எழுதியவர்: குருமூர்த்தி
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் நெருப்பு கோழியோடு!!
இடைச்சாதி நானென்றாய்.
கிராமம்தான் நாங்கள் வளர்ந்தது. படிப்பபெல்லாம் அங்கேயேதான். ஆனாலும். ஒரு கட்டத்துக்கு மேல், உயர்படிப்பு, வேலை உள்ளிட்ட வசதிகளுக்காக, கிராமத்தை விட்டு, பக்கத்தில் இருந்த டவுனுக்கு குடி பெயர்ந்தோம். கிராமத்திலிருந்து வந்த நமக்கு இந்த மாதிரி கிராமமும் இல்லாமல், நகரமும் இல்லாமல் இருக்கும் இந்த டவுன், புதிதாக இருந்தது.
இது பெரிய ஊர் ஆயிற்றே, வாய்ப்புக்கள் எவ்வளவு அதிகமோ, அதே மாதிரி எல்லாவற்றிக்கும் கூட்டமும் அதிகம். இங்கே யாருக்கு ஆற்றல் (பலம்) அதிகமோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். ஊருக்கு வெளியே சற்று அமைதியான சூழலில் இருந்த எங்கள் வீட்டிற்கு பக்கத்தில், சற்று ஒதுக்குப்புறமாக ஒரு பண்ணை வீடு இருந்தது. அந்த பண்ணை வீட்டில் மாமரம், எலுமிச்சை என நம் வீட்டிற்கு தேவையான பல மரங்களும், பல வகை செடி கொடிகளும் உண்டு. உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அங்கே காணலாம், வேடந்தாங்கல் சரணாலயம் போல. பறவை ஆர்வலர்க்கு ஒரு பொக்கிஷம்.
அதன் உரிமையாளரும் ரொம்ப நல்லவர். நீங்க எடுத்துக்கோங்க என்பார். அந்த வீட்டில், செல்ல பிராணிகள் பல உண்டு. இப்போது நெருப்பு கோழி சேர்ந்திருக்கிறது. ஏதோ வியாபாரம் என்றார்கள். என்ன நெருப்பு கோழியை வீட்டில் வளர்ப்பார்களா என்று அப்பா டென்ஷன் ஆனார். அது ஒன்றுதான் அப்பாவிற்கு சற்று எரிச்சலை தந்தது. ஆனாலும், மற்ற சில பலன்களை கருதி, அட்ஜஸ்ட் செய்து கொண்டார். அதுவும் கோழி வகையை சேர்ந்ததுதானாம், வளர்க்க எந்த தடையும், இல்லை என்று
விளக்கம் தந்தார் அவர். கூடவே, இது நல்ல பிஸினஸ், சார். இதன் மாமிசம், கொழுப்பு சத்து அற்றது, மற்ற மாமிசங்களை போல் இல்லாமல், இதன் மாமிசம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்லது. மேலும், மற்ற மிருகங்களின் தோலுக்கு அடுத்தபடியாக, இதன் தோல் மிகுந்த பயன்பாட்டில் இருக்கிறது என்று விளக்கம் அளித்தார். இருந்தாலும் இந்த தகவல் ஆச்சர்யத்தை கொடுத்தது. உங்களுக்கு, இதய கோளாறு உண்டே, கொஞ்சம் கொடுக்கவா என்றார்.
ஆமாம், ஆமாம், கொன்றால் பாவம், தின்றால் போச்சு, என்றார் அப்பா.. பக்கத்து வீட்டுக்காரர் பெரிதாக சிரித்தார். அப்பாவும், அதையெல்லாம் தான் மாத்தரையா சாப்பிடறேனே, இன்னும் இது வேறையா,
என்று அப்பா உள்ளே சென்று விட்டார். அந்த நெருப்பு கோழி, நம்மை போல வெஜிடேரியன்தானாம். கோழிக்கு வைக்கும் தானியங்கள், கீரை வகைகள், தாவர வகைகள் இதன் உணவாம். எல்லாம் கேட்க புதுசாக இருந்தது. அப்பாவையும் இதை சொல்லி சமாதானம் செய்தேன். போகட்டும் , நம் பிரச்சனைக்கு வருவோம். காக்காய்க்கு உணவிட வேண்டும், என்று பழக்கப்பட்ட கிராமத்திலிருந்து வந்த நமக்கு,
இந்த விஷயத்தை பொறுத்தவரை, ஒன்றும் கஷ்டமாக இல்லை. என்ன, பெரிய ஊர் என்பதால், இதிலும் போட்டிகள் இருந்தது. இங்கே காக்காயோடு சேர்ந்து, அந்த கைப்பிடி அளவு அன்னத்திறகு, காக்காயோடு,
பூனை, புறா என ஏகப்பட்ட போட்டிகள். கூடவே நமக்கு டென்ஷன் சேர்ந்து கொண்டது. காலை சுற்றி வரும் பூனை, பூனையை பார்த்து பயந்து எட்டி இருந்து கத்திவிட்டு, பின் பயந்து பறந்து செல்லும் காக்காய் மற்றும் புறா, , என்று காலையிலிருந்து நம் பஞ்சாயத்து ஆரம்பிக்கிறது. ஆபீஸில் போனால்தான் என்றில்லை, வீட்டிலிருந்தே அந்த டென்ஷன் ஆரம்பிக்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வாக, நான் எல்லாவற்றிற்கும் தனித்தனியாக சாதம் வைக்க ஆரம்பித்தேன்.
என்னடா, தான் சமைத்த உணவு, இவன் ஆபீஸ் போவதற்குள்ளாகவே தீர்ந்து விடுகிறது என்று குழப்பமடைந்து, என்னை பின் தொடர்ந்து வந்து கண்டுபிடித்து விட்டாள் அம்மா. அன்றைக்கு, எனக்கும் காக்காய் அளவு உணவே கிடைத்தது. இதில் நெருப்பு கோழிக்கெல்லாம் நம்மால் தீனி போட முடியாது என்று விட்டு விட்டேன். ஆனால், அங்கே பட்சிகளுக்குள் நடந்த போட்டியில், அந்த நெருப்பு கோழியே இந்த (காட்டுக்கு) கட்டிடத்திற்கு தலைவனாகியது. அதன் அளவை பார்த்து பயம்தான் காரணம்.
அன்றிலிருந்து அந்த நெருப்பு கோழிக்கு மட்டும் தனியே தானியங்கள் வைக்க தொடங்கினோம். எங்களுக்கும், என்னவோ அந்த கோழியை ரொம்ப பிடித்து போனது. இரண்டு மூன்று இருந்தாலும் ,
அந்த சாம்பல் நிறத்தவள் மேல் ஏனோ ஒரு ஈர்ப்பு, பெண் என்பதனாலா என்று தெரியவில்லை. அதுவும் ரொம்ப பழகிப் போனது. காலையிலேயே ஜன்னல் பக்கமாக நின்று பார்க்கும். அம்மாவும் அதோடு பேச்சு
கொடுக்க தொடங்கினாள். இரு வரேன், கத்தாதே, வெயிட் பன்னு, என்று ஏதேதோ பேசுவாள். அதுவும் சொன்ன பேச்சை கேட்கும். வீட்டிற்கு வாங்கிய கீரையெல்லாம், அதற்கு உணவாகியது. நான் தட்டுடன் பின்பக்கம் சென்றால், என்னை பார்த்தவுடன், ஓடிவந்து, என் கையிலிருந்து கொத்த தொடங்கும். என்னையும் பார்த்து இப்படி ஒரு ஜீவன் என்று, எனக்கும் சந்தோஷமாக இருந்தது. இப்படியாக அந்த நெருப்பு கோழி எங்கள் குடும்ப உறுப்பினர் ஆகியது. நானும் உரிமையாக ஒரு நாள், ஏண்டி, அந்த சாதா கோழி சாதா முட்டை போடும் , அப்ப, நீ நெருப்பு கோழி ஆச்சே, நீ அவிச்ச முட்டை போடுவியா, என்றேன் .
அந்த கோழி கடுப்பாகி, இல்லேடா, ஆம்லெட் போடுவேன், வேணும்னா வெங்காயம் வெட்டி எடுத்துட்டு வா.. என்று கத்தியது, (இல்லை திட்டியது)…. அந்த சப்பானி போல, ஆத்தா ஆடு வளர்க விடல, நாய் வளர்க்க விடல, இந்த நெருப்பு கோழியை தான் வளர்த்துச்சு என்று சந்தோஷப்பட்டு கொண்டேன்.
அம்மாவிற்கும் பேச்சு துணைக்கு ஆள் கிடைத்தது. இப்படியாக இனிதே, போய் கொண்டிருந்த, என் வாழ்க்கையில், கெட்ட நேரம் ஆரம்பித்தது. நான் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலே, அந்த ஆண்டவனுக்கு பிடிக்காது. என்னை காண விட்டேன் என்கிறான். நேற்று, ஞாயிற்று கிழமை, என்னவோ அதை காணவில்லை. அம்மா புலம்ப தொடங்கினாள். எங்கடா போனே என்று அரற்றினாள். ஞாயிற்றுகிழமை ஒரே களேபரமாகி போனது. புதர் மண்டி கிடக்கும் அந்த பண்ணை வீட்டில், அங்கேதான் எங்காவது இருக்கும் என்று அதன் அருகில் சென்று “கோழி,… கோழி” என்று கூப்பிட்டு பார்த்தேன், பதில் இல்லை. வைத்த தானியம் அப்படியே இருந்தது. நெடு நேரம் கழித்து தானியம் மாயமாகி இருந்தது. எப்ப வந்துது, நான் பார்க்கலையே என்று அன்றைய பொழு போனது மறுநாள்…., அங்கேயே அதோட சாப்பாடை போட்டுடு, அது வந்து சாப்பிடும். நான் போட்டுவிட்டு, ஆபீஸ் போய் விட்டேன். அதற்கு பிறகு மறந்துவிட்டது. மதிய உணவு இடைவேளையில் நியாபகம் வந்தது.
தொலைபேசியில் கூப்பிட்டேன். கோழி வந்துதாம்மா..
போடா, அதை காணும், புறா வந்து சாப்பிட்டு போச்சு.. எனக்கு சாப்பிடவே பிடிக்கலை என்றாள்.
எனக்கும் தான். நாளைக்கு வந்திடும் என்று சமாதானம் சொன்னேன். அட போடா, அதை எவன் சாப்பிட்டானோ, யார் வயித்துக்குள்ள இருக்கோ, பாவம் என்று திட்டி தீர்த்தாள். இன்றோடு, நாலு நாள் ஆயிற்று, காணவில்லை அந்த மான் மீது வைத்த ஆசையில், மறு பிறவி எடுத்து, மானாய் பிறந்த அந்த பரத சக்கரவர்த்தி போல, நானும் ஒரு நெருப்பு கோழியாய் பிறப்பேனோ என்னவோ, யார் கண்டது.
எங்கிருந்தோ வந்தாய்
இடைச்சாதி நானென்றாய்….
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.