எழுதியவர்: தஸ்லிம்
தேர்வு செய்த படம்: படம் 4
ரயிலின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த நிகாஷாவிற்கு வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததில் பட்டுச் சிதறிய மழை நீர் கூட அனலாக தகித்தது. அமர்ந்திக்கவே முடியாமல் உள்ளுக்குள் எரிமலையே கொதித்துக் கொண்டிருந்தது. அருகில் இருப்பவர்கள் அறியாமல் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை மறைப்பது வேறு பெரும் பாடாக இருந்தது. சிந்தனைகள் எங்கெங்கோ பயணித்து கொண்டிருந்தது. முப்பது நிமிடங்களுக்கு முன்பு வரைக்கும் இவ்வளவு அலைப்புறுதல் இல்லை. அதுவரையிலும் பதட்டம் மட்டுமே நிறைந்திருந்தது. இப்பொழுது உலகமே வெறுத்து போனது போல மனமெல்லாம் பாரமாகி கிடந்தது. தன் மேல் தான் தவறோ? தன்னுடைய உணர்வுகள் தான் பொய்யா? கண் இருந்தும் என் எதிரில் நடந்ததை முழுவதுமாக அவதானிக்க தவறி விட்டேனா?” என்று
ஆயிரமாயிரம் குழப்பங்களை உள்ளுக்குள் போட்டு மறுகிக் கொண்டிருந்தாள். தன் அருகில் அமர்ந்திருந்த தோழியை ஓரக் கண்ணால் பார்க்க அவளோ இந்த உலகத்தில் தன்னைத் தவிர வேறு
யாரும் இல்லை என்பது போல தனக்குள்ளே சிரித்துக்கொண்டு சந்தோஷமாக அலைபேசியில் தட்டச்சு செய்து கொண்டு இருந்தாள்.
நிகாஷாவின் சிறு வயது தோழி தான் ஷன்மிதா. பள்ளியிலிருந்து கல்லூரி வரையிலுமே ஒரே வகுப்பில் படிக்கும் ஆருயிர் தோழிகள். இப்பொழுது இளங்கலை படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு சென்று
கொண்டிருக்கிறார்கள். ஷன்மிதாவை இத்தனை சந்தோஷமாக 30 நிமிடங்கள் முன்பு பார்த்திருந்தால் அதே அளவு இவளுமே மகிழ்ச்சியாக இருந்திருப்பாள். ஆனால் இப்பொழுது அவளால் சந்தோசப்பட முடியவில்லை. அவள் கண்ட காட்சியை அவளால் நம்பவே முடியவில்லை. தான் இவளிடமாவது மனதில் உள்ளதை சொல்லி இருக்க வேண்டுமோ என்று இப்பொழுது நினைத்து கலங்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள்.
அரை மணி நேரத்திற்கு முன்பாக அவள் பார்த்த விஷயம் கண் முன் நிழலாடியது. ஷன்மிதாவிடம் கண்ணில் காதல் பொங்க ஒருவன் ரோஜாவை நீட்டிக் கொண்டிருந்தான். அவளும் சந்தோஷமாக அதை
பெற்றுக் கொண்டிருந்தாள். இவை அனைத்தையும் தண்ணீர் வாங்குவதற்காக வெளியில் இறங்கும்போது பார்க்க நேரிட திகில் அடைந்து போய் அப்படியே அவர்கள் கண்களுக்கு தெரியாமல்
ஒதுங்கிக் கொண்டாள் நிகாஷா. அவளால் அவள் கண்களையே நம்ப முடியவில்லை.
அவன் பெயர் எழில். ஒரே வகுப்பு தான் மூவரும். கல்லூரி தொடங்கிய முதல் நாளில் இருந்தே அவனின் மீது அலாதி பிரியம் அவளுக்கு. எங்கு எப்போது எந்த நொடியில் அவன் மீது காதல் வந்தது என்று
எல்லாம் அவளுக்கு தெரியாது. ஆனால் அவனை அவ்வளவு பிடிக்கும் அவனிடம் தன் மனதை வெளிப்படுத்த நினைத்தாலும் அவளுக்கு அது முடியாமலேயே கல்லூரி படிப்பும் முடிந்துவிட்டது. ஷன்மிதாவும் எழிலும் நெருங்கிய நண்பர்கள். இவள் அவனிடம் சிறு புன்னகையுடனே முடித்துக் கொள்வாள். அவனும் அவளிடம் அப்படித்தான் பெரிதாக அவர்கள் பேசிக் கொள்வதில்லை. ஆனால்
அந்த புன்னகை அவன் அவளுக்காகவே மட்டுமே கொடுக்கும் புன்னகை. அப்படித்தான் அவள் நினைத்து இருந்தாள். இப்பொழுது சொல்லவேண்டும் அப்பொழுது சொல்லவேண்டும் என்று நினைத்துக்
கொண்டு இருந்தாலே தவிர சொல்லக்கூடிய தருணங்களை அவள் ஏற்படுத்திக் கொள்ளவே இல்லை. அதுவே இயல்பாக அமைந்தாலும், எங்கு அவன் இது சரிவராது என்று ஏதேனும் சொல்லிவிடுவானோ
என்று பயத்தாலையே ஒவ்வொரு நாளையும் விரயம் ஆக்கினாள். இறுதியில் மூன்று வருடமுமே முடிந்து விட்டது. இன்றைக்காவது தன் காதலை அவனிடம் வெளிப்படுத்திட வேண்டும் என்றே நினைத்துக்
கொண்டிருந்தாள். தன் நெருங்கிய தோழியிடம் கூட அதை பற்றி வெளிக்காட்டி இருக்கவில்லை. இவளிடம் சொன்னால் எங்கு எழிலிடம் சொல்லி விடுவாளோ என்று பயத்தாலேயே அதையும்
மறைத்து இருந்தாள். இப்பொழுது முழுதும் முடிந்து விட்டது.
நடந்ததை நினைக்க நினைக்க நெஞ்சம் எல்லாம் வலித்தது. முதுகலை படிப்பை எப்படியும் இங்கு வந்து படிக்க வேண்டும் அப்பொழுது அவள் அவனிடம் தன் மனதில் உள்ளதை சொல்ல வேண்டும் என்று
நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அனைத்தும் கனவாகவே முடிந்து போனது. அதற்கு மேலும் அங்கு அமர முடியாமல் எழுந்து செல்ல போனவளை அதுவரையிலும் அலைபேசியை உலகம் என்றிருந்த ஷன்மிதா, “என்னாச்சு நிகாஷா? எங்க போற?” என்று கேட்க..
“பாத்ரூம்” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை கூட பார்க்காமல் சென்று விட்டாள். அவள் சென்றதுமே ஷன்மிதா ஒரு எண்ணுக்கு அழைக்க அந்தப் பக்கமும் அலைபேசி எடுக்கப்பட்டது. அவர்கள்
ஏதேதோ பேசிக் கொண்டிருக்க இங்கு கழிவறை சென்ற நிகாஷா திரும்பி வரும்போது, “நோ எழில். இப்போ வேணாம்” என்று சொல்வதை கேட்ட நிகாஷாவிற்கு கண்கள் எல்லாம் இருட்டிக்
கொண்டு வருவது போல இருந்தது. மயக்கம் வருவது போல தள்ளாடியவளை சட்டென்று யாரோ கண்களை மூடுவது போல இருக்க ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. ஏற்கனவே அழுத்தம் தாங்க
முடியாமல் இருந்தவள் அப்படியே அந்த உருவத்தின் மீது மயங்கி சாய்ந்தவளை, “ஹேய் நிகாஷா” என்ற கலக்கமான குரல் ஒன்று கேட்க அந்த மயக்க நிலையிலும் அவன் குரலை அடையாளம் கண்டு, “எழில்”
என்றதோடு கண்களை மூடிவிட்டாள்.
அவள் கண் விழித்து பார்க்கும் போது அவள் எதிரில் கலங்கிய முகத்தோடு அமர்ந்திருந்தான் எழில். தான் கனவு தான் காண்கிறோமா என்று தன் கண்களை கசக்கி கொண்டு பார்க்க இல்லை உண்மையாகவே எழில் அவளை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தான். எழில் என்று அழைத்த வண்ணம் கண்களில்
கண்ணீரோடு அமர்ந்திருந்தவளை ஒரே எட்டில் இறுக அணைத்திருந்தான். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பொழுது தான் அவளுக்கு ஷன்மிதா ஞாபகமே வந்தது சட்டென்று திரும்பி
அவளை பார்க்க அவளோ சிரித்துக்கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனை விலக்க அவள் முற்படும்போது அவனே அவளிடம் இருந்து விலகி அவள் கன்னங்களை இரு கைகளிலும்
ஏந்தியவன், “சாரி நிகாஷா அண்ட் ஐ லவ் யூ” என்று சொல்ல அவள் திகைத்து போய ஷன்மிதாவைப் பார்க்க, “ஏய் லூசு எதுக்கு இவ்வளவு பயம் உனக்கு.. அவன் உன்ன தான் லவ் பண்றான்.. நான் தான் சும்மா
உன்ன பிராண்க் பண்றதுக்காக வேண்டி என்கிட்ட ரோஸ தர சொன்னேன். நீங்களும் லவ்வ சொல்ற மாதிரி இல்ல. அதான் நானே இப்படி ஒரு பிளான் பண்ணேன். அப்பப்பா அதுக்குள்ள எவ்வளவு
அழுகை மயக்கம் வர அளவுக்கு” என்று கிண்டல் தொனியில் கேட்க அப்போதுதான் அவளுக்கு நடந்த அனைத்தும் என்னவென்று புரிய எழிலை திரும்பி பார்க்க அவனும் அவளை நோக்கி வீசும் அதே புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இருவர் விழிகளும் நேர்கோட்டில் இருக்க மீண்டும் எழில், “ஐ லவ் யூ நிகாஷா” என்று சொல்லவும்.. “நீங்களும் அவ கூட சேர்ந்து என்னை பயம்
காட்டிட்டிங்கல்ல” என்று விசும்பலுடன் அவன் மார்பிலேயே நான்கைந்து அடிகளை கொடுத்தவள், “லவ் யூ டூ” என்று சொன்னவள் வெட்கப் புன்னகையுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.