம் ஆடினார்.
அதற்கு பிறகு எனக்கு ஒரு இரண்டு நாள் நல்ல ஜுரம். என் பிரண்ட்ஸ் யாரும், ஒரு வாரம்
வீட்டு பக்கம் வரவில்லை.
நாம ஏதோ, இங்கே, “டுஷும், டுஷும்” படங்களை, ரசித்து கொண்டிருந்த காலத்தில்,
இந்த மாதிரி கடலில் போய் ஒரு சுறாவை வைத்து, அதற்கு நாலு பேரை பலி கொடுத்து,
எப்படித்தான் படம் எடுக்கிறார்களோ. அந்த சுறா ரப்பரில் செய்தததாமே, ஆச்சர்யம்தான்.
ரப்பர் பொம்மையாக இருந்தாலும் கடி என்றால் கடித்ததே.
நல்ல காலம் அந்த சுறா தமிழில் வந்தபோது பார்க்கவில்லை..

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!