யாருடைய தூரிகை வரைந்த ஓவியம்? இது,
கார்மேகம் கண்டால் ஆடும்
வண்ணக்காவியம்!
அழகிய வண்ணத்தோகை விரித்தாடி,
அழைக்கிறாயோ உன் இணையைக்
காதல் கொள்ள, இல்லை
உன் எதிரி விலங்கை அச்சப்பட
வைக்கிறாயா!
சங்க காலப் பேகனையே மயக்கிப்
போர்வை பெற்றாயே!
ஆனால் அழகு இருந்தாலே
ஆபத்து உண்டல்லவா?
தோகைக்காகத் துன்புறுத்தப்
படுகிறாயே!
எங்கள் தமிழ்க் கடவுளின்
வாகனமானாய்,
சங்ககாலந்தொட்டு மனிதவாழ்வோடு பின்னிப்
பிணைந்து எங்கள் தேசியப்
பறவையுமானாய்!
உன் வண்ணம் என்னவோ கண்களுக்கு விருந்துதான்,
ஆனால்
உன் குரல் என்ன சங்கீதத்தின்
அபஸ்வரமோ?
அகவல் ஒலி மூலம் எதிரிகளின்
தகவல் தருவாயோ?
பாம்பென்றால் படையும்
நடுங்குமென்பர், ஆனால்
உன்னிடம் பாம்பே நடுங்குமன்றோ!
வண்ணக் கலவையில் உன்
அழகிய ஓவியம் கண்டு,
என் எண்ணக் கலவையின்
புலம்பலைக் கேட்டாயா,
என் அருமைப் பறவையே?.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)