நீ என் சிந்தை வளம்
அதனால் எனக்கு தந்தை வரம்!
தத்தி தத்தி நடக்கும் உன் விரல் பிடிக்க
நான் குள்ளமானேன்!
உன்னை தூக்கி விளையாடும் போது
நான்
நெட்டையானேன்..
நிலவு மட்டுமே தேய்த்து வளரும்
என்று யார்
சொன்னது!
பெண் பிள்ளை பெற்ற
தகப்பனும் தேய்ந்து வளருவான் !
உனக்காக நானும்
மொட்டையடித்துக் கொள்வேன் !
உனக்கு காது குத்தினால் இரத்தம் வரும்! எனக்கு கண்ணீர் வரும்!
நீ பள்ளிக்கூடம் செல்வாய்.. நான் காவலாளியாவேன்!
வெயிலில் காய்ந்து
மழையில் நனையாதிருக்க
குடையாவேன்!
நீ விருதுகள் பெறுவாய் _ நான்
ஊருக்கே விருந்து வைப்பேன்!
நீ பாவாடை தாவணி அணிய …_ நானே
தாயமானவனானேன்!
நீ கல்லூரி நுழைய
நான் பேருந்துக்கும்
வீட்டுக்கும்
நடை வண்டி பழகுவேன்!
திருமணத்திற்கு நாள்
குறிக்க _ காலம் பிரிவதற்கு நாள் குறித்தான்!
எனக்குத் தெரியும்…
உன் கணவனும்
உன் மகளை இப்படித்தான் வளர்ப்பான்!!!
இது நனவான நினைவு !
நான் உறங்கும் வரை
என் மனதை விட்டு இறங்காத நினைவு!
✍🏼 தீபா புருஷோத்தமன்