©Loganayagi
வெப்பம், தூசி இரண்டுமே புத்தகங்களின் ஆயுளைக் குறைப்பவை.
வழக்கமாக புத்தகங்களின் அடியில் பழையசெய்தித்தாளைப் போட்டு அடுக்குவதே பெரும்பான்மையோர் வழக்கமாக உள்ளது.
அது புத்தங்களைச் சீக்கிரம் மடிக்கச் செய்துவிடும். பழுப்பு நிறமேறி சீக்கிரம் பழைய புத்தகம் போல் ஆகிவிடும்.
அதிகமான புத்தகங்களை வைத்திருப்போர் ஆண்டுக்கு இரண்டுமுறையாவது அனைத்துப் புத்தகங்களையும் எடுத்து தூசிதட்டிப் பக்கங்களிடையே காற்றுபடும்படி புரட்டிவிட்டு அடுக்குவது அவசியம்.
60°C வெப்பத்தில் ஒருநாள் இருந்தால் அந்தப் புத்தகம் தன் ஆயுளில் ஒரு ஆண்டிற்குரிய சேதத்தை அடையும்.
புத்தகங்களின் அடுத்த எதிரி ஈரமும் ஈரப்பதமும். இவற்றிடமிருந்து பாதுகாப்பதும் அவசியமாகும்.
புத்தக அலமாரி தட்டுகளின் நீளஅகலத்திற்கு ஏற்ப வெள்ளைநிறப் பருத்தித் துணியினை விரிக்கலாம். புத்தகங்களின் மேற்புறமும் துணியால் மூடுவதால் தூசி படாமல் தவிர்க்கலாம்.
ஸ்பானிஷ் டிஷ்யூ பேப்பரால் உறை செய்து நீண்டநாள் பாதுகாக்க எண்ணும் புத்தகங்களுக்குப் போடுவது
பயன்தரக்கூடியது.
பாண்டிச்சேரி அரபிந்தாசிரமத்தால் தயாரிக்கப்படும் ஹேண்ட்மேட் பேப்பரையும் மேலுறை தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
நிழலில் உலர்த்திய வேப்பிலை, புங்க இலை, நொச்சி இலை, யூக்கலிப்பிடஸ், வசம்பு இவற்றைப் பொடி செய்து புத்தக அடுக்கில் வைத்தால் பூச்சி அண்டாது.
சூடத்தை மிளகுடன் சேர்த்து சிறுமுடிச்சு தயாரித்து புத்தக அடுக்கில் போடலாம்.
வசம்பு, கருஞ்சீரகம்,லவங்கம் ஒருபங்கு, மிளகு கால்பங்கு ; கிராம்பு அரைப்பகுப்பு என்ற விகிதத்தில் பொடி செய்து வெள்ளைத்துணியில் சிறுமூட்டை தயாரித்துப் போட்டு வைத்தாலும் பூச்சி அண்டாது.
சோடியம் ஃப்ளூரைடுடுன் அரிசிமாவைக் கலந்து சீடை போல் உருட்டிப் போட்டாலும் பூச்சி அண்டாது.
மழைக்காலத்தில் சிலிக்கா ஜெல் உருண்டைகளைப் போட்டு வைத்தால் ஈரப்பதத்தில் இருந்து புத்தகங்களைப் பாதுகாக்கலாம்.
புதிய புத்தகங்களை வாங்கி வைப்பதற்கு முன் பழைய புத்தகங்களில் அவசியமில்லாதவற்றை நீக்குவதும் அவசியம்.