அப்போது எங்களிடம் ஒரு மிதிவண்டி இருந்தது
அம்மாவின் தலைச்சுமை இறக்கிட அரிசி மூட்டைகளை அது சுமக்கும்
அப்பாவின் நெடுந்தூர பயணங்களுக்காக சுழன்று கொண்டிருக்கும்
என் பள்ளி நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு
என்னை கொண்டு சேர்த்துவிடும்
கால் எட்டாத தம்பிக்கு குரங்கு பெடல்
கற்று கொடுத்தபடி அது மூச்சிரைத்து கொண்டிருக்கும்
சாலையில் கையை விட்டபடி வித்தை காட்டும்
அதிவேக சுழற்சியென நாங்கள் வளர்ந்திருந்தோம்
இப்போது ஆளுக்கொரு மோட்டார் வாகனம் இருப்பில் இருந்தது
எப்போதாவது ஒருமுறை அதன் பெடல்களை மிதப்பதற்கே
சோர்வுற்றிருந்த காரணத்தால் வீட்டின் சுவரை
அணைத்தபடி முதுமை சக்கரத்தோடு அது அப்படியே சாய்ந்திருந்தது
ஒரு மஞ்சள் வெயிலில் வானத்தின் இரத்த சிவப்பணுக்கள்
மேகத்தோடு புரண்டு கொண்டிருந்த வேளையில்
அம்மா அதை புதிதாக்கி கொண்டிருந்தாள்
யாரிடமோ விற்பனைக்கு தயாராகியிருந்த
அந்த சக்கர கம்பிகளுக்குள் துருவேறியபடி உதிர்ந்தது
நினைவின் சங்கிலித் துகள்கள்…..
🌺நிழலி