எழுதியவர்: நா.பா.மீரா
பாரதி அன்று கனவில் கண்ட புதுமைப் பெண்கள் இன்றோ எண்ணிக்கையில் ஏராளமாய்ப் பல பரிமாணங்களில் நம் முன்னே. ஆயின் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அதைவிடப் புதுமையாய். ஆணுக்கு நிகராய் அவன் காரியங்களில் யாவிலும் சமபங்கு அளிக்கும் அவள் போற்றப்படாவிட்டாலும் பரவாயில்லை… பாலியல் வதைக்கு ஆளாக்கப்பட்டு தூற்றப்படுகிறாளே..கொடுமையன்றோ அது.
நான் சந்தித்த எனக்கு நெருக்கமான சில இளம்மகளிர் திருமணம் என்ற பெயரால் அடைந்த வேதனைகளைக் கனத்த மனத்துடன் பகிர்கிறேன்.
ஜெயா …மேன்மையே உருவானவள். அதிர்ந்து பேசக்கூட மாட்டாள் . என்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்த அவள் திருமணத்திற்கு சென்று மனநிறைவுடன் அட்சதை தூவி ஆசிர்வதித்து வந்தேன்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் அவளைச் சந்திக்க நேர்கையில் என் வழக்கமான பாணியில் விசேஷம் ஏதும் உண்டாம்மா …என்று கேட்டேன்.. அவள் மழுப்பலாக நகர்ந்துவிட்டாள்.
கணவனோடு சேர்ந்து …நிறைய படங்கள் கூட வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் பகிர்ந்திருந்தாளே…பெரிதாக ஏதும் யோசிக்காமல் புறந்தள்ளிய எனக்கு….சிறிது நாட்கள் கழித்துத்தான் கணவன் சைக்கோ மாதிரி நடந்து கொண்டதையும் , அவனிடம் அந்தப் பெண் பட்ட துன்பங்களையும் சொல்லச் சொல்ல இப்படியும் இருப்பார்களா என வெகுண்டேன். கணவனைப் பிரிந்து பெற்றோரிடமே வந்துவிட்டாள் ஜெயா.
கிரேஸ் …. என்னுடன் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு மேற்கொண்ட பெண் . திருநெல்வேலியில் உள்ள சர்ச்சில் தடபுடலாகத் திருமணம். இல்லறத்தின் பயனாக அவள் கர்ப்பம் தரித்திருப்பதைக் கேள்விப்பட்ட என் மகிழ்ச்சியைத் தவிடுபொடியாக்கியது அடுத்து அவள் சொன்ன விஷயம் .
கிட்டத்தட்ட முப்பது லட்சம் செலவழித்து , தனியார் கல்லூரி வேளையில் இருக்கும் கணவனுக்கு , கிரேஸின் பெற்றோர் அரசு வேலைக்கு ஏற்பாடு செய்தால் சேர்ந்து வாழலாம் ….இல்லாவிட்டால்…
கணவனைப் பிரிந்து தாய்வீடு வந்து குழந்தை பெற்று….தன் சொந்த முயற்சியில் அரசு வேலையும் வாங்கிச் சாதித்துவிட்டாள் கிரேஸ்…. சிங்கிள் பேரண்டாய் ஒரு குழந்தையோடு ….
கர்த்தர் ஏன் அவளுக்குச் சரியான பாதையைக் காட்டவில்லை …அல்லது இதுதான் வாழ்க்கையென்பது விதி அவளுக்கு வகுத்த வழியா?
என் சொந்தத்தில் ஒரு பெண்ணின் வாழ்வும் இப்படித்தான் …வேலைக்குச் செல்லும் பெண்ணை …வேற்று சாதிக்காரானாய்க் காதலித்து மணந்து …சந்தேகம் என்னும் பாழாய்ப் போன நோயால் காதல் செடியில் ஆசிட் ஊற்றி அழித்துவிட்டான் அந்தப் பாவி … விளைவு ஐந்து வயதுப் பையனுடன் அவளுக்குத் தனி வாழ்க்கை .
இதெல்லாம் கூடப் பரவாயில்லை ..என் டீமில் பணிபுரிந்த செல்விக்கு நேர்ந்த கொடுமை …அமைதியே உருவான காருண்யமான தோற்றம் கொண்ட பெண். திருமணமாகிப் புகுந்த வீடு சென்றவள் போன போக்கிலேயே திரும்பி தாய் வீடு வந்துவிட்டாள்.
முதலிரவில் கணவன் ஆண்மை இல்லாதவன் என்று தெரியவர …அதைப் பக்குவமாய்ச் சீரணித்துக் கணவனிடம் சமாதானம் சொன்னவளை …சொல்லவே நாக் கூசுகிறது. ..
அவனில்லாட்டா என்ன … நீ என் மூலமா நம்ம குடும்ப வாரிசைச் சுமக்கலாம்னு …இளித்த மாமனாரைக் காறித்துப்பிவிட்டு வெளியேறிய செல்வி… …
இன்று வேறொரு நல்ல மனிதருடன் வாழ்க்கை அமைந்து ஒரு ஆண் குழந்தைக்குத் தாயாகியிருக்கிறாள் என்பது மட்டும்தான் ஆறுதல் .
ஆக…பெண் வாழ்க்கையில் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் அவள் சந்திக்கும் பாலியல் வதைகள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.
பாரதியும், பாரதிதாசனும் கண்ட பெண்கட்குக் கல்வி வேண்டும் என்ற கனவினால் விழைந்த பொருளாதார சுதந்திரத்தை மட்டுமே ஆதாரமாகப் பற்றிக் கொண்டு விதி என்னும் கயிற்றில் மதி கொண்டு நடந்து சமநிலை ஆற்றுகிறாள் என்பதே நிதர்சனமான உண்மை .
ஆண்களே, ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்….. முடிந்தால் பெண் துணையோடு இணையாக நடந்து பயணியுங்கள் . அன்றேல் விலகி வழிவிட்டால் மாற்றுப்பாதை நோக்கிய வெற்றிப் பயணம் அவளுக்கு எளிதே ….
ஏனெனில் அவள் சக்தி ….பேதையல்ல அவள் மேதை ..புரிந்ததா?
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.