பாலியல் பேசும் மார்ச்: சில்வியா என்ன செய்தாள்

by admin 2
17 views

எழுதியவர்: இந்துமதி நடராஜன்

விருதுநகர் அருகில் அமைந்த சிறிய கிராமம்/ நகரம் இரண்டுக்கும் நடுவே என சொல்லப்படும் ஊர் அது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்து வந்த ஒரு தம்பதிக்குப் பிறந்த அந்தப் பெண் பெயர் சில்வியா (நாம் வைத்த பெயர்). இப்போது அந்த ஊரை விட்டு வர சில்வியா தான் காரணம்.
அவளின் அம்மாவுக்கு இரு அண்ணன், இரு அக்கா என மிகுந்த பாசமான குடும்பம். பிறந்த வீட்டில் கடைக்குட்டி என எல்லோருக்கும் செல்லம் . அக்கா, அண்ணா குடும்பம் அம்மா அப்பா யாவரும் அதே ஊரில் அடுத்தடுத்து இருந்த தெருவில் வாழ்ந்து வந்தனர். சில்வியாவை அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும் . அம்மா வீட்டை விட்டு பெரியம்மா வீடு மாமா வீடு என அப்பப்போ மாறி மாறி போய் தங்கி தன் பேச்சால், துறு துறு குறும்புகளால் யாவரையும் தன் பக்கம் இழுக்கும் குட்டிப் பெண்ணாக வளைய வந்தாள். சமர்த்துப் பெண்ணாக பொறியியல் முடித்து கேம்பஸில் தேர்வாகி இன்ஃபோசிஸ்
கம்பெனியில் வேலை. அங்கே தான் ஆதித்யா அவளின் டீம் லீடராக அறிமுகம். தினம் தினம் பார்த்து முதலில் அலுவலக விஷயம் மட்டும் பேசியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தன் குடும்ப விஷயங்களை பேச ஆரம்பித்து பிறகு ஒருவரை ஒருவர் விரும்புவது தெரிந்து இரு வீட்டாரும் சம்மதிக்க மணமுடித்தார்கள். அப்போ தான் பிரச்சினை ஆரம்பம்.
முதல் இரு வாரங்கள் கல்யாண களைப்பு, உறவினர்கள் வீட்டில் விருந்து என ஓட பெரிதாக ஒன்றும் இருவருக்கிடையே நடக்கலை. அதன் பின்னர் ஹனிமூன் போன போதுதான் இரவில் அவன் அருகில் வந்து தொட்டாலே அவள் உடல் விறைக்க பயந்து மயங்கி விழுந்தாள். எதுவும் புரியாமல் பாதியில் ஹனிமூன் கேன்சல் பண்ணி வந்தால் வீட்டில் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதால் அப்படியே அங்கும் தனித்தனி கட்டிலில் படுத்து தூங்கி ஊர் வந்து சேர்ந்தார்கள்.
ஆதித்யா பதவி உயர்வில் அமெரிக்கா போக வேண்டிய சூழல். கணவனோடு சேர்ந்து சில்வியாவும் அங்கே புராஜெக்டை மாற்றிக் கொண்டாள். அதற்கிடையில் டாக்டரிடம் உண்மையைச் சொல்லி கவுன்சிலிங் போனாள். சாதாரணமாக பேசும் போது மிக இயல்பாக சிரித்து பழகும் சில்வியா , கணவன்
அதுவும் காதலித்து மணம் புரிந்தவன் அருகில் வந்தாலே ஏனிப்படி பயம், மயக்கம் வருது என்று சோதனை செய்ய ஹிப்னடைஸ் பண்ணி அடி மனதில் படிந்த கடந்த காலங்களில் சிறு வயதில் யாரேனும் அவளிடம் தவறாக நடந்த மோசமான சம்பவம் காரணமாக இருக்கலாமோ என்று பார்க்க வேண்டும் என டாக்டர் சொன்னார்.

அதற்குள் சில்வியாவின் அம்மாவுக்கு ஏதோ சந்தேகம் வர அவளிடம் தூண்டித் தூண்டி கேள்விகள் கேட்க வேறு வழியின்றி உண்மையைச் சொல்லி விட்டாள். அவள் அம்மா எங்க குடும்பத்தில் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை டாக்டர். நாங்க எல்லோரும் ரொம்ப பாசக்கார குடும்பம். என் பெண்ணை நான் வளர்த்ததை விட நான் கடைக்குட்டி என்று என் அக்கா, அண்ணன் அவர்கள் வீட்டில் அவர்கள் குழந்தைகளோடு ரொம்ப பிரியமாக வளர்த்தார்கள். அதனால் ஹிப்னாடிசம் எல்லாம் தேவையே இல்லை. நாங்க நல்ல முறையில் அவளுக்கு சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கிறோம். இட மாற்றம்
மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி அமெரிக்கா அனுப்பி விட்டார்கள். தினம் அவள் அம்மா போன் செய்து பேசும் போது ஏய் உண்மையைச் சொல்லு,
சந்தோஷமா இருக்கியா என்றால் கவலைப்படாதே நான் நல்லா இருக்கேன் என்று பதில் வரும். ஆனால் இரண்டு வருடங்கள் கழிந்த பிறகும் எந்த செய்தியும் இல்லை ன்னு ஏதாவது பிளானிங் வச்சிருக்கீங்களா? சட்டுப் புட்டு ன்னு ஒரு பேரப் புள்ளையை பெத்துத் தர வழியைப் பாருங்க என்று இரு வீட்டாரும் தொந்தரவு செய்ய சில்வியா மட்டும் இந்தியா வந்தாள் தனியாக.
ஏர்போர்ட் வந்த அப்பா , அம்மாவிடம் வீட்டுக்கு வந்து சொல்றேன் என்று சொல்லி கூட்டி வந்தாள். வீடு வந்தவுடன் ரொம்ப அலுப்பா இருக்கு. தூங்கப் போறேன் என்று போய் விட்டாள். இரண்டு நாட்கள் சாப்பாடு, தூக்கம் எனப் போக பொறுமை இழந்த அவள் அம்மா என்ன தாண்டி மனசில் நினைப்பு உனக்கு. எங்களைப் பார்த்தா எப்படித் தெரியுது. மாப்பிள்ளை இல்லாமல் தனியா வந்துட்டு எதுவும் சொல்லாம இப்படி எங்களை டென்ஷனாக்கறே என்று கத்தினாள்.
அம்மா நான் இப்போ சொல்லப் போற விஷயம் கேட்டு நீ ஷாக் ஆகி மயக்கம் போட்டாலும் போடுவே. அவனை டைவர்ஸ் பண்ணப் போறேன். அங்கிருந்த போதே வக்கீலிடம் பேசி மியூச்சுவலா பிரிய முடிவு பண்ணிட்டு என் வேலையை மறுபடி இங்கே மாற்றிக் கொண்டு தான் வந்திருக்கேன்.
நீ சொன்னியே அந்தப் பாசக்கார குடும்பத்தில் ஒரு ஆண் தான் என் இந்த நிலைக்கு காரணம். அது என் அடி மனசில் ஆழமா பதிந்து என்னால் அவன் கிட்ட நெருங்கவே முடியாமல் போச்சு. என்னை அறியாமலே ஹிப்னடைஸ் பண்ணி அமெரிக்க டாக்டர் கண்டுபிடித்து விட்டார்.
அக்கா , அண்ணா என நான் பெரியம்மா வீட்டில் தான் ஓடி ஓடிப் போய் விளையாடுவேன். அந்த சின்ன பெரியப்பா தான் விவரம் தெரியாத வயதில் என்னிடம் தவறாக நடந்து இருக்கிறார். வெளியே சொல்லாமல் இருக்க ஏதேதோ பொருட்கள் வாங்கித் தந்து ஏமாற்றி இருக்கார். நீ கூட இந்த சின்ன அத்தானுக்கு நம் பெண் மேல் எவ்வளவு பிரியம் என்று அடிக்கடி சொல்வியே. அதெல்லாம் தன் தவறை வெளியே தெரியாமல் மறைக்க வாங்கித் தந்தது மா. எனக்கே தெரியாமல் என் சிறு வயதில் நடந்த
இந்தக் கொடுமை தான் என் மணவாழ்வையே கெடுத்து மனநிம்மதி இல்லாமல் செய்து விட்டது.
உன் கிட்ட எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கும்மா. நீ உடனே போய் பெரியப்பா,
பெரியம்மாவிடம் சண்டை போட்டுக் கிட்டு நிக்காதே. அது அப்புறம் நம் குடும்பத்தில் எல்லோருக்கும் தெரிந்து போகும். என்னை எல்லோரும் ஒரு பாவப்பட்ட பெண் போல பார்ப்பாங்க. குடும்பம் இரண்டு பக்கமாக பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டை போடும். நம் வரையில் தெரிந்த இந்த ரகசியம் இப்படியே மறையட்டும் . அவங்க கிட்ட இருந்து விலகி இருக்கலாம். இந்த ஊரை விட்டு சென்னை போகலாம். தயவுசெய்து இதை எனக்காக செய்வியா என்றாள் சில்வியா. மனசொடிந்து அப்படியே விக்கித்து நின்றனர் அவளைப் பெற்றவர்கள்.

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!