பழமொழி போட்டி கதை: எது சிறப்பு

by admin 2
83 views

எழுதியவர்: நா.பத்மாவதி

பழமொழி: இக்கரைக்கு அக்கரை பச்சை       

எது சிறப்பு

நம்மிடம் இருப்பதை  விட அடுத்தவரிடம்  இருப்பதே சிறந்தது  என்ற எண்ணம் உடைய நண்பர்கள் மகேஷ் மற்றும் கதிர். இவர்கள் வாழ்க்கை  எதிர்மறைகளும் ஒப்புமைகளும் நிறைந்தவை. இவர்கள் இருவரின் வாழ்வில் உள்ள உண்மை அனுபவங்களை விரிவாக விவரிப்பதே இக்கதையின் நோக்கம்.

மகேஷ், ஒரு பிரமாண்டமான பங்களாவில் வசித்து வந்தான். அவனது தந்தை தொழில் ரீதியாக முன்னேறிய ஒருவர், அவனது தாய் தொழில் வல்லுநர். இருவரும் பணியில் முழுவதும் மூழ்கியதால் மகேஷின்  வாழ்க்கை தனிமையாக  இருந்தது. 

கார், மடிக்கணினி, உயர் தர சைக்கிள்கள் மற்றும் பிற நவீன உபகரணங்கள், வேலைக்கு ஆட்கள் , வீடு நிறைய  ஆடம்பர பொருட்கள் என இருந்தும் அவன் மனம் சந்தோஷமாக இல்லை. அவனது பெற்றோர் தனது வாழ்வின் முக்கியமான தருணங்களில்  அவனோடு இல்லாமல் வேலை வேலை என ஓடுகிறார்கள் என்பதால் அவன் மனதின் ஓரத்தில் ஒரு ஆழமான வெறுமை குடி கொண்டது.

அவன் நண்பன் கதிர்  ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர். அம்மா இல்லத்தரசி. கதிரின் பெற்றோர் தங்கள் மகனுடன் நிறைய நேரம் செலவிடுவார்கள். அவர்களின் வாழ்க்கை பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் மிக எளிமையாக  ஒவ்வொரு நாளும் அன்பு மற்றும் மகிழ்ச்சியான அனுபவங்களே நிறைந்து இருந்தன. கதிரின் வீட்டில்  உறவுகளும் உறுதியான பிணைப்புடன் இருந்ததால் அவனது வாழ்க்கை  சந்தோஷமாக இருந்தது.

மகேஷ்  பள்ளிக்கு காரில்   செல்லும் போது,     சாலையோரத்தில் நடந்து செல்பவர்களைப் பார்ப்பான்.  ச்சே எவ்வளவு சந்தோஷமாக சுதந்திரமாக   சிரிப்போடு பேசிக் கொண்டு  மகிழ்ச்சியாக போகிறார்கள். தினமும்  இந்த காரில் தனியாக  போவது பிடிக்கவில்லை என்றாலும் பெற்றோர் கெளரவத்திற்காக அவன் அந்த அனுபவங்களை அறியாது  ஒரு தனிமையான உணர்வை அனுபவித்தான்.

வீட்டில் வேலைக்காரர்கள் அவனது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தங்களது பணிகளை சுமுகமாக செய்துகொண்டு, மகேஷை நன்றாக பார்த்து கொண்டார்கள்.

அந்த செயலில் அவர்களது கடமை மேலோங்கி இருந்தது.

ஆனால், அவனது இதயத்தில் ஒரு வெறுமை  இருந்ததை யாரும் அறியவில்லை.

கதிர் பள்ளி முடிந்ததும் தனது வீட்டிற்கு தன் நண்பர்களுடன் திரும்புவான். அவன் வீட்டில் அவனது பெற்றோர், பாட்டி, மற்றும் சகோதரர்களுடன் வாழ்ந்தது. அங்கு ஒவ்வொரு நாளும் மகழ்ச்சி, மற்றும் உறவுகளின் ஆழமான நெருக்கம் நிறைந்திருந்தது.

அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையும் அன்பால் நிறைந்ததை பிரதிபலித்தது. கதிர் தன் பள்ளி அனுபவங்களை பெற்றோருடன் பகிர்ந்து கொண்டான். அவனது பெற்றோர் அவனது கதைகளை ஆர்வமாகக் கேட்கும் போது, அவனுக்கு தனது வாழ்க்கையில் ஏதோ சாதிக்கப் பிறந்தேன் நம்பிக்கை வளர்ந்தது.

ஒரு நாள் மகேஷ் தனது நண்பன் கதிரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். மகேஷின் வீடு பெரிய மாளிகையை போல இருந்தது. ” மகேஷ் எவ்ளோ பெரிய வீடுடா” என்றபடி  கதிர் ஆச்சரியமாக பார்த்தான். ஒவ்வொரு அறையும் பிரமாண்டமாகவும் அழகாகவும் இருந்தது. மகேஷ் அவன் அறையை காண்பித்தான். டேபிள்,  சேர், புத்தக அலமாரி, விதவிதமான பேனாக்கள், எழுதிப் பார்க்க கரும்பலகை என  சகல வசதிகளும் பார்த்து பிரமிப்பு அகலாமல் ” மகேஷ் சூப்பர் டா, ஆமா வீட்ல  அம்மா இல்லையா” என்ற கதிரிடம் ” உனக்கு முதல்ல சாப்பிட  ஏதாவது கொண்டு வர சொல்றேன் ” என்று மகேஷ் திரும்ப ” நானே வந்துட்டேன் தம்பி” என்று ஒருவர் காபியும், பிஸ்கட்  ம் எடுத்து வந்தார்.  “ம்ம் டேபிள்ல வைச்சுடுங்க” என்றான் மகேஷ். சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து புறப்பட்டான் கதிர்.  ஆனாலும், அந்த வீட்டின் ஆடம்பரம் மற்றும் அழகு கதிரின் மனதில் சற்றே வியப்பை ஏற்படுத்தியது. மகேஷ் எவ்ளோ அதிர்ஷ்டகாரன் என்று தோன்றியது.

ஆனாலும் அன்பான உறவுகள் இல்லாத அந்த வீட்டின் அமைதி,

கதிரை யோசிக்க வைத்தது. மகேஷின் வாழ்க்கையை வெறுமை படுத்தும்  தனிமையை அப்போது புரிந்து கொண்டு இன்னும் நெருங்கிய தோழன் ஆனான் கதிர் .

கதிர் ஒரு நாள்  மகேஷை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். கதிரின் வீடு சாதரண நடுத்தர குடும்ப எளிமை, அன்பின் உவகை மிக்க சூழல், மற்றும் அந்த வீட்டின் மகிழ்ச்சி மகேஷை ஆச்சரியப்படுத்தின. கதிரின் அம்மா மகேஷை சிரித்த முகத்துடன் வரவேற்றார். அவரின் அன்பான பேச்சால் அடிக்கடி கதிர் வீட்டிற்கு  வர ஆரம்பித்தான்.  மகேஷுக்கு கதிரின் நட்பு மனதை நெருக்கமாக தொட்டது.

ஒருநாள் மகேஷும், கதிரும் ஒன்றாக வீட்டிற்கு  வர வீட்டு வாசலில் அறிமுகம் இல்லாதவர்களைப் பார்க்க “அம்மா,” என ஏதோ கேட்க வாயெடுக்க ” நீங்க உள்ள போங்கப்பா” என்று இவர்களை சென்றபிறகு  அம்மா அவர்களிடம் “ஸார் இந்த மாதம் கண்டிப்பாக  கொடுத்துடுறோம், நா அவர்கிட்ட சொல்றேன் ஸார், நீங்க கிளம்புங்க ” என்று கெஞ்சினார்.  “சரிம்மா போறோம் ஆனா இந்த மாதம் தவறினா”  “தவறாது ஸார், பையன் வந்துடப் போறான் கிளம்புங்க ” என்று சொல்ல ஒருவழியாக வந்தவர்கள் கிளம்பினார்கள்.  இது எப்பாவது நடக்கும் கதிருக்கு தெரியும்.  ஆனால் மகேஷுக்கு இது புதிதாக இருந்தது. மகேஷ் கதிரிடம் கேட்க ” அது அப்படிதான் நண்பா,  எங்கப்பா சம்பளம் கொஞ்சம் பத்தலேன்னா அண்ணாச்சி கிட்ட கடன் வாங்குவாறு அதான் கேக்கறாங்க, எனக்கு தெரியும்னு  எங்கம்மாக்கு தெரியாது ” என்று சிரித்தபடி  சொன்னான் கதிர்.

மகேஷ்  அவன் தன் பெற்றோர்களிடம் தன் மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாலும், அவர்களது பிஸியான வாழ்க்கை காரணமாக அது சாத்தியமாகவில்லை.

இருவர் மனதிலும் பலப்பல கேள்விகள் துளைத்தன.  கதிர் மகேஷின்  வாழ்வில் நல்ல வசதி இருக்கிறது ஆனால் அன்பில்லை ஏன் என்ற கேள்வி?  கதிரின் வாழ்க்கை எளிமையானது  மகிழ்ச்சியை மட்டுமே  ஆதாரமாகக் கொண்டது, ஆனால் பொருளாதார பற்றாகுறை ஏன்?

இறைவன் படைப்பில் ஏன் இந்த  ப்குபாடு என அவர்களது மனம் பாடாய்ப் பட்டது.

தனது சொகுசு வாழ்வின் வசதியை முதன்முறையாக உணர்ந்தான். அப்பாவும், அம்மாவும் தனக்காகத் தான் கஷ்டப்படுகிறார்கள் என தெளிந்தான்.

கதிரின் வாழ்க்கையிலும் சிரமம் இருக்கிறது.

அவர்கள் இருவரும் ஒரு முக்கியமான உண்மையை புரிந்துகொண்டனர். தூரத்தில் இருந்து பார்க்க வசதியாகவும, தூரத்தில் இருந்து பார்க்க கஷ்டமாகவும் உள்ள வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி அவரவர்  மனதை பொருத்தே அமையும். இறைவன் நமக்கு கொடுத்ததை வைத்து சந்தோஷப்படுவதும், வருத்தப்படுவதும் நம்மிடம் தான் உள்ளது.

“இக்கரைக்கு அக்கரை பச்சை” என்று நாம் நினைத்தாலும், நாம் இருக்கும் சூழலில் உள்ள மகிழ்ச்சியையும் மகத்துவத்தையும் அடையாளம் காண்பதே முக்கியம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.

மகேஷ் மற்றும் கதிரின் வாழ்க்கையின் மாறுபட்ட அனுபவங்கள், வாழ்க்கையின் உண்மையான தன்மையை உணர ஒரு வாய்ப்பை உருவாக்கின.

முற்றும்.

📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!