எழுதியவர்: நா. பத்மாவதி
காதல் பலவிதம் என்று கூறப்படுவதற்கு காரணம், அது பல்வேறு உணர்வுகளின் சங்கமமாக இருப்பதாலும், மனிதர்கள் காதலை வெவ்வேறு கோணங்களில் அனுபவிப்பதாலும் தான். பொதுவாக, காதல் யார் மீதும் எவர் மீதும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
அன்பு,பாசம், நிறைந்தக் காதல்
இது நிஜமான, தியாகம் செய்யத் தயாராக இருக்கும் காதல். பெற்றோர் குழந்தைகளை நேசிப்பது, குழந்தைகள் பெற்றோரிடம் பாசமாக இருப்பது மற்றும் உற்றாரோடு அன்போடு எந்த எதிர்பார்ப்பும் இன்றி வளரக்கூடிய இதுப் போன்ற காதல்கள் இதில் அடங்கும் .
ஆண், பெண் – இடையேயானக் காதல்
இது ஒரு ஆணும் பெண்ணும் அல்லது இருவரும் ஒருவரையொருவர் இருவராக நேசிக்கும் காதல். நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை என்ற நிலை. இதில் உடல்ரீதியான ஈர்ப்பும், மனதின் கனவுகளும் இதில் அடங்கும்.
நட்புக் காதல்
“உடுக்கை இழந்தவன் கைப் போல” என்ற வள்ளுவன் வாக்கிற்க்கு இணங்க நண்பர்களிடையே காணப்படும் உண்மையான அன்பு, தியாகம், காதல். இது விசுவாசத்தையும், நன்மதிப்பையும் அடிப்படையாகக் கொண்டது. உ.தா. கர்ணன் துரியோதனன் நட்பு.
சுயக் காதல்
நம்மை நாமே காதலித்தல் நமக்கே உரிய மதிப்புடன் வாழும் உணர்வைத் தரும். நம்மை நாமே புகழ்தல், தட்டிக் கொடுத்தல் போன்றவை பார்ப்பவர்களுக்குத் தற்பெருமையாகத் தோன்றினாலும், இவை ஒழுங்காக இருந்தால், ஆரோக்கியமான மனநிலையை உருவாகும்.
வாழ்க்கைத் துணைக் காதல்
திடமான உறவு, நீண்ட நாட்களாக பராமரிக்கப்பட்டக் காதல். வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாகும் புரிதல். இது தம்பதிகளுக்கே உரித்தானது.
விளையாட்டுத்தனமானக் காதல்
இது ஒருவரை கவர்வதற்காகப் பதின்பருவ உணர்வுகளை விளையாட்டாகப் பயன்படுத்தும் காதல். கிளைக் காதல்கள் பல உருவாகலாம் இல்லாமலும் போகலாம். சில நேரங்களில் இது உயர்ந்தக் காதலாக மாறலாம். சில சமயம் சுயநலமாக முடிவடையலாம்.
பிரபஞ்சக் காதல்
மனிதர்கள், இயற்கையிடமும், உலகத்திடமும் கொண்டப் பரந்து விரிந்த நேசம், சேவை, கருணை போன்றவற்றுடன் இணைந்த உணர்வு. பிரபஞ்சத்தோடு சர்வ ஜீவன்களும், ஜீவன்களோடு பிரபஞ்சமும் கொண்ட காதல் அளவிட முடியாதது.
இறுதியாக, காதல் பலவிதமான உணர்வுகளால் ஆனது. ஒருவருடைய வாழ்க்கையில் பல்வேறு விதமானக் காதல் நிலைகள் தோன்றலாம், மாறலாம், வளரலாம். எல்லாக் காதலும் உண்மையானது, நேர்மையானது உயர்ந்தது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.