சித்திரைத் திருவிழா போட்டிக்கதை: லைலாவுக்கு ஆயிரம் காதல் கடிதங்கள்  

by admin
73 views

எழுத்தாளர்: நௌஷாத் கான் .லி

என் இரு கண்ணிலும் நீங்காமல் இதயம் முழுதும் நீயே நிறைந்திருக்கிறாய் .காலை பல் துலக்குவதில் ஆரம்பித்து இறுதியாய் இரவு உறங்கும் வரை உந்தன் நினைவு தான் .அடிக்கடி நான் கொண்டு வந்த பெட்டியை திறந்து ,திறந்து பார்க்கிறேன் ஏன் தெரியுமா ?

ஊர் விட்டு உன்னை பிரிந்து வரும் தருணத்தில் உனக்கே தெரியாமல் நீ உடுத்திய ஒரு புடவை ,உன்னுடைய கண்ணாடி வளையல் ,நீ வித விதமாய் எடுத்த புகைப்படங்கள் ,உனக்கே தெரியாமல் நீ பேசிய அழகிய வார்த்தைகளை டேப்பிரிகார்டு மூலம் கேசட்டில் ரெக்கார்டும் செய்து எடுத்து வந்திருக்கிறேன் .உன்னை விட்டு பிரிந்து வந்தாலும் உன் நினைவுகளும் ,உன் நினைவுகளை சுமந்து வரும் சில பொக்கிஷங்களையும் என்னுடன் தான் கொண்டு வந்திருக்கிறேன்.

என் விரல்களுக்கு இடையே இடைவெளி இருப்பது உன் கைவிரல்களை என் விரல்களோடு கோர்க்க தான். உன்னை என்னை விட அதிகம் பிடித்தாலும் அந்த பாழாய் போன பணத்தால் தான் உன்னை விட்டு கடல் கடந்து ,சில நாடு கடந்து பிரிந்து வந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மனசு பாரமாகி போகிறது .

இந்த அரபி வீட்டில் எப்போது வேலை தருவார்கள் ,எப்போது சாப்பிட வேண்டும் ,எப்போது உறங்க வேண்டும் என்பது எனக்கே தெரியாது .அரபி கட்டளையிடும் போதெல்லாம் அவர்கள் சொன்ன வேலையை செய்ய வேண்டும் ,என்னுடன் பணிபுரியும் சக தொழிலாளர்கள் சாப்பிடும் போது சாப்பிட வேண்டும் ,எல்லோருக்கும் ஒரே நேரத்தில்  உறக்கம் வந்து விடுகிறதா என்ன ?

உறங்க நினைக்கும் சொற்ப நேரங்களில் கூட  கண் மூடினாலும் அந்த பாழாய் போன உறக்கம் ஏனோ வருவதில்லை .வேலையை விடவும் வழியில்லை ,ஊர் வந்து என் கண்ணான உன்னை அந்த பாழாய் போன பணத்துக்காக கஷ்டப்படுத்தவும் விரும்பவில்லை .

அணு தினமும் இந்த பாழும் நரகத்தில் எனக்கு நானே சிக்கி கொண்டு வாழ்வது உனக்காகவும் ,என் பிள்ளைகளுக்காகவும் தான் .

உன் புருஷன் இப்படி புலம்புறான்னு என்னை ஒரு போதும் தப்பா நினைச்சுடாதே ஏன்னா இங்கே பேச கூட ஒரு தமிழ் ஆளுங்க இல்லை ரெண்டு மூணு மிசிறி ,ஒரு பாலஸ்தீனி ,நாலு பாகிஸ்தானி ,இந்தியாவிலிருந்து நானும் ,ஒரு மலையாளியும் தான் இருக்கோம்.அவன் பேசுறது எனக்கு சுத்தமா புரியலை ஆனா நான் பேசுறதை அவன் ஏதோ கொஞ்சமா புரிஞ்சுக்கிறான் .

என்னை அண்ணா ,அண்ணான்னு கூப்பிட்டாலும் நம்ம ஊரு மனுஷ ,மக்ககிட்ட பேசுற மாதிரி அவன்கிட்ட சகஜமா பேச முடியலை செல்லம்

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நீ அனுப்பும் கடிதமும் ,அப்பப்ப நினைப்பு வரும் போது எடுத்து பார்க்கும் மணி பர்ஸ்ஸில் உள்ள உன் புகைப்படம் மட்டும் தான் எனக்கு ஒரே ஆறுதல் .

எப்பயாவது வெள்ளிக்கிழமை கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சாலும் கேசட்டில் படிந்த உன் குரலை அப்பப்ப டேப்பிரிகார்டில் போட்டு கேட்டுகிட்டே இருப்பேன் .கொண்டு வந்த நாலு கேசட்டில் ரெண்டு கேசட் கேட்டு ,கேட்டு ரீல் அறுந்து போச்சு .ஊர்ல இருந்து நம்ம தாய் பிள்ளைங்க வந்தா கேசட்டுல ஏதாவது பேசி அனுப்பு .உன் குரலை இன்னும் ,இன்னும் கேட்கணும் போல இருக்கு .

இங்கே அறைல உள்ள பாகிஸ்தானி ஒருத்தன் ஏசிய ரொம்ப ஸ்பீடா வைக்கிறான் லைலா அப்ப குளிருல பெட்ஷீட்டை எடுத்து போத்திக்காம உன் சேலையை எடுத்து தான் போர்த்திப்பேன் .பெட்டியை திறந்து நீ பயன்படுத்திய  பொருள்களை எடுத்து பார்த்தாலும் சரி அல்லது உன் புடவையை எடுத்து போத்திக்கிட்டாலும் சரி ஒரு மாதிரி விவகாரமா சிரிக்கிறான் புள்ள .

பாபிக்கா யாத் ஆகையா ன்னு ஏதோ புரியாத பாஷையில ஏதோ சொல்லுறான் .

நான் ஊர்ல இல்லைன்னு சரியா சாப்பிடாம இருக்காதா ,உனக்கு பிடிச்ச ஆட்டுக்கறியை வாங்கி வந்து கொத்துபா உருண்டையும் ,சூப்பும் செஞ்சு சாப்பிடு .உனக்கு அழகே நீ குண்டா இருக்கிறது தான் .நான் குல்பின்னு கூப்பிட்டாலும் ,நீ செல்லமா கோபம் பட்டாலும் அது தான் அழகு .ஊருக்காரனுங்க கடைகண்ணிக்கு அடிக்கடி போனா நாக்குல நரம்பில்லாம பேசுவானுங்கன்னு பயந்துக்கிட்டு எதுவும் வாங்காம ,சாப்பிடாம எல்லாம் இருக்காதே .உனக்கு பிடிச்சதை ,நம்ம குழந்தைக்கு பிடிச்சதை நல்லா வாங்கி கொடு .நான் சம்பாதிப்பதே உங்களுக்காக தான் .இந்தியன் பேங்க்ல பத்தாயிரம்  போட்டு இருக்கேன் .அடுத்த வாரம் போய் பாரு உன் அக்கவுண்ட்ல ஏறி இருக்கும் .அடிக்கடி லெட்டர் போடு ,ஊர்ல இருந்து நம்ம தாய் பிள்ளைங்க வந்தா மறக்காம பேசி கேசட் அனுப்பி வை .

ஒரு நாளும்

உனை மறவாத இனிதான

வரம் வேண்டும்

உறவாலும்

உடல் உயிராலும் பிரியாத

வரம் வேண்டும்

விழியோடு

இமை போலே

விலகாத

நிலை வேண்டும்

……..     ………..   ………   ……….  ……….    ………..

ராசாத்தி உன்ன

காணாத நெஞ்சு

காத்தாடி

போலாடுது

ராசாத்தி உன்ன

காணாத நெஞ்சு

காத்தாடி

போலாடுது

பொழுதாகிப் போச்சு

விளக்கேத்தியாச்சு

பொன்மானே ஒன்னத்

தேடுது

என்னடா புருஷன் லூசு மாதிரி பாட்டையெல்லாம் லெட்டர்ல எழுதி இருக்கான்னு நீ தப்பா நினைக்கலைன்னாலும் இந்த வரிகளை ஏண்டா எழுதி இருக்கான்னு உனக்கு தோணும் .கண்ணதாசன் ,வாலி மாதிரி எல்லாம் எனக்கு கவிதை எழுத வராது ஆனா இந்த வரிகளில் உள்ள கவிதையெல்லாம் நமக்காக எழுதப்பட்டவை .அதனால் தான் என் தேவதைக்கு ,என் ஆசை பொண்டாட்டிக்கு அனுப்பி இருக்கிறேன் .

உன்னை நேரில் கண்டால் கட்டி பிடித்து வியர்க்க ,விறு விறுக்க முத்தம் தருவேன்டி என் குல்பியே

இந்த பேப்பரில் இடம் இல்லாததாலும் ,வைட் கூடினால் ஸ்டாம்ப் கட்டணம் பதினைந்து திரகம்த்துக்கு மேல கூடும் என்பதாலும் அந்த காசை மிச்ச படுத்தினால் என் கண்மணிக்கு வேறு ஏதாவது வாங்கி தரலாம் என்பதால் இத்துடன் கடிதத்தை முடிக்க மனமில்லாமல் முடித்து கொள்கிறேன் .

                                                                                                            என் செல்லத்துக்கு ஆயிரம் உம்மா

மறக்காம நீ கடிதம் எழுதும் போது உன் முத்தத்தை மொத்தமாக அனுப்பவும்

இப்படிக்கு

உன் நெஞ்சமெல்லாம்

கொள்ளை கொண்ட

குள்ள மச்சான்

சலீம்

இருபது வருடம் தனக்காகவே வாழ்ந்த தன் அன்பான கணவனின் நினைவை சுமந்து நிற்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை ஒரு போஸ் கம்பியில் குத்தி வைத்து தனது  அறுபது வயசிலும் உயிருக்கு மேலாக பாதுகாத்து வந்தாள் லைலா .

தன்னுடைய நாற்பத்தி ஐந்தாவது வயதில் மஞ்சள் காமாலை வந்து மரணித்தாலும் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் புன்னகையோடு  காட்சியளித்தான் லைலாவின் உள்ளம் கொண்ட நாலரை அடி குள்ள மச்சான் சலீம் .

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!