உலகையே வாழ வைக்கும் உன்னை
வணங்கி நிற்கும் என்னை மன்னிப்பாயா விருட்சமே!
கருவறையில் நான் உதைத்த வலியிலே என் அன்னை உன்னை உதைத்தாள் நான் பிறந்தேன்…
ராசியான மரக்கட்டிலாம்!
தூளி கூட பரம்பரையாய் வந்ததாம்.._ நீதான்
தாலாட்டினாய்!
தோட்டத்தில் உன் அடி முடி காணா ஏக்கத்தில்
உன்னை சுற்றியே விளையாடும் நான்..
ஆனால் நீ மட்டும் எப்போதும் என் தலைதடவி ஆசிர்வதித்து கம்பீரமாய்..!
நீ தந்த வரங்கள்
உன்னில் உள்ள இலைகளை விட அதிகம் _ ஆனால்
நாங்கள் உனக்கு செய்த பாவங்கள் அதை விட அதிகம்!
இலை உதிர்த்து மண்ணின் இயற்கை உரத்தை மண்ணிற்கே தரும் _ உன் கொடை எங்கே! பூக்காது
காய்க்காது தொட்டியில் மரம்
வளர்க்க பழகிவிட்ட
நாங்கள் எங்கே!
உன்னை வெட்டி வீழ்த்தி _ எங்கள் வாழ்நாளையும் சுருக்கிக் கொண்டு விட்டோமே!
மண்ணில் உன்னை விதைப்பதற்கு பதிலாக மனசாட்சியை புதைத்து விட்டு மழைக்காக கையேந்தி நிற்கிறோமே!
உருவமில்லா காற்றை
உணர்வாய் சுவாசிக்கும் எங்களுக்கு எவ்வளவு பெரிய வரம்…
ஆக்ஸிஜன் கார்பன் டை ஆக்சைடு சுழற்சி!
புத்தனுக்கு போதி மரம் போல எங்களுக்கும் ஞானம் கொடு! _ நான் படிக்க ஏடு தரும் உன்னை
நான் காடு செல்லும் வரை காப்பேன்!
உயிர் தந்த அன்னையும் பிதாவும் தெய்வமெனில்
மேற்கொண்டு வாழ
வரம் தரும் நீயும் தெய்வமே!
எங்களின் பெரும் பிழை பொறுத்தருள்வாய்;
வரம் வேண்டி ஞானம் வேண்டி தவமிருப்போம்..
ஒவ்வொருவரும் நம்
வீட்டுத் தோட்டத்தின் மரத்தினடியில்……!
✍🏼 தீபா புருஷோத்தமன்
படம் பார்த்து கவி: உலகையே
previous post