அழகாய் மலர்ந்திடும்
அதிகாலை உதயமது
ஆரஞ்சு வண்ணம் பூசி
ஆராதிக்கும் வானம்
இயற்கையின் வர்ணஜாலம்
இனிமையைக் கூட்ட
ஈதன்றோ வாழ்க்கையென
ஈன்றவள் ஆசி தர
உயிரனைய மனையாட்டி
உவகையுடன் தேநீர் தர
ஊராரின் பாராட்டில்
ஊஞ்சலாட மனம் விழைய
எழுத்தாணியெனப் பென்சிலதை
எடுத்தேன் விருப்புடனே
ஏடெடுத்து வரைந்தேன்
ஏகனாம் சூரியனை
ஒரு போதும் மறவான்
ஒரு நாளும் விடான்
ஓட்டமெடுக்க மாட்டான்
ஓடி ஓளிய மாட்டான்
ஔவியம் பேசான்
அஃதே கதிரவன்
இந்துமதி