எழுதியவர்: குட்டிபாலா
மெய் எழுத்து வார்த்தை: ஆத்திரம்/ம்
“அம்மா, எதிர்பாராமல் இப்போதுதான் பஸ்ஸில் கண்ணனை பார்த்தேன். எனக்கு சம்மதம்” என்றதும் “அப்பாடா. இப்போதாவது ஒத்துக்கொண்டாயே. மூன்று மாதங்களாக கேட்டுக்கொண்டிருக்கும் அவர்களிடம் உடனே பேசுகிறேன்” என்றாள் சுமதியின் தாய் சுகுமாரி.
அடுத்த நிறுத்தத்தில் “ஹாய்” என்றபடி ஏறிய பெண், கண்ணனின் அருகில் உரிமையோடு சென்று உட்கார்ந்ததை திகைப்போடு பார்த்தாள் சுமதி.
வடபழனியில் “கண்ணா, உன்னையே நம்பியிருக்கிறேன். ஏமாற்றிவிடாதே” என்று சொல்லியபடியே இறங்கினாள் அவள். இதை கவனித்த சுமதி “அம்மா, கண்ணன் வேண்டாம்” என்று கோபமாக சொல்லிவிட்டு அலுவலகம் விரைந்தாள்.
நேர்காணலுக்காக அறைக்குள் வந்தவளைப் பார்த்து திகைத்த சுமதி நேர்காணலை தொடங்கினாள்.
“உங்கள் காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டதும் ‘ஏன் சம்பந்தமில்லாமல் இப்படி கேட்கிறாள்’ என்று மனதிற்குள் குழம்பியவள் சுதாரித்து “தற்காலத்திற்கேற்ப மனைவிக்கு தெரியாமல் காதலை தொடர வேண்டியதுதான்” என்றதும் “அதனால்தான் கண்ணனோடு ஒட்டி உறவாடுகிறாயோ?” என்று கோபத்தோடு எழுந்தாள் சுமதி.
அப்போதுதான் பெயர் பலகையைப் பார்த்த சாரதா “ஓஹோ, நீங்கள்தான் கண்ணனின் வருங்கால மனைவி சுமதியா! ஆத்திரப்படாதீர்கள். கண்ணன் என் காதலனல்ல. சித்தி மகன்”
என்று சுமதியின் கைகளைப் பிடித்து குலுக்கி “வெல்கம் அண்ணி. யூ ஆர் அப்பாயின்டட்” என்றாள்.
வெட்கித் தலைகுனிந்த சுமதி அம்மாவை அழைத்து “கண்ணன் ஓகே” என்றாள்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.