தலைக் கொட்டும் பால்

by Nirmal
151 views

#படித்ததில் பிடித்தது

ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த பெண்கள் பல இன்னல்களை அனுபவித்தார்கள்.

அவற்றில் மிகவும் வேதனைக்குரிய ஒன்றை பதிவு செய்ய வேண்டும்.

மரங்களெல்லாம் சீவி முடித்து பாலை சேகரித்த பிறகு, வாளிகளை காண்டா என சொல்லப்படும் தூக்கிகளில் மாட்டி சுமந்துகொண்டு பால் கொட்டாய்க்கு வருவார்கள்.

அங்குதான் பாலை நிறுத்து கொள்கலன்களில் ஊற்றுவார்கள். சிலரது நிரைகள் (வெட்டு) பால் கொட்டாய்க்கு அருகாமையில் இருக்கும், சிலரது தொலைவில் இருக்கும்.

எப்படியிருந்தாலும் அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிடவேண்டும். அப்படி சுமந்து வரும்போது சில வேளைகளில் , மரவேர்களில் கால்கள் மாட்டியோ, இடரியோ, இலை சரகுகள் வழக்கியோ விழுந்துவிடுவார்கள்.

அப்படி விழும்போது அவர்கள் தூக்கிவந்த பால் தலையில் கொட்டி தலைமுடி முழுதும் பாலாகிவிடும்.

பாலின் பிசுபிசுப்பில் முடியெல்லாம் ஒட்டிக்கொள்ளும். அதனைப் பிரித்தெடுப்பது மிகவும் சிரமம்.

அக்கம்பக்கம் உள்ள பெண்கள் வந்து, எண்ணெய் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக பாலை முடியிலிருந்து தேய்த்து எடுப்பார்கள். அப்பொழுது அந்த பெண்படும் வேதனை சொல்லமுடியாது.

முழுவதும் தேய்த்து எடுப்பதற்கு நீண்ட நேரமாகும். அத்துடன் சிலருக்கு காய்ச்சலும், கழுத்துவலியும் வந்துவிடும்.

மறுநாள் வேலைக்கும் போகமுடியாமல் போய்விடும்.

முதல்நாள் பால் கொட்டிப்போனதால் அன்றைய ஊதியமும், மறுநாள் வேலைக்குப்போக முடியாதலால் அந்த ஊதியமும் இழப்பு.

ரப்பர் பால் தலையில் கொட்டி, அதனை தேய்த்துக் கழுவும்போது அவர்கள் வலியோடு அழுவதை நான் பார்த்திருக்கிறேன்.

அப்பொழுது நான் சிறுபிள்ளையானதால் அதனைப் பெரிதாக உணரவில்லை. வளர்ந்த பிறகு நினைத்து வருந்தியிருக்கிறேன்.

அவர்களுக்கான என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

© Nadeson

You may also like

Leave a Comment

error: Content is protected !!