இந்த பறவைகளுக்கு தான் ஓய்வில்லாத
இரண்டு வேலைகள் எப்போதும் சிறகடிப்பதும்
எங்காவது உலகை விதைப்பதுமென பறக்கிறது
கொத்தி சேர்த்ததன் பசி போக எச்சங்கள்
எல்லாவற்றையும் நிரப்பி விடுகிறது…
அப்படி தான் பூத்துக் கிடக்கிறது அந்த காலணியும்
குப்பை மேடுகளின் குவியலுக்குள்ளும்
சாலையோர சதுர வளைவுகளுக்குள்ளும்
இணை இழந்து தனித்து கிடக்கிறது அது
காடு வளர்த்த நீலக்குருவியின் கடைசி எச்சத்தில்
துளிர்த்து பூத்திருக்கிறது அந்த காலணி
இன்னும் பூக்காத விதைகளின் மகரந்தங்களோடு
நடை பயில்கிறது அந்த காலணியின்
பாதம் படாத பாதைகள் …
🌺 நிழலி
22-5-2024