ஓ மானுடனே!
எண்ணற்ற உயிர்களின் அன்னை நான்,
இன்று உன்மத்தம் பிடித்தே பேசுகிறேன்!
உன் ஊணுடம்பை நீ வளர்க்க
என்னைக் கூறுபோட்டுக் கூத்தடிக்கின்றாய்!
உப்பிட்டு உண்டால் நன்றியுண்டென்பர்,
உலகுக்கே உப்பளிப்பவள் நான்!
என் பிள்ளைகளைப் பிடித்து
உப்புக்கண்டம் போட்டுச் சுவைக்கின்றாய்!
கேட்டால் உணவுச்சங்கிலி
என்றுரைக்கின்றாய்!
என் குழந்தைகள் வயிற்றைக்கீறி
முத்தெடுத்து அணிகின்றாய்!
என் பவளப்பாறைகளை வெட்டி விற்கின்றாய்!
உணவாக,ஆபரணமாக,நெய்தல்
மக்களின் வாழ்வாதாரமாக,மக்களின் உல்லாசப் பொழுது போக்காக,….
சொல்லிக்கொண்டே போகலாம்.
என்மீது,..
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆளும் எண்ணற்ற உரவோன்கள், ஆனால் என்
உடல் என்னவோ ரத்தக்களறியாக!
நீவிர் மன அமைதி தேடவும் நாடுவது என் மடிதான்,நீ எறிந்த எச்சில் குப்பைகளும்,நெகிழிப்பைகளும்,
தின்று என் குழந்தைகள் செத்து மிதக்கின்றன!
ஆன்மீகப்பெயரில் நீ என்னுள் விட்டெறியும் கந்தத்துணிகள்
எம்மை மாசு படுத்துகின்றன!
உன் தொழிற்சாலைக் கழிவுகளை
என்னுள் கலப்பதால் திக்கித் திணறுகிறேன்.
பொங்கி பொங்கி அலையாய் எழுகின்றேன் உன்னை அழிக்க,
ஆனால் முடியவில்லை,..
நீயும் என் பிள்ளையல்லவா!
அவ்வப்போது வெகுண்டெழுந்து
சுனாமியாக அழிக்கின்றேன்!
விரைவில் கல்கி அவதாரம் எடுத்து ஆழிசூழ் உலகமாக்கி விடுவேனோ
என்று நானே அஞ்சுகிறேன்!
தயவுசெய்து வாழு வாழவிடு!.
மு.லதா
படம் பார்த்து கவி: ஓ மானுடனே!
previous post