ஒரு நாள் போட்டி கதை: அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்

by admin 2
29 views

எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தீக்கோழியோடு/ நெருப்பு கோழியோடு!

சூரியன் மறையும் அந்தி நேரம். முருகன் தன் வாழ்நாளில் என்று வெளிச்சம் வரும் என்ற ஏக்கத்துடன் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் சென்னை பேருந்துக்காக நின்று கொண்டிருந்தான். 

சென்னைக்கு செல்லும் பேருந்து கட்டணத்தை கேட்டதும் மயக்கமே வந்து விடும் போல் இருந்தது.

வேலை எதுவும் கிடைக்கவில்லை. படிப்பு எட்டாவது தான். எந்த வேலை கிடைத்தாலும் செய்து வயிறு கழுவி வந்த அவன் வாழ்வில் வந்த பெண் “இப்படியே வாயுக்கும் வயிற்றுக்கும் பத்தாம இப்படி வாழறது ஒரு வாழ்க்கையா? திடீரென எனக்கு ஏதாவது உடம்புக்கு வந்தா என்ன செய்ய? இப்ப நான் நாலு வீட்டில் வேலை செய்யறேன். எப்படியோ காலத்தை ஓட்டறோம். குழந்தைனு ஒன்னு வந்தா என்னா செய்றது?”என்று கூறியதும் நண்பர்களிடம் யோசனைக் கேட்டான்.

அதில் ஒருவன் சென்னைக்கு போனா நிறைய சம்பாதிக்கலாம் என்று சொன்னதும் மனைவியிடம் சொல்லி விட்டு புறப்பட்டு விட்டான்.

கையில் இருக்கறதோ இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள். வெளியே வந்து உட்கார்ந்து இருந்த போது ஒரு வேனில் பெரிய கம்பியால் ஆன கூடு ஒன்றை உள்ளே ஏற்றிக் கொண்டு இருந்தனர். 

“இந்தா தம்பி..ஒரு கை பிடித்து தூக்கி விடு”என்று முருகனை அழைத்தனர்.

கூட்டிற்குள் இரண்டு நெருப்பு கோழிகள். அதனுடன் ஒரு குட்டி. அவர்களுக்கு உதவினான். 

“தம்பி.. ரொம்ப நன்றி பா. இந்தா  பணம்”என்றார்.

“அண்ணே.. இந்த வண்டி எங்க போகுது?”

“சென்னை வண்டலூரில் உள்ள விலங்குகள் பூங்காக்கு.”

“அண்ணே. பணம் வேண்டாம். தயவுசெய்து என்னையும் உங்க கூட கூட்டி போய் சென்னையில் விட்டுடுங்க.”

“சரி. ஆனால் அந்த கூடு உள்ள இடத்தில் தான் நீ உட்கார்ந்து வரணும். சைடில ஜன்னல் இருக்கு காத்து வரும். நடுவில எங்கேயும் நிறுத்த மாட்டோம். ராத்திரி சாப்பிட ஏதாவது வேணும்னா வாங்கி வச்சுக்க”என்றார்.

“ஆறு மணிக்கு கிளம்பிடுவோம்’ என்றார்.

முருகன் தண்ணி பாட்டில், பன் வாங்கி வைத்துக் கொண்டான்.

நெருப்புக் கோழியுடன் ஆன பயணம் தொடங்கியது. செல்போனில் ‘கிளம்பிட்டேன். நீ ஜாக்கிரதையா இரு. வேலைக்கு முயற்சி செய்யறேன். ஏதாவது நிரந்தர கூலி வேலை கிடைக்குதானு பார்க்கிறேன் ” என்று கூறி விட்டு உட்கார்ந்து  நெருப்பு கோழிகளை பார்த்து கொண்டே இருந்தான்.

சின்ன வயதில்”நெருப்பு கோழிகள் நெருப்பை திண்ணும் “என்று சொல்லக் கேட்டிருந்தான். அவை வித்தியாசமான குரலில் கத்தின.

மனசில் பயம் வந்தது. 

‘எப்படி இந்த பறவைகளுடன் மூடிய வேனில் பயணிப்பது. வெளியே வந்தா என்ன செய்ய? வேனை வெளியே பூட்டி இருக்காங்க.‌ அந்த டிரைவர் நெம்பரை வாங்கலையே!’

பயத்துடன் படுத்த முருகன் அசந்து தூங்கி விட்டான். ஒவ்வொரு மேடு பள்ளத்திலும் நெருப்பு கோழிகள் ஒன்றாக கத்த ஆரம்பித்தது. தூக்கம் கலைந்தது. 

அவை முருகனையே உத்து பார்த்துக் கொண்டே வந்தன. 

‘பாவம். அதற்கும் நம்மை பார்த்தால் பயமாகத் தானே இருக்கும்.  சாப்பிட கூட பிடிக்கவில்லை. ஒருத்தரையும் தெரியாத ஊர்.  எந்த தைரியத்தில் கிளம்பி வந்தேன்.மனசுக்குள் ஆயிரம் போராட்டம். 

அந்த கோழிகளைப் பார்க்கையில் ஒரு உண்மை புரிந்தது. அந்த கோழிகளுக்கு அங்கே யாரைத் தெரியும். எங்க கூட்டி போறாங்க என்று கூடத் தெரியாது.

முருகன் முகத்தில் பயம் பறந்து போனது. அவற்றின் மேல் இரக்கம் ஏற்பட்டது. கருணையுடன் அவற்றைப் பார்த்ததும் அவை ஏதோ புரிந்தது போல மெதுவாக குரல் கொடுத்தது.

அப்படியே படுத்து உறங்கினான் முருகன்.

சிறிது நேரத்தில் யாரோ அவனை முகத்தில் உராய்வது போல இருந்தது.

திடுக்கிட்டு கண் விழித்தால் குட்டி நெருப்புக் கோழி அந்த கூண்டில் இருந்த சின்ன ஓட்டையைப் பெரிதாக்கி கஷ்டப்பட்டு வெளியே அவனிடம் வந்தது.

‘பயம் ஒரு பக்கம். காலால் கண்ணை கிழிக்குமா? வாயால் குத்துமா? தெரியவில்லை.’

அந்த குட்டி இவன் வைத்து இருந்த பனனைப் பார்த்துக் கொண்டே இருந்தது. 

“ஓ.. உனக்கு பசிக்குதா? என்று பன்னை கொடுத்தான். ஆவலுடன் கொத்தி தின்றது. மற்றொரு பன்னை பிய்த்து கூண்டில் உள்ள கோழிகளுக்கு கொடுத்தான்.

தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை தான் குடித்து விட்டு குட்டியின் வாயில் ஊற்றினான். 

குட்டி திருப்தியாக கூண்டிற்குள் சென்று விட்டது. பெரிய நெருப்பு கோழிகளுக்கும் தண்ணீரை துவாரம் வழியாக ஊற்றியதும் அவைகளும் குடித்தன.

காலை ஒரு இடத்தில் காலைக் கடன் கழிக்க நிறுத்தினர். தண்ணீரை பாட்டிலில் நிரப்பிக் கொண்டான் முருகன்.

மதியம் ஒரு மணிக்கு சென்னை வந்தடைந்தனர்.

அந்த இடம் வண்டலூர் உயிரியல் பூங்கா.

முருகன் உதவியுடன் கூண்டை இறக்கினர். அந்த டிரைவரிடம் நன்றி கூறி விட்டு முருகன் புறப்பட்டான்.

இரண்டு அடி எடுத்து வைத்ததும் தன்னை பின்புறம் இருந்து இழுப்பதை உணர்ந்து திரும்பினால் குட்டி நெருப்புக் கோழி.

கூண்டில் இருந்து வெளியே வந்து முருகனை வெளியே போக விடாமல் தடுத்தது.

வண்டலூர் உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் இந்த அன்பைக் கண்டு வியந்தனர்.

அவர்கள் முருகனை அழைத்து அந்த பூங்காவில் நெருப்புகோழிகளைப் பார்த்துக் கொள்ளும் வேலையைக் கொடுத்தனர்.

 அந்த ஜீவனுக்கு  உணவும் தண்ணீரும் ஒரு வேளைக்கு கொடுத்ததற்கே,  இறைவன் மகிழ்ந்து  தன் வாழ்வின் இருளைப் போக்கியதற்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தான்.‌

சந்தோஷமாக தன் மனைவிக்கு போன் செய்து நடந்ததைக் கூறினான்.

இந்த விஷயம் அனைத்து ஊடகங்களிலும் பேசு பொருளானது.

‘அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்’ 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!