படைப்பாளர்: சுசி கிருஷ்ணமூர்த்தி
“ஹேப்பி பர்த்டே பாட்டி” என்ற சுரபி என்கிற என்பேத்தியின் வாழ்த்துக்களுடன் என்னுடைய எழுபதாவது பிறந்த நாள் தொடங்கியது. கண் விழித்தவுடனேயே குடும்பத்தினருடன், சுரபி என் கையில் ஒரு ஸ்மார்ட் மொபைல் ஃபோனை பரிசாக கொடுத்தாள்
என்னவெல்லாம் புதுப்புது கேட்ஜட்கள் அந்த ஸ்மார்ட்போனில். பக்கவாட்டில் உள்ள நீல பட்டனை அழுத்தினால் அதில் இருந்து ஒரு லேசர் ஒளி வர, சுரபி அதைப் பற்றி விவரித்தாள். “பாட்டி ! இந்த பட்டனை அமுத்தினால், அதிலேயிருந்து வர லைட் எதிரே இருக்கிறவாளை, 15 நிமிஷம் மயக்கமாக்கிடும். இதோ பார் ! இந்த பட்டன் நம்ம ரெண்டு பேர் மொபைலுக்கும் கனெக்ஷன் பட்டன். ரெண்டு பேரில் யார் அமுக்கினாலும் நாம் ரெண்டு பேரும் பேச முடியும். என்று சொல்லிக் கொடுத்தாள்.
அன்னிக்கு பூரா விளையாட்டும் பார்ட்டியும் தான். மாலையில் எப்பவும் போல் பார்க் போனோம். 6.30 மணி வரை நண்பர்களுடன் விளையாடினாள் சுரபி. அவர்கள் வீட்டிற்கு சென்று விட எப்பவும் போல நான் சுரபிக்கு பிடித்த, ஏலியன் கதை சொல்ல ஆரம்பித்தேன். இருட்ட ஆரம்பித்து விட்டதால் பார்க்கே காலியாகத்தான் இருந்தது.
அப்பொழுது ‘கிர்ர்ர்ர்’ என்று ஒரு சத்தத்துடன் விமானம் போல் ஒன்று 100 அடி தூரத்தில் வந்து இறங்கியது. நானும் சுரபியும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே இருக்கையில், அதிலிருந்து ‘ரோபோ’ போன்ற ஒரு உருவம் வேகமாக நடந்து எங்கள் அருகில் வந்தது.
ஓரு மாதிரி கம்ப்யூட்டர் குரலில் “பாட்டி ! நான் சந்திர கிரகத்திலிருந்து வருகிறேன். நீ தினமும் சொல்லும் கதை எங்கள் கிரகத்து இளவரசருக்கு ரொம்ப பிடித்து விட்டது. அவருக்கு மனிதர்கள் பற்றிய கதை கேட்க வேண்டுமாம். அதனால் நீ இப்பொழுதே என் கூட விமானத்தில் வர வேண்டும். 6 மாதம் ஆன பிறகு நானே திரும்பக் கொண்டு விடுவேன்” என்று சொல்லி நான் மறுக்க மறுக்க என்னை தள்ளிக்கொண்டே விமானத்தில் ஏற்றி விட்டான்.
அப்பொழுது சுரபி அவள் மொபைல் கனெக்ஷன் பட்டனை அழுத்தி, “ பாட்டி ! அது ஏலியன். நீலபட்டன் அமுக்கு” என்று கத்த, நானும் மொபைல் நீலபட்டனை ஏலியனை நோக்கி அமுக்க, அவன் அப்படியே மயங்கி விழுந்துவிட்டான். உடனே நான் அவசர அவசரமாக விமானத்திலிருந்து இறங்கி சுரபியிடம் ஓடி வந்து விட்டேன்.
அதற்குள் சுரபி கத்தியது கேட்டு, கூட்டம் கூடி விட்டது, ஆனால், அதற்குள் விமானம் ஏலியனை ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டது. நானும் சுரபியும் ஏலியன் வந்து என்னைக் கடத்திச் செல்ல முயன்றதை சொன்னால்” பாட்டியும் பேத்தியும் கதை விடறாங்க” என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்து விட்டனர். ஏலியன் இளவரசரை இங்கு வரச் சொல்லி கதை சொல்ல வேண்டும்.
முற்றும்.