ஒரு நாள் போட்டி கதை: ஒரு “பூ”வின் புலம்பல்

by admin 2
39 views

எழுதியவர்: குட்டிபாலா 

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் ஆபாச நடிகையோடு!

நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த மதிவாணனின் கைபேசி சிணுங்கியது. தன் பள்ளித்தோழி பாமா- தற்போது  திரைவானில் பிரபல ஆடலழகி. “என்னவாக இருக்கும் இந்த காலை நேரத்தில் அழைப்பதற்கு” என்று யோசித்தபடி “ஹலோ  வெகு நாட்களுக்குப் பின் அழைக்கிறாயே? அதுவும் அதிகாலையில்! ஏதும் அவசரமா?” என்றான்.
“அவசரந்தான். உள்ளன்போடு எனக்கு ஆலோசனையும் ஆறுதலும் தருவது நீ மட்டுந்தானே மதி. மதிய உணவுக்கு என் வீட்டுக்கு வர முடியுமா?” என்றாள். “அவசியம் வருகிறேன்.  இரண்டு மணிக்குள் வந்தால் போதுமா?” என்றவனிடம் “ஓகே. உனக்காக காத்திருப்பேன்” என்ற  பாமாவின் குரலில் ஒருவித சோகம்
இழையோடியதை அவனால் உணர முடிந்தது. நடந்தபடியே பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தான்.
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் மடியில் உள்ள தென்காசி மாவட்டத்தின் நேர்த்தியான ஒரு கிராமத்தில் வசித்து வந்தன இருவர் குடும்பங்களும். இருவரும் ஆரம்பப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்தனர். சிறுவயதிலிருந்தே பாமாவுக்கு பள்ளி விழாக்களில் பாட்டு, நடனம், பேச்சு போட்டிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அநேகமாக முதல் பரிசை அவளே தட்டி செல்வாள். படிப்பு சராசரி தான். எப்படியோ தட்டுத்தடுமாறி தோல்வி
அடையாமல் பத்தாம் வகுப்புவரை வந்துவிட்டாள். பத்தாம் வகுப்பு முடிந்தது. ஆண்டு விழாவில் பாமா சிலப்பதிகார நாடகத்தில் மாதவி கதாபாத்திரமேற்று நடித்தாள். அந்த  விழாவிற்கு  எங்கள் ஊரை சேர்ந்த திரைப்பட இணை இயக்குனர் மாயக்கூத்தன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.  பாமாவின் நடிப்பை வெகுவாக புகழ்ந்து பாராட்டியவர் அவள் திரைப்படத்துறைக்கு நடிக்க வருவதாக இருந்தால், தான் உதவி செய்வதாயும் அவளிடம் எதிர்காலத்தில் தலைசிறந்த நடிகையாவதற்கான திறமைகள்
நிறைந்திருப்பதாகவும் கூறினார். சில மாதங்கள் சென்று அவரது பெற்றோர்கள் “படிப்புதான் சரியாக வரவில்லை. சினிமா பக்கம் அனுப்பிவிடலாம்” என்று முடிவு செய்து சென்னைக்கு வந்து மாயக்கூத்தன் மூலமாக நடிகையாகி விட்டாள். அவளுடைய அதிர்ஷ்டம் முதல்  படத்திலேயே புகழ்பெற்ற பெரிய நடிகரோடு கதாநாயகியாக நடித்தாள். அதைவிட பெரிய அதிர்ஷ்டம் அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. இப்படித்தான் பாமா பெரிய நடிகையானது. ஆனால் எவருக்கும் அதிர்ஷ்டக் காற்று எப்போதும் ஒரே திசையில் வீசுவதில்லையல்லவா! மூன்று தொடர் வெற்றிப் படங்களுக்குப் பின் அவள் வாழ்வில் வீசிய ஒளி திடீரென்று மறைந்து இருளாகிவிட்டது. ஆம். மூன்று படங்களும் அதே பிரபல கதாநாயகரோடுதான். மூன்றும் வெற்றிப் படங்களே. இருப்பினும் திரையுலகில் ‘அந்த வெற்றிக்கு காரணம் பாமாவின் நடிப்பே’ என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது. இது அவர் மனதில் பொறாமைத்தீயை வித்திட்டது. விளைவு- அவளுக்கு அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளை மறைமுகமாக  தடுத்துவிட்டார் அந்த கதாநாயக வில்லன். இவளும் பெற்றோரும் புதுப்பணக்காரர்களுக்கே உரிய வகையில் மூன்று படங்களில் சம்பாதித்ததை அதிகமான ஆடம்பரத்தில் செலவிட்டு விட்டார்கள்.  அடுத்து என்ன செய்வது என்று விழி பிதுங்கிய நிலையில் மாயக்கூத்தனின் சிபாரிசில் இரண்டு
படங்களில் நடனமாட வாய்ப்பு கிட்டியது. அதுவும் அரைகுறை ஆடைகளோடு. வேறு வழியின்றி ஒத்துக்கொண்டாள். மீண்டும் அவளிடம் திரும்பியது அதிர்ஷ்டம். அதற்குப் பிறகு வெளிவந்த படங்கள்
அனைத்திலும் பாமாவின் நடனக்காட்சி ஒன்றாவது இருந்தாக வேண்டும் என்ற எழுதப்படாத நியதி உருவாகி விட்டது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மத்தியில். கதாநாயகியாக ஜொலித்தவள் இப்போது தவிர்க்க முடியாத கவர்ச்சி நாயகியாகிவிட்டாள்.
ஏறக்குறைய 15 ஆண்டுகளாக திரையுலக வாழ்வில் இருப்பதால்  அவளிடம் பணத்திற்கும் பங்களா, கார் போன்ற வசதிகளுக்கும் எவ்வித குறைவும் இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவள் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்ட சோகத்தில் சில மாதங்கள் வருந்தினாள்.  அவளுக்கென்று சுற்றமோ நட்போ என்றுமே இருந்ததில்லை எப்போதும். தனிமை அவளை வாட்டியது. அந்த காலகட்டத்தில் வாரந்தவறாது தான் நேரில் சென்று அவளைத் தேற்றி ஆறுதல் கூறியது  நினைவுக்கு வந்தது.  அதன்பிறகு எல்லாமே தொலைபேசியிலும் கைபேசியிலுந்தான். அப்படியிருக்கையில் இன்று “அவசரம்.  நேரில் பேச அழைக்கிறாளே” என்று யோசித்தான். மொபைலில் அவளுடன் பேசுவதையே சற்றும் விரும்பாத தன் வக்கீல் மனைவி சுகுணா நேரில் போவது பற்றி என்ன நினைப்பாளோ என்று தயங்கினான். வீடு திரும்பிதும் மனைவியிடம் “சுகுணா, இன்று நாம் மதிய உணவுக்கு ஒரு விஐபி வீட்டிற்கு விருந்துக்கு போகிறோம். ஒரு மணிக்கு நான் கோர்ட்டுக்கு வந்து விடுகிறேன். நீ தயாராக இரு” என்று சொல்லியவாறே துவாலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். “யார் அந்த விஐபி?” என்ற அவள் கேள்விக்கு கதவை லேசாகத் திறந்து “சஸ்பென்ஸ்” என்று கண்களை சிமிட்டி சிரித்து
கதவை தாளிட்டான். சரியாக இரண்டு மணிக்கு பாமா வீட்டு முன் காரை நிறுத்தி “சுகுணா, வா, இறங்கு”
என்றதும்  பெயர் பலகையைப் பார்த்த சுகுணா “போயும் போயும் இவளையா விஐபி என்றாய்? உன்னோடு தொலைகிறதென்று பார்த்தால் என்னையும் கூட்டி வந்திருக்கிறாயே?” என்று கோபமாக கூறியவள் இறங்க மறுத்தாள். “உண்மையிலேயே இவள் விஐபி தானா என்பதை தெரிந்து கொள்ள
வேண்டுமென்றால்– அதைவிட என் மீது உனக்கு முழு நம்பிக்கை உள்ளதென்றால் உள்ளே வா” என்று கார் கதவை அடைத்து விட்டு வாயிற்கதவின் காலிங் பெல்லை அழுத்தினான்.

அவனைப் பார்த்து குரைத்த ஜிம்மியை குரலால் அடக்கிய பாமா  பால்கனியிலிருந்து கீழே இறங்கி கதவை திறந்து “வா, மதி” என்று வரவேற்றாள்.  காரிலிருந்து இன்னும் இறங்காமல் உட்கார்ந்திருந்த சுகுணாவை “வாங்க மிஸஸ் மதி” என்று கூப்பிட்டாள். இதற்குள் அவளை கடந்து சென்றுவிட்ட மதிவாணனை கவனித்த சுகுணாவின் மனதில் பெரும் குழப்பம்- உள்ளே போவதா, வேண்டாமா என்று. இரண்டு வருட திருமண வாழ்க்கையில் இதுவரை குழப்பம் ஏதுமில்லையென்றாலும்  அடிக்கடி அவன்
இந்த நடிகையிடம் தொலைபேசியில் சிரித்து சிரித்து பேசுவதே  அவளுக்கு அறவே பிடிக்காது. இப்போது அவன் தன்னை முழுவதுமாக உதாசீனப்படுத்திவிட்டு அந்த நடிகையின் வீட்டுக்குள் ஏதோ சொந்த வீட்டில் நுழைவதுபோல் செல்வதுகண்டு பொறுக்க முடியவில்லை அவளால்.  அதே நேரம் பாமா படிகளில் இறங்கி கார் கதவைத் திறந்து “வாங்க மேடம்” என்று கையைப் பிடித்து இழுத்தாள். கையில் ஏதோ பூரானோ பாம்பு ஊர்வது போல் உணர்ந்த சுகுணா அவள் கையை நைஸாக தட்டி விட்டு கீழே இறங்கி பாமாவை தொடர்ந்து உள்ளே நுழைந்தாள்.
“பாமா, என்னவோ அவசரம் என்றாயே, சொல்” என்ற மதிவாணனிடம் “மதி, சாப்பிட்டு கொண்டே பேசலாம். வாருங்கள்.  அதற்குள் இந்த கடிதத்தை மட்டும் படி” என்று சொல்லி மேசையிலிருந்து கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள் பாமா. கடிதத்தை முழுவதும் படித்து முடித்த மதி “இந்த தங்கவேலன் வெறும் பித்தளைவேலன். ஏதோ உத்தமமான செயல்களால் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரானது போல நீ அனுப்பிய நன்கொடையை ‘ஆபாச நடிகையின் பணத்தை ஏற்றுக் கொள்வதில் பெரும்பான்மை உறுப்பினர்கட்கு சம்மதம் இல்லை’ என்று காரணம் கூறி திருப்பி அனுப்பியுள்ளான். இரண்டு ஆண்டுகட்கு முன் நம் ஊர் கோவில் திருவிழாவிற்கு உனது நாட்டியத்திற்கு ஏற்பாடு செய்தது இவன்தானே. அப்போது தெரியவில்லையா ஆபாச நடிகை என்று!? எப்படி தெரியும்? விழா முடிந்து
உன்னை அவன் வீட்டில் இரவு தனியாக தங்குவதற்கு தந்திரமாக ஏற்பாடு செய்ததை நீ சாமர்த்தியமாக சமாளித்து எங்களோடு நெல்லைக்கு வந்ததன் எரிச்சல் இன்னும் அடங்கவில்லை போலும் இந்த பெரிய மனிதனுக்கு. அந்த உண்மையை நீ கண்ணியம் கருதி வெளியில் சொல்லவில்லை. அது உன் பெருந்தன்மை. இவனைப் போன்ற ஆபாச மிருகங்களுக்கு அதெல்லாம் எப்படி புரியும். பணத்திமிராலும் பாரம்பரிய பெருமை பேசியும் ஊராட்சி மன்ற தலைவர், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர்,
பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் என்று ஊரில் உள்ள எல்லா பதவிகளையும் கபளீகரம் செய்து வைத்துள்ளான். உன் வளர்ச்சியின் மீது அவனுக்குள்ள பொறாமையின் வெளிப்பாடுதான் இந்த கடிதம். உன் தாயும் தந்தையும் அவர் பண்ணையில் வேலை செய்யும் போது உன்னை பள்ளியில் சேர்ந்து படிக்கவே அனுமதி மறுத்தவர்தானே இந்த புண்ணியவான். இப்போது செல்வ செழிப்போடு நீ வாழ்வது பொறுக்காமல் இப்படி செய்திருக்கிறார். மேலும் இவ்வளவு பெருந்தொகையை நீ கொடுப்பதால் ஊருக்குள் கோலோச்சிவரும் தன் பரம்பரை கௌரவம் மங்கிவிடும் என்பதும் முக்கிய காரணம். இவர் கிடக்கிறார் விடு. நம்மூர் பள்ளிக்கு கொடுத்துவைக்கவில்லை. எத்தனையோ பள்ளிகளும் அனாதை
ஆசிரமங்களும் முதியோர் இல்லங்களும் இது போன்ற நன்கொடை எதிர்பார்த்து நாடெங்கும் காத்திருக்கின்றன. அவற்றுக்கு கொடுக்கலாம். கவலையை விடு” என்றான். “இல்லை மதி. என் முதல்படம் வெற்றியடைந்ததும் முதன்முதலாக நம் பள்ளியில்  மாணவிகளுக்கு கழிப்பறை இல்லாததால் முன்பு நாங்கள் அனுபவித்த துன்பங்கள் பிறருக்கு நேரக்கூடாதென்று கழிப்பறை கட்ட 10 லட்சம் கொடுத்தேன். அதன் பிறகு ஆசிரியர் ஓய்வு அறை கட்டுவது, நூலகத்திற்கு அலமாரிகள், புத்தகங்கள் வாங்குவது போன்ற பல காரியங்களுக்கு அவர்கள் என்னிடம் கேட்டபோதெல்லாம் நன்கொடை
அளித்திருக்கிறேன். இப்போது நான் படங்களில் நடிப்பதை அறவே நிறுத்திவிட்டு ரிஷிகேஷ், காசி, மதுரா போன்ற இடங்களில் சென்று நிரந்தரமாக தங்கி எஞ்சியுள்ள வாழ்நாளை கழித்துவிட தீர்மானித்திருக்கிறேன். அதற்காகவே இந்த வீட்டைத் தவிர மற்ற சொத்துக்களையெல்லாம்  விற்றுவிட்டேன். பெரும் பகுதியை நம்மை ஆளாக்கிய நம்  பள்ளிக்கு தர வேண்டும் என்றுதான் இந்த இரண்டு கோடியை அனுப்பினேன். எத்தனையோ முறை நடிகையாக நான் அனுப்பிய  நன்கொடையை ஏற்றுக்கொண்ட நம் பள்ளி இம்முறை ஆபாசநடிகை என்று கூறி மறுதலிப்பது மிகுந்த வேதனையாக
இருக்கிறது. என்னை முழுமையாக தெரிந்துகொண்டவன் நீ ஒருவனே. இந்த பணம் முழுவதும் என் நேர்மையான உழைப்பில் சம்பாதித்ததுதான் என்பது உனக்கு மட்டுமாவது தெரியும் என்று நம்புகிறேன்”  என்று நிறுத்தி கண்களை துடைத்துக் கொண்டாள்.
தொடர்ந்து “மதி,  அடுத்த மாதம் நான் வட இந்திய யாத்திரைக்கு திட்டமிட்டுள்ளேன். அதற்கு முன் இந்த இரண்டு கோடியை நம் பள்ளிக்கு உன் பெயரில் அனுப்பிட வேண்டும். அதற்கு உன் சம்மதமும் உதவியும் கேட்கவே உன்னை வரவழைத்தேன்” என்றாள்.
திகைத்த மதி “அய்யய்யோ! இத்தனை பெரிய தொகையை நான் கையாள முடியாது. வருமான வரி மற்றும் எத்தனையோ சிக்கல்கள் வரும்” என்றவனிடம் “மதி, எனக்கென்று உறவினர்கள் யாரும் இல்லை; நண்பன் என்பதும் நீ மட்டும் தான்  என்பது உனக்கு நன்றாகத் தெரியும். என் கடைசி ஆசை நான் சம்பாதித்ததெல்லாம்  நம் பள்ளியின் வளர்ச்சிக்குக்கு போய் சேர வேண்டும்”  என்றாள் கண்ணீருடன்.
எல்லாவற்றையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த சுகுணா “அக்கா கவலைப்படாதீர்கள். காலஞ்சென்ற உங்கள் பெற்றோர் பெயரில் டிரஸ்ட் ஒன்று தொடங்கி அதன் மூலம் உங்கள் பள்ளிக்கு மட்டுமல்ல. நீங்கள் விரும்பும் வேறு சேவைகளுக்குங்கூட உதவ முடியும். நீங்களே ட்ரஸ்டியாக இருக்கலாம்” என்றாள். “நன்றி மேடம். ஆனால் என் பெயர் எதிலும் வேண்டாம். சட்டம் தரும் சலுகை கூட சமுதாயம் தர மறுக்கிறதே அம்மா. என் பெயரையோ என் பெற்றோர் பெயர்களையோ பார்த்தால் தங்கவேல் போன்ற ஊர் பெரியவர்கள் மறுபடியும் நிராகரிக்க வாய்ப்பாகிவிடும்.”
“பூஜைக்குரிய பூக்களே ஆயினும் அர்ச்சனைக்கு தகுந்த பூசாரி வேண்டுமல்லவா. அதனால் என் ஒரே உறவும் ஒரே நட்புமான மதிவாணன் பெயரிலும் உங்கள் பெயரிலும் டிரஸ்ட் தொடங்க ஆவன செய்யுங்கள்” என்றாள் பாமா.

பாமாவின் வீட்டிலிருந்து திரும்பும் போது “ஊர் மீதும் படித்த பள்ளியின் மீதும் இவ்வளவு பாசம் வைத்துள்ள நம் பாமாவை ஆபாச நடிகை என்று சொல்லும் அந்த பொறாமைக்கார தங்கவேலர்தான் ஆபாசமானவர்– எண்ணத்தால்..”  என்றாள் சுகுணா.
“அவர் மட்டுமல்ல நீயுந்தான் சற்று நேரம் முன்பு வரை.  இப்போது சொல். அவள் விஐபியா இல்லையா” என்ற மதிவாணனின் தோளில் சாய்ந்தபடி “அக்கா பாமா மட்டுமல்ல. நீங்களுந்தான் விஐபி” என்றாள் சுகுணா.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!