எழுதியவர்: நா. பத்மாவதி
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு!
ஆதவனின் கிரணங்கள் ஒளிவீசும் அந்த காலையின் சுறுசுறுப்பை ஜன்னலைத் திறந்து ரசித்துக் கொண்டிருந்தான் கவின்.
எத்தனை விதமான மனிதர்கள், அவசரமாக அலுவலகம் செல்பவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், வியாபாரிகள் என பலவாறு யோசித்தபடி வேடிக்கைப் பார்த்த நம் கதையின் நாயகன் கவின் பல சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கள் என எழுதும் பிரபல எழுத்தாளன்.
ஆனாலும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவன். கவினுக்கு ஒரு வித்தியாசமான ஆசை அதாவது சிறைச்சாலைக் கைதிகளை சந்தித்து அவர்களோடு உரையாடி அந்த அனுபவங்களை எழுத வேண்டும் என்பது பலநாள் கனவு. சீக்கரமே நினைவாக வேண்டும் என பலவாறு எண்ணியபடி
அலுவலகத்திற்கு செல்ல தயாரானான் கவின்.
அப்பொழுது தொலைபேசி அழைக்க பால்ய நண்பர் ஆரவ், போலீஸ் அதிகாரி
“ஹலோ கவின், நீ சீக்கிரமே வந்துடு, காவல்துறை தலைமையகத்திற்கு ஒரு விசேஷம் இருக்கு,” என்றார் மிக சந்தோஷமாக ஒரு அதிரடியான அழைப்பை ஏற்படுத்தினார்.
வீட்டில் இருந்து கிளம்பியவன் என்னவாக இருக்குமென வழி நெடுகிலும் யோசித்தபடி சென்றான். “வா வா உனக்காக தான் காத்திருக்கிறேன்” என்று அவர்களது புலனாய்வு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். சுமார் முப்பது வயது இருக்கும். கண்ணாடி அணிந்து தலையில் குறுகிய முடிகள், முகம் மறைத்த தாடியோடு அவன் ஒரு சாதாரண மனிதனாகத் தெரிந்தான்.
கவினை வெளியே அழைத்த ஆரவ் “டேய் நீ ரொம்ப நாளா ஆசைப்பட்ட இல்ல சிறைக் கைதியின் அனுபவம் பற்றி கேக்கணும்னு இவன்கிட்ட பேசி தெரிஞ்சுக்கோ அவன் “தொடர் கொலைகாரன்” அதாவது நிறைய கொலைகள் செய்தவன். காரணம் கேட்டால் சரியாக சொல்வதில்லை. எல்லாம் எல்லார் நன்மைக்கே என்று சொல்கிறான்.
மேலும் நீ ஒரு எழுத்தாளன் என்பதால் அவனோடு நேரடியாக பேசினால், அவனும் உன்னிடம் மனம் விட்டு பேசுவான். நம் அனைவரின் பார்வையும் மாறும். நா ஹைர் ஆஃபிஷியல்ஸ் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன் உனக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். என்ன சொல்ற” என்றார் ஆரவ்.
கனவு நினைவாக வேண்டும் என இப்போது தானே நினைத்தேன் பிரமிப்புடன் “கரும்பு தின்ன கசக்குமா? இந்த வாய்ப்பை எதிர்பார்த்து தானே காத்திருந்தேன்” என்ற கவினை ” சரி வா” என்று ஆரவ் அறைக்குள் அழைத்துச் சென்றபோது, கவினுக்கு ஒரு பீதி கலந்த பயம் எழுந்தது.”இவன் முகத்தைப் பார் கவின்,” என்றார் ஆரவ்,
எனக்குப் பின்னால் கதவை மூடிக்கொண்ட ஆரவ் என்னை தைரியமாக இருக்க சொல்லி அந்த மனிதனின் எதிரில் அமரச்செய்தார்.
“உன் பெயர் என்ன?” கேட்டான் கவின்.
அவன் சிரித்து, “என் பெயர் தெரிஞ்சு நீ என்ன செய்யப் போற? என் கதையை கேட்கத் தானே வந்தாய். கேட்டு கிளம்பினால் நல்லது.” என்றான்.
அவன் குரலில் இருந்த கண்டிப்பான அமைதி அவனைக் கொலைகாரன் என்று சொன்னாலும் நம்ப முடியவில்லை. அவனின் பேச்சில் ஓர் நிதானம், சமூகக் கண்ணோட்டம் முற்றிலும் சீராக இருந்தது.
அவனே ஆரம்பித்தான் “நான் ஒரு கொலைகாரன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் எனது செயலை புரிந்து கொள்ள நீங்கள் தயாரா?”என்று எதிரிலிருந்த கவினைப் பார்த்துக் கேட்டான்.
அவன் மெதுவாகத் தன் கதையை தொடங்கினான். “நான் வாழ்ந்த இடம் ஒரு கிராமம். அங்கே பல கொடுமைகள் என் சிறு வயதிலேயே தொடங்கின. என் தாயையும் என்னையும் எனது தந்தை அடிக்கடி தாக்கினான். ஒரு நாள், அவனை தற்காப்புக்கு அடித்தேன். அதுவே என் முதல் கொலை” பிறகு தொடர்ந்து ” பின் சிலகாலம் சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து திரும்பிய எனக்கு யாரும் வேலை தரவில்லை. பல நாள் வேலையின்றி சிரமப்பட்டேன். பின் ஒரு மளிகை கடையில் வேலை கிடைத்தது அதுவும் நிலைக்கவில்லை. கூட வேலை செய்தவன் செய்த திருட்டு நான் ஜெயிலில் இருந்து வந்தவன் என்பதால் என் மீது பழி சொல்ல வேலை போனது.
அதன்பின் ரோட்டில் உள்ளவர்களோடு பல இரவுகள் அமைதியாக கழிந்தது. ஒருநாள் இரவு எப்போதும் போல படுத்தவன் தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தேன். சிறிது தூரத்தில் ஒரு பெண்ணை இருவர் காரில் வலுக்கட்டாயமாக ஏற்ற முயற்ச்சிப்பதைப் பார்த்ததும் ஓடி அருகில் இருந்த கட்டையால் மண்டையில் ஒரே போடு போட்டேன். ஒரு பெண்ணின் மானம் காத்த சந்தோஷம் இருந்தது. அந்த உயிர் போவதற்கு வருத்தப்பட ஒண்ணுமே இல்லை. இந்த மாதிரி ஆட்கள் பூமிக்கே பாரம்”
அவனின் வார்த்தைகளில் ஒருவித துன்பம் இருந்தது. கவின் அவனைப் புரிந்து பகுத்தறிந்து கொண்டு எழுதுவதற்கு ஆரம்பித்தான்.
“ஆனால் நீ ஏன் தொடர்ந்தாய்?” என்று கேட்டான் கவின்.
“இது போல நான் கொன்ற அனைவருமே உலகத்திற்கு தேவையில்லாத பொறுக்கி, காமுகன் என்று பலர். என்னால் அவர்களை திருத்த முடியாது. ஆனால் அவர்களை உலகத்திலிருந்து அகற்றலாம். களையெடுப்பது போல அது என்னால் முடிந்ததே என்ற மனநிறைவு.”
தேவை தேவையில்லை என்பதை நிர்ணயிக்க நீ யார்? என்ற கேள்வி கவினைத் துளைத்தது. புலனாய்வு சிறைக்குள் சில கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதிக்கப்பட்டான் கவின். ஆனாலும் அவனின் பேச்சு உணர்ச்சியற்றதாக இருந்தது. அவன் தன் செயல்களை நியாயமாக்கவே முயன்றான்.
அவன் சொன்ன சம்பவங்கள் நெஞ்சை உலுக்கின. அவன் கொலை செய்தவர்களுக்கான காரணங்கள், அவன் செய்த செயல்களில் ஒவ்வொன்றுக்கும் சொன்ன காரணங்கள் எல்லாமே அவன் கோபத்தின் மூலமாக செய்யவில்லை. ஒரு வெறியான மனோநிலையால் தான் அவன் செய்திருக்கிறான் என்பது உறுதியாகியது.
அந்த நாள் மாலை, அவனை சந்தித்தபோது அவன் கவினை நேராக பார்த்தான்.
“நீ என்னை எப்படி எழுதப் போகிறாய்?”
“நீ செய்த கொலைகள் ஏற்கனவே மக்களை உலுக்கியது. ஆனால் உன் செயல்கள் சரியானவை இல்லை என்பதையும் அந்த தொடர் கொலைகள் உன் கோபத்தினால் ஏற்பட்டதல்ல. சூழ்நிலை, சந்தர்ப்பம் உன் தெளிவற்ற வெறித்தனமான மனோநிலையும் ஒரு காரணம் என்று மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் அவற்றை புரிந்து கொள்ளும்படி எழுதுவேன். ஆனாலும் நீ நல்லதே செய்தாலும் கொலை கொலை தானே ” என்றான் கவின்.
“ஆம் அதனால் தான் தண்டனையை அனுபவிக்கிறேன். சரி அத விடு நான் சொன்ன உண்மைகள் மட்டுமே வெளிவர வேண்டும்,” என்றான். அவன் முகத்தில் மன பாரத்தை இறக்கி வைத்த ஒரு தெளிவு இருந்தது.
அந்த ஒருநாளில், கவின் ஒரு தொடர் கொலைகாரனின் வாழ்க்கையை கேள்விகள் கேட்டு அவன் உணர்ச்சிகளை மனதில் பதிந்துகொண்டு வெளியே வந்தான். உலகம் அவனை மிருகமாக கருதினாலும், அவனுக்குள் ஒரு விதமான துயரம், காரணம் இருக்கிறது என்பதை உரக்க சொல்ல வேண்டும்.
ஆனால் அவன் செய்த செயல்கள் ஒருபோதும் நியாயமாகாது. அந்த ஒருநாள் கவினுக்கு மனித மனத்தின் இருண்ட பகுதியை காட்டிய நாளாக , மனதின் பாரத்தை இறக்கிய கைதியின் நினைவை நெஞ்சில் சுமந்த நாளாக இருந்தது .
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.