படம் பார்த்து கவி: அறிவின்

by admin 1
30 views

அறிவின் நீருற்றி அந்த நெருப்பை அணைத்துவிட்டதாக சொல்கிறார்கள்

சதைபிண்டமான இந்த வெற்றுடம்பில் உயர்வில்லை என்று பிரச்சாரம் செய்தார்கள்

அவர்களோடு ஒரே மேசையில் உரையாடினார்கள்

சகத் தோழனென்று சிலாகித்து கொண்டார்கள்

பொதுவெளியில் தனித்து தொங்கவிடப்படும் கயிறுகள் அறுபட்டு

எல்லோருக்குமான குவளைகளில் தேநீர்‌ நிறைந்தது

அவர்கள் பறிக்கும் பூக்கள் இவர்களுக்கு பொருத்தமாயிருந்தது

வேரோடு பிடிங்கியதாக சொல்லிகொண்டு இருக்கிறார்கள்

அதன் துணை வேரொன்று இன்னும் ஆழத்தில் படர்ந்து கொண்டிருந்தது

அது யாருக்கும் தெரியாமல் ஒரு தளிரை எப்போதாவது துளிர்க்கிறது

அவ்வபோது அது செய்திகளில் வெட்டப்பட்ட இறைச்சியாகவும்

தண்ணீரில் கலந்தோடிய கழிவாகவும் வெளியே தெரிந்த போதும்

இந்த காலத்தில் இதெல்லாம் யாருக்கு பொருந்துமென

ஒரு திருமணத்தை ஒத்திகை செய்கின்றனர்

அவர்கள் அணைத்த தீயில் அணையாத கங்கொன்று

இடைவிடாது புகைந்து கொண்டே இருக்கிறது

சாதிகளின் மரணங்களுக்கு சாம்பல் நிறம் பூசியபடி …..

நிழலி🌺

You may also like

Leave a Comment

error: Content is protected !!