நண்பகல் ஞாயிறாய்
நெற்றி தகக்கிறது
நெருப்பின் அனற்துகளை
அள்ளி எடுத்து வந்த காற்றாய்
நுதற்சூடு நெஞ்சின்
நினைவுகளை இரைக்கிறது
நிசியெல்லாம் நித்திரை தொலைத்து நின்மடியிலிட்டு மயிர்க்கோதி
மஞ்சள் மணக்கும் மணிக்கரத்தால் மணிக்கணக்கில் மாறிமாறி
என் நெற்றியில் ஒத்தடமிட்டு
ஓயாக் காய்ச்சலையும்
ஓடவைத்த உன் மகிமையை
எப்படி மறந்தேனம்மா!
தாரமாய் வந்தவள்
தாங்கத்தான் செய்கிறாள் – ஆயினும்
அன்பின் உச்ச எல்லையை
அவளன்பு தொடுவதேயில்லை
மண்டை வலிக்கையில்
மாத்திரை தருகிறாள்!
காய்ச்சலில் தவிக்கையில்
செயற்கை குளிரூட்டியென
ஏதோவொன்றை நெற்றியில்
வைத்துவிட்டுக் கடக்கிறாள்!
சூடாய் மிளகு ரசமும்
அன்னையாய் ஒரு அணைப்பும் வேண்டுமெனக் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் நிறைவற்ற ஒன்றாகவே!
கடந்து போன நாட்களில்
வாழ முயன்று பார்க்கிறேன்
சின்ன உருவமாகி
மீண்டும் உன் சேலை மடியில்
புதைந்துகொள்ள விளைகிறேன்
தூக்கம் தொலைத்தவளை
தூக்கி எறிந்து பேசிய நாட்கள்
நகமேறிய கொடும் விரலாய்
கழுத்தை நெறிக்கிறது
உறவுகள் அத்தனைக்கும்
வார்த்தை எல்லை வகுத்திருக்கையில்
ஈன்றவளிடம் மட்டும் எல்லை தொலைத்தது ஏனோவென ஏனையோரையும் நினைத்துப் பார்க்கிறேன்
வலிக்கிறது என்றால் “சரியாகிடும் கண்ணா” என்ற சொல்லிற்கும்
“இதவே தாங்க முடியலயா” என்ற சொல்லிற்கும் உண்டான
இடைவெளி கொன்று தின்கிறதம்மா!
வயதானதாம் பொறுப்பும் கூடியதாம்
உடலுடைந்து போகையில்
யானும் குழந்தையாகவே ஆகிறேனென்பதை
ஏற்றுப் புரியும் மனதை
எங்கு தேடுவேன் நீ கரைந்தபின்!
இன்றும் அதே பல்லவிதானே
காய்ச்சலாவென ஏதோவொன்றை நெற்றியில் வைத்துவிட்டு விலகிவிடுவாள் அவள்
வெறுப்பில் வீட்டிற்குள் நுழைந்து நாற்காலியில் சாய்ந்தேன்!
“அப்பா என்ன இப்படி சுடுகிறதென”
ஓடி வந்து நெற்றியில் கைவைத்தாள்
என் நான்கு வயது மகள் முதன்முறையாக!
அதே நேசம் அன்பின் அழுத்தம்
சில்லென நெற்றியில் பாய்ந்தது!
என்னையும் அறியாது
அம்மாவென அழைத்தேன்
“சரியாகிடும்ப்பா” எனப் புன்னகைத்தாள் என் சின்னத்தாயானவள்!
புனிதா பார்த்திபன்