அந்தரங்கத்தில் இருவரும் படித்த
காதல் கவிதை…..
அரங்கத்தில் அம்பலமாயிற்று!
சிதறிய சிறுதுளி ,
சிப்பிக்குள் முத்தானது!
உடலது தளர, இடையது மெலிய
உயிரது உருகி நின்றதே!
முகம் வெளுத்து, மூச்சுத் திணற
நிலவது வளரத் துவங்கியதே!
கரங்களில் நீ தவழ…….
நான் காத்திருக்கிறேன்.
பட்டுச் செல்லமே நீ கருப்பா?
சிகப்பா?………தெரியாது.
என் தேவதையா? இல்லை
எங்கள் சாம்ராஜ்யத்து இளவரசனா?
யாராகினும் நீ இறைவன் தந்த வரம்!
பத்துத் திங்கள் உனைச் சுமந்து
பட்ட பாடு என்னவோ உடலுக்குதான்,
மனமோ நீ வரும் நாளை
எதிர்பார்த்து……….இன்று
தங்க நிலவாய் வந்துதித்து
தாய்மை வரம் தந்தாயடா!
மேகமே பொற்சிலையாக
கரங்களில் தவழக் கண்டேன்!
மேனியெங்கும் பரவச அலை
பரவக் கண்டேன்.
வாரி அணைத்திடவே,
நெஞ்சில் அமுதம் சுரக்குதடா!
வயிற்றுக்குள் எட்டி உதைத்த
இந்த அழகான பிஞ்சுப் பாதத்தை மென்மையாக முத்தமிடத்
தோணுதடா என் செல்வமே!
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
