படம் பார்த்து கவி: அம்மா… அம்மா…

by admin 1
49 views

அம்மா… அம்மா…
சொல்லும் போதே சுகம் சேர்ப்பவள்!

விரலுக்குள் சீப்பை ஒளித்து வைத்து தலை கோதும். உன் விரல்களுக்கு எங்கே போவேன் அம்மா!

இட்டு வைத்த வத்தல்
மழையில் நனைந்தால்..உன்னை
நொந்து கொள்வாய் !
நான் நனைந்தால் மழையை
திட்டித் தீர்ப்பாயே அம்மா!

எனக்குப் பிடித்து என் வயிறு நிரம்பிய எல்லாம்… உனக்கு
பிடிக்காத பண்டங்கள்..

தினந்தோறும் “அழகு என் கண்ணு “
விரல் வலிக்க
நெட்டி முறிப்பாய்! நீ இல்லையென்ற தைரியம்…
ஊர் கண் முழுக்க
என் மீது அம்மா!

நீ என் காலணியின்
கயிறுகளை கட்டி விட்டு “சாயந்தரம் வரைக்கும் இப்படியே இருக்கனும்” என்பாயே…அது கூட உன் பேச்சைக் கேட்கும் அம்மா!

தடுக்கி விழுந்தால் ஓடிவந்து
அணைத்துக்கொண்டு
தரையை அடிபின்னி விடுவாய்! _ ஆனால்
இப்போது தூக்கி விட
யாருமில்லை அம்மா!

எனக்கு உடம்பு சரியில்லை என்றால்
நீ கண் விழிக்கும் கடமையிலேயே உடம்பு சரியாகிவிடும்!

கேட்டதெல்லாம் வாங்கி தரமாட்டாய்!
எனக்கு எது கேட்குமோ
அதை மட்டுமே வாங்கித்தருவாய்!

பொய்க் கோபம் கொள்வாய்! _ ஆனால்
ஒளிந்திருந்து என்னை
பார்த்தும் கொள்வாய்!

தொட்டிலில் மணியைக் கட்டி விட்டு
நான் கண் விழித்த சத்தம் கேட்டு ஓடி வருவாய்!
அதேபோல ஏதோ ஒரு சக்தியை எனக்காக விட்டுச் சென்றிருப்பாய் தானே
அம்மா!

சாமிக்கு நல்ல அம்மா
இல்லையென்று
நீ சென்று விட்டாயோ
அம்மா!

சாமியை நீ பார்த்துக்கொள்!
அவர் என்னைப் பார்த்துக் கொள்வார் அம்மா..
கவலைப்படாதே!!

✍🏼 தீபா புருஷோத்தமன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!