ஒரு நாள் போட்டி கதை: கண்டதே காட்சி 

by admin 2
60 views

எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் 

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்பிணியோடு!

“ஏர்போர்ட்டில் இருந்து கிண்டியில் இருக்கிற வீட்டிற்கு வர ஒரு மணி நேரம் ஆகுது. ராதாக்கு போன் பண்ணா எடுக்கலை. என்ன பண்றா?” கோபமாக தனக்குள் பேசிக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டு வந்தான் ராதா ஆர்க்கிடெக்சர் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் M.D. ராஜ சேகர்.

‘நான் ஏன் இப்படி புலம்பறேன்? அவ கர்ப்பிணி பெண். தூங்கிக் கொண்டிருப்பாள்.’ தனக்குள் பேசினான்.

வீட்டை அடைந்த ராஜசேகர் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார். கதவை திறக்காததால் தன்னிடம் உள்ள சாவியால் திறந்து கொண்டு உள்ளேச் சென்றான்.

“ராதா..! என்னம்மா.. லைட் கூட போடாம. தூங்கறயா..! ” என்று கூறிக் கொண்டே படுக்கை அறைக்குச் சென்றான். 

அங்கு அசையாமல் படுத்திருந்த ராதாவின் அருகில் சென்றான். 

பீரோ திறந்து இருந்தது. சந்தேகத்துடன் மூக்கின் அருகில் விரல் வைத்துப் பார்த்த ராஜ சேகர் “ராதா.. என்னம்மா..! இப்படி செஞ்சுட்டயே..” என்று கத்தியபடி ஆம்புலன்ஸ்க்கும் போலீசுக்கும் தகவல் தந்தான்.

காவலர்கள் வந்ததும் அறை முழுவதும் சுற்றிப் பார்த்தனர்.  அலமாரியில் பின்னால் 

ஒரு திருடன்.  அது வரை அமைதியாக இருந்த ராஜசேகர் “ஏன்டா என் கண்மனியைக் கொலை செஞ்ச? பணம், நகையை கேட்டா நானே கொடுத்திருப்பேனே..”என்று ஆவேசமாக அவனை அடிக்கப் போனான். காவல் அதிகாரி ராஜசேகரைத் தடுத்தார்.

“பாருங்க. நகையை மூட்டை கட்டி வச்சிருக்கான்.” என்று மற்றொரு காவல் அதிகாரி காட்டினார்.

“நான் எதுவும் எடுக்கலை. திருட வந்தது உண்மைதான். ஆனா நான் வரும் போது இந்த அம்மா தண்ணிக்கு தவிச்சுது. தண்ணி குடுத்தேன். அம்புடுத்தான். அப்ப இந்த அலமாரியில சாவி தொங்கினு இருந்தது. திறந்து பார்த்தா ஒன்னும் இல்லை.”

“ஏன்டா.. இந்த மூட்டையில எல்லா நகையையும் கட்டி வச்சுட்டு பொய் சொல்லறயா?” என்று ஒரு தட்டு தட்டினார் காவல் துறை இன்ஸ்பெக்டர்.

ராதாவின் உடலை உடல் கூறு ஆய்வுக்கு கொண்டு சென்றனர். ராஜசேகர் யாருடனும் பேசாமல் இருந்தார். துக்கம் விசாரிக்க பலர் வந்து சென்றனர். அனைவரும் கேட்ட ஒரே கேள்வி “நிறை மாத கர்ப்பிணியை தனியா  விட்டுட்டு ஏன் போன?”

உடல் கூறு ஆய்வு தகவல் படி முதல் நாள் ஏழு மணிக்கு இறந்திருக்கிறார். ஏதோ ஒரு விஷம் உடம்பில் கலந்து உள்ளது. 

இந்த மரணம்  அனைத்து ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் பேசு பொருளானது. 

அந்த திருடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டான்.  அவனை ஒரு வாரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றனர்.

சாம, பேத, தண்டம் உபயோகித்தும் ஒரு பிரயோஜனமில்லை.

எத்தனை முயன்றும் அவன் பதில் ஒன்றே தான். “எனக்கு ஒன்றும் தெரியாது. நான் கொலை செய்யலை.” அதையே திரும்ப திரும்ப சொன்னான்.

வழக்கு விசாரணைக்கு வந்தது. திருடனுக்கு வாதாட ஒருவரும் இல்லை. ராகுல் என்ற இளைஞன் திருடன் பக்க நியாயம் இருப்பதாக நினைத்தான். 

தனியாகப் பார்த்து அவனிடம் பேசினான்.  அவன் பெயர் மணி என்றும் பக்கத்து கிராமம் என்றான். கிளிப் பிள்ளையைப் போல்  திரும்ப திரும்ப தான் கொலை செய்ய வில்லை என்று கூறினான்.

அலமாரியில், தண்ணீர் பாட்டிலில் கொலைகாரன் மணியின் கை ரேகை இருந்தது.

நீதிமன்றத்திற்கு அவனை காவல் துறையினர் அழைத்து வந்தனர். 

ராகுல், துடிப்பான இளம் வக்கீல் மணிக்காக ஆஜரானார்.

அந்த வீட்டின் கேமராவில் ராஜ சேகர் மதியம் இரண்டு மணிக்கு வெளியே செல்வதும் ஏழு மணிக்கு திருடன் பின் பக்கமாக வருவதும் தெளிவாக தெரிந்தது.

ராகுல் “திருடிட்டு ஏன் வெளியே போகவில்லை.?”என்ற கேள்வியை மணியிடம் கேட்டார்.

” ஏங்க.. நீங்க வேற. நான் திருடலை. எனக்கு திருடறது தொழிலும் இல்லை.”

எதிர் தரப்பு வக்கீல்” அப்ஜெக்க்ஷன். அவன் தொழில் என்ன என்பது பிரச்சினையில்லை. இந்த கேஸ் தெளிவானது. கையும் களவுமாக பிடி பட்டு இருக்கான். யுவர் ஆனர்.. அவனுக்கு தூக்கு தண்டனை அளித்து நீதியை நிலை நாட்டுங்க ” என்றார்.

“நடந்ததை  நடந்தபடி சொல் “என்று ராகுல் கூறினார்.

“கிராமத்தில் விவசாயம் இல்லை. புள்ளை குட்டி எல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டம். திருடலாம் னு வந்தேன். இந்த வீட்டில கேட் திறந்து இருந்தது.”

“செக்யூரிட்டி இல்லையா?”

“ஒருத்தரும் இல்லை. முன் வாசல் பூட்டி இருந்தது.பின்னாடி போனா கதவு திறந்து இருந்தது .’வா வா’ கூப்பிடற மாதிரி இருந்தது. உள்ளே போனேன். கீழே இரண்டு ரூம். மாடி யெல்லாம் இல்லை. அந்த அம்மா படுத்து இருந்தது. 

“அப்ப அந்த அம்மா உயிரோட இருந்ததா?”

“என் காலடி சத்தம் கேட்டு தண்ணினு ஜாடை காட்டிச்சு.”

“யுவர் ஆனர்.. வக்கீல் திசை திருப்ப அவன் கிட்ட கதை கேட்கிறார்.”

“இப்படி பேசவே விடாமல் கிடைக்கறவனை குற்றவாளி ஆக்கறது ஞாயமில்லை”

நீதிபதி”சுருக்கமாக சொல்லுப்பா “என்றார்.

“கொஞ்ச நேரத்தில் அந்த அம்மா கண்ணை மூடிக்கிட்டாங்க. பீரோல சாவி இருந்தது. திறந்து பார்த்தா நகை நட்டு, பணம் எதுவும் இல்லை.

அடுத்த ரூமுல போய் பார்க்கலாம் நினைச்ச போது அறை கதவை வெளியே பூட்டிட்டாங்க. அந்த அம்மா கழுத்தில் இருக்கிறதை கழட்டி எடுக்கலாம் னு கிட்ட போனதும் தான் தெரிந்தது அந்த அம்மா செத்து போயிருக்குனு.”

“உன் கதையை சினிமா எடுக்கலாம்.”

எதிர் தரப்பு வக்கீல்.

“ஒரு நாள் ஃபுல்லா செத்து போன கர்ப்பிணி பொண்ணோட இருந்து பார்த்தா உங்களுக்கு தெரியும் கஷ்டம். கதவை தட்டினா யாரும் திறக்கலை. பசியோட அந்த பொண்ணு முகத்தை பார்த்துக் கிட்டே இருந்தேன். பாவமா இருந்துச்சு. பயமாகவும் இருந்துச்சு.”

ராஜசேகரை விசாரித்தனர்.

அரசாங்க வக்கீல் “நீங்க எங்க போனீங்க? எதற்கு போனீங்க?”

ராஜசேகர்  பாம்பே மீட்டிங்கில் கலந்து கொண்ட போட்டோக்களையும் விமான டிக்கெட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

“ராஜசேகர்.. நீங்க எல்லாவற்றையும் தயாராக வைத்து இருக்கிறீர்கள்”என்றார் ராகுல்.

“என் மனைவியை இழந்து நான் நொடிந்து போய் இருக்கேன். என்னையே கொலைகாரன் ஆக்கிடுவிங்க போல இருக்கே.”என்றார் ராஜசேகர்.

நீதிபதி வழக்கை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

ராகுலுக்கு குழப்பம் அதிகமாச்சு. ‘அந்த திருடன் கொலை செய்யலை. ராஜசேகரும் கொலை செய்யலை. அந்த இரக்கமில்லாத மூன்றாவது நபர் யார்!’

மறுநாள் அந்த வீதி வழியாக செல்லும் போது கொலை நடந்த வீட்டின் எதிர் வீட்டில் வீட்டை காலி செய்ய வேன் நின்றது. ஆனால் சாமான் எதுவும் இல்லை. இரண்டு கட்டில் மட்டுமே.

உள்ளே சென்று “வீடு வாடகைக்கு வேண்டும்.” என்றதும் செக்யூரிட்டி “ஆமாம். இந்த ஆள் ஒரு வாரம் முன்னாடி தான் வந்தார். இன்றைக்கு காலி செய்கிறார்”என்றதும் ஏதோ நெருடலாக இருந்தது.

தூரத்தில் இருந்து அவனை போட்டோ எடுத்துக் கொண்டார். எப்போதும் ராகுல் பட்டன் கேமிராவை வைத்து இருப்பார். அவர்களுக்கு தெரியாமல் ஒரு கேமராவை கட்டில் அடியில் வைத்தார்.

அந்த வேனைப் பின்பற்றி சென்றார் ராகுல்.

அவன் ஒரு பங்களாவிற்கு சென்றான். கட்டிலை ஆட்கள் உள்ள கொண்டு சென்றனர்.

அவர்களுக்கு தெரியாமல் ஜன்னல் அருகே நின்று கவனித்தான்.

“டேய் மச்சி.. என்ன போட்டு தள்ளிட்ட போல. இன்றைக்கு செய்தியே இதுதான்.”

“வசதியா ஒருத்தன் உள்ளே வந்தான். அவ வீட்டு வேலைக்காரி நம்ம ஆள். பின் கதவை திறந்து வச்சிருந்தா. ஒரு திருடன் உள்ளே வந்தான். விஷத்தை வேலைக்காரி கொடுத்துட்டா. அந்த திருடனை உள்ளே வச்சு பூட்டிட்டோம். 

கரண்டை நிறுத்திக் டோம். அந்த தெருவுக்கே பவர் இல்லை. மறுநாள் அவ புருஷன் வரும் நேரம் அந்த திருடனை திறந்து விட்டோம். பின்னாடி கதவையும் திறந்து வச்சோம்.”

அவன் பேசியது எல்லாம் நீதிபதிக்கு கேட்கும் படி  ராகுல் செய்து இருந்தான். நீதிபதி போலீஸ் கமிஷனரிடம் கூறி கைது செய்ய ஏற்பாடு செய்தார்.

 போலீஸ் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர் . அவனைக் கைது செய்தனர்.

“எதுக்கு சார் என்னை கைது செய்யறீங்க?”

“இதோ பார் அரெஸ்ட் வாரென்ட்”என்று காட்டினர். 

மறுநாள் நீதி மன்றமே ஆவலுடன் தீர்ப்புக்காக காத்து இருந்தது.

அவன் பெயர் கார்த்திக். அரசியல் புள்ளியின் மகன். அவனுடைய குற்றங்களை அவன் தந்தை ஆதரித்ததால் பல பெண்களை கெடுத்து தூர எரிந்தவன். அதில் ஒருத்தி இந்த கொலையுண்ட ராதா. 

“அந்த வீடியோவை போட்டு காட்டுங்க” என்றார் ராகுல்.

அந்த வீடியோவை போட்டு காட்டியதும், வேறு வழியின்றி குற்றத்தை கார்த்திக் ஒத்துக் கொண்டான்.

“எதற்காக கொலை செய்தார்?”என்று ராகுல் கேட்டதும்  அவனே காரணத்தை கூற ஆரம்பித்தான். 

“ராதா வித்தியாசமானவள். நான் ஏமாற்றியதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேறு ஒருவனை கல்யாணம் செய்துக் கொண்டு வசதியாக வாழ்ந்தாள். அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவளை தொந்தரவு செய்தேன். அவள் ஒத்துக் கொள்ளாததால் வேலைக்காரி உதவியுடன் கொலை செய்தேன். 

என் அதிர்ஷ்டம் இவன் வந்ததும் அவனைக் மாட்டி விட்டேன். கேமிரா பதிவைத் தவிர்க்க அந்த தெருவுக்கே மின்சாரத்தை தடை செய்தேன் “

என்று உண்மையை ஒத்துக் கொண்டதால் அப்பாவி மணி விடுதலையானார்.

ராகுல் வக்கீலை அனைவராலும் போற்றினர்.

நீதிபதி “கண்டதே காட்சி என்று முடி வெடுப்பதை காவல் துறை மாற்றிக் கொள்ள வேண்டும்.” என்று எச்சரிக்கை விடுத்தார்.

ராகுலை நீதிபதி பாராட்டினார்.

“ஐயா.. தெய்வமே என்னை காப்பாத்த னீங்க.” என்று காலில் விழுந்து நன்றி தெரிவித்தான்.

“மணி.. உனக்கு செக்யூரிட்டி வேலை வாங்கி தரேன். இந்த விலாசத்துக்கு வா”என்று விலாசம் தந்தார்.

ராகுலுக்கு ராஜசேகரும் நன்றி தெரிவித்தார். அது மட்டும் அல்லாமல் அவருக்குரிய வக்கீல் பீஸையும் கொடுத்தார்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!