புள்ளினமாய் மெல்லின நடையில்
மென்பஞ்சு மேகப்பொதியாய்
கருப்புச்சட்டை நீதிபதியாய்
இருகை நீட்டி இடையை ஆட்டி
அசைந்து வரும் அழகுத் தேராய்
ஆடி ஆடி வரும் அதிசயம்
இறக்கை இருந்தும்
பறக்கை கைசேராததை
குறையெனப் புலம்பாது
வண்ணத்துப்பூச்சியையோ
வான் கழுகையோ
நிமிர்ந்து பார்க்காது
கவலையேயின்றி
கடலுக்குள் களித்துக்
குளித்து குதியாட்டமிட்டு
தனக்கென அமைந்ததை
தாராளமாய் கொண்டாடித்
தீர்க்கும் தீர்க்கம்
எதிரோனை வியந்து
சுயத்தைச் சூறையாடி
சுமைகளைத் தேடி நாடி
நாட்களை வீணடிக்கும்
நமக்கும் தேவையன்றோ!
புனிதா பார்த்திபன்