எப்போதும் உன் நினைவு கோடுகள் நீங்குவதில்லை
அறைச்சுவர்களின் விரிசல்களுக்கிடையே நுழைந்து கொள்ளும்
சிறு பூச்சிகளென உன் நினைவு கூடு கட்டிகொண்டிருக்கிறது
உறங்கிய விழிகளின் இரவு நிறத்திற்குள்
ஊடுருவிடும் கனவுகளுக்குள் உன் பிம்பம்
வானவில் வளைவுகளென முழு அக எதிரொளிப்பை
நீர்த்திவலைகளென நிறைத்து வைத்திருக்கும்
ஒரு கணம் உடைகையில் மறுகணம் பிறப்பெடுக்கையில்
அனுதினம் அசைபோடுகையில் நீ நிறைந்த
மூளை நரம்புகள் பச்சையம் மறந்திருக்கும்
நினைவோடு பேசுகையில் என் வார்த்தைகள்
உன் பெயரை தானே சூடிக்கொள்ளும்
யாரோ ஒருவரிடம் சிலாகித்து கொண்டிருக்கும்
மொத்த நினைவுகள் உன்னிலிருந்து சுரந்திடும்
உடனிருக்கும் உறவுகளுக்கு தெரியாத உன்னை
உயிர் ரேகையென பிடித்து வைத்திருக்கும்
என் ஆன்ம ரகசியத்தில் நீ ஒளிந்திருக்கிறாய்
எங்கெங்கோ உன்னை தேடும் அவர்களுக்கு
எப்படி சொல்வது ….
இதயத்தின் துடிப்பில் நாசியின் துவாரத்து காற்றில்
திரை விலக்கும் பிம்பத்தில் மறைபொருளென
என்னை உயிர்ப்போடு வைத்திருப்பதே நீ தான் என்பதை …..
🌺நிழலி