எழுதியவர்: அருள்மொழி மணவாளன்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனோசரோடு!!
மலை அடிவாரத்தில் இருந்த அவர்களது தரிசு நிலத்தை விவசாயம் செய்யும் பொருட்டு, சமன்படுத்திக் கொண்டு இருந்தான் மணி என்று அழைக்கப்படும் மணிகண்டன்.
காலையிலிருந்து நான்கைந்து பேர் துணையுடன் வியர்வை சிந்தி வேலை செய்து கொண்டு இருந்தான். மதிய உணவு எடுத்துக்கொண்டு அவனது மனைவியும் மகனும் தூரத்தில் வருவதை கண்டான்.
உழுது கொண்டிருந்த டிராக்டரை நிறுத்திவிட்டு, அவனுடன் வேலை செய்தவர்களையும் உணவருந்தலாம் என்று அழைத்தான். அவரவர்கள் கொண்டு வந்த உணவை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு இடம் சென்று அமர்ந்தனர்.
அதற்குள் அவனது மனைவியும் மகனும் அருகில் வந்து விட, அவர்களுடன் அவர்கள் வீட்டில் வளரும் டைனோ என்று அழைக்கப்படும் நாட்டு நாயும், அவனது மகன் ராஜாவின் பின்னால் வாலை ஆட்டிக்கொண்டே வந்திருந்தது.
“இந்த குட்டிய வீட்டிலேயே விட்டுட்டு வந்து இருக்கலாம் இல்ல?” என்று மகனிடம் கடிந்து கொண்டு, ‘இவ்வளவு தூரம் அவன் பின்னாடியே நீ ஓடி வந்தாயா?” என்று அதை தூக்கி முதுகில் தடவி விட்டான்.
“பாருங்கம்மா அப்பாவ, என்னை திட்டுறாங்க. நாயை புடிச்சு கொஞ்சுறாங்க” என்று மகன் தன் தாயிடம் தந்தையை குறை கூற,
அவனையும் இழுத்து தன் மடியில் அமர்த்திய மணி, “வாயில்லாத ஜீவன் இல்லையாடா? அதுக்கு கால் வலிச்சா சொல்லத் தெரியுமா? அதனால் தான் சொன்னேன். நீ எங்க வீட்டு மகராசன். உன்னை கொஞ்சாம இருப்பேனா!” என்று கூறி அவனை திருஷ்டி நொடித்து தன்னுடன் அணைத்துக் கொண்டான்.
“அப்பாவும் மகனும் கொஞ்சிக்கிட்டது போதும், முதல்ல சாப்பிடுங்க” என்று அவனுக்கு தன் மகனுக்கும் உணவு பரிமாறினாள் அவன் மனைவி.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், சிறிது நேரம் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று தன் மனைவியையும் மகனையும் வீட்டிற்கு செல்லும்படி கூற, இருவருமே சிறிது நேரம் இருப்பதாக கூறி, அவர்களும் அவனுடன் சேர்ந்து வேலை செய்தார்கள்.
அப்படியே நேரம் கடக்க, சாயங்காலம் ஒவ்வொருவராக வேலை முடித்து வீட்டிற்கு கிளம்பிச் செல்ல ஆரம்பித்தார்கள். கொண்டு வந்த பாத்திரங்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு மகனையும் அழைத்தார் ராஜாவின் தாய்.
ஆனால் அவனோ, அப்பாவுடன் வருவதாக கூற, அவரும் வேலை முடித்துச் செல்லும் பெண்னுடன் சென்றுவிட்டார். சிறிது நேரம் தந்தையுடன் சுற்றிக் கொண்டிருந்த ராஜா, ஓரமாக நின்ற டிராக்டரின் அடியில், அழகான கூலாங்கல் கிடப்பதை பார்த்து,
“அப்பா இந்தக் கல்லை பாருங்க எவ்வளவு அழகா நீள்உருண்டையா இருக்கு!” என்று எடுத்து காண்பித்தான்.
அதைப் பார்த்த மணி, “டேய், இது கல்லில்லை. பார்க்க முட்டை போல இருக்குடா!” என்று அவன் கையில் இருந்து வாங்கி, அதை ஆராய்ந்து பார்க்க, திடீரென்று அந்த கல் பிளப்பது போல் சத்தம் கேட்டது.
ராஜாவும் “ஆமாப்பா, இது முட்டைதான். உடையுது பாருங்க” என்று சொல்ல,
அதற்குள் முழுவதும் உடைந்து, அதற்குள் இருந்து ஒரு வித்தியாசமான ஒரு குட்டி வந்தது.
“அப்பா, இது டைனோசர் குட்டி பா. நான் டிவில பார்த்து இருக்கேன்!” என்று உணர்ச்சி வசப்பட்டு கத்தினான் ராஜா.
“ஐயோ டைனோசரா? அப்ப நம்மளை எல்லாம் சாப்பிடுமே!” என்று பயந்த மணி, “இதை உடனே கொன்று விடுவோம்” என்று பெரிய கல்லை எடுத்து அதன் மேல் போட பார்த்தான்.
அவனை தடுத்த ராஜா, “அப்பா, இது விலங்குகளை சாப்பிடக்கூடியது அல்ல. வெறுமனே தாவரங்களை மட்டும் தான் சாப்பிடும்” என்று சொல்லிக்கொண்டு அருகில் இருந்த புல்லை எடுத்து, அதன் வாயின் அருகே காண்பித்து, மெதுவாக அதன் முதுகை தடவி விட்டான்.
அதுவும் அவனது கைகளில் நன்றாக தன்னை உரசிக்கொண்டு, அவன் கொடுத்த புல்லை மெதுவாக சாப்பிட்டது. அதனை தடவி விட்டுக் கொண்டே, “அப்பா, இதற்கு என்ன பெயர் வைக்கலாம்” என்று கேட்டு, ‘ம்ம்’ என்று யோசித்து “சிம்பா, சிம்பா பெயர் சூப்பர்ல ப்பா” என்றான் மகிழ்ச்சியாக.
அது புல்லை சாப்பிடுவது அழகாக இருந்தாலும், மணிக்கு அது டைனோசர் என்பதால் ஒருவித பயம் இருக்கத்தான் செய்தது.
“வேண்டாம் மகனே! இது எவ்வளவு பெருசா வளரும்னு நானும் டிவில பார்த்து இருக்கேன். இது நல்லதா தெரியலை. உடனே போலீசுக்கு இதை சொல்லி விடுவோம். அவங்க கொண்டு போயி காட்டுல விட்டுடுவாங்க” என்றான் பயந்தபடியே.
“பயப்படாதீங்க ப்பா! இது ஒன்னும் பண்ணாது. பாருங்க இலைகளைதான் சாப்பிடுது” என்று கூறி அதை காண்பித்தான். அரை அடி இருந்த டைனோசர் இப்பொழுது ஒரு அடிக்கு உயரமாக வளர்ந்து இருந்தது, அருகில் இருந்த தாவரங்களை உண்டு.
“டேய் பாருடா, எவ்வளவு குட்டியா இருந்துச்சு. அதுக்குள்ள இவ்வளவு பெருசா ஆயிடுச்சு! நான் இதை போலீஸ் கிட்ட சொல்லத்தான் போறேன்” என்ற மணியை தடுத்த ராஜா,
“ஐயோ அப்பா, பயப்படாதீங்க. இங்க பாருங்க, அது எவ்வளவு ஃப்ரண்ட்லியா பழகுது” என்று சொல்லி அவன் அதை தடவி விட, அது அவன் கால்களை சுற்றி சுற்றி ஓடி இலைதளைகளை வேகமாக உண்ண ஆரம்பித்தது.
அவனுடன் இருந்த நாய்க்குட்டியோ அதனுடைய அசுர வளர்ச்சியை கண்டு பயந்து மணியின் கால்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டது. “டேய், டைனோனு பேர் வெச்ச நம்ம நாய்க்குட்டி பயப்படுதுடா, உண்மையான டைனோசரை” பார்த்து என்றான் மணி.
“அப்பா நான் கார்ட்டூன்ல பார்த்திருக்கேன். டைனோசர் விவசாயம் பண்றது போல. அது போல நம்ம சிம்பாவும் இந்த இடத்தை நமக்கு விவசாயம் செய்ய ரெடி பண்ணி கொடுக்கும், பாருங்க. இல்லையா சிம்பா?” என்று அதன் தலையை தடவ, அதன் தலையை வைத்து அவன் தோளில் சாய்ந்து ஆமாம் என்பது போல் தலையை ஆட்டியது.
இப்படியே இவர்கள் பேசிக் கொண்டிருக்க அரை அடி பூனை குட்டி போல் இருந்த சிம்பா, பத்தடி யானை போல் வளர்ந்து விட்டது. அதன் தலையோ மேலும் ஐந்தடிக்கு நீண்டிருந்தது. அண்ணாந்து பார்த்த மணி, “இது என்னமோ உண்மை போலவே தெரியலை. எவ்வளவு பெருசா உடனே வளர்ந்துடுச்சு!” என்று அதை கண்டு ஆச்சரியம் அடைந்தான்.
சிம்பாவோ இருவரையும் ஓர தன் வாலால் தள்ளி நிறுத்தி விட்டு, அங்கும் இங்கும் கால்கள் தேய்த்து நடந்து அந்த இடத்தையே சிறப்பாக உழுது கொடுத்தது.
இரண்டு நாட்கள் டிராக்டர் வைத்து உழுதால் கூட இவ்வளவு அழகாக உழுது இருக்க முடியாது. இதன் யானை கால்களை வைத்துக்கொண்டு எப்படி இப்படி ஆழகாக உழுதுள்ளது? என்று ஆச்சரியமடைந்த மணி, “ஏதோ மேஜிக் போல் இருக்குது ராஜா!” என்று மகனிடம் கூறினான்.
ராஜாவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ வித்தியாசமாக இருப்பது போல் தோன்ற, “ஆமாம் அப்பா, மேஜிக் தான் போலிருக்கு” என்று கூறி “எனக்கும் பயமாக தான் இருக்கிறது அப்பா” அவனை நெருங்கி அமர்ந்து கொண்டான்.
அதற்குள் சிம்பா அருகில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் இருந்து பாதை அமைத்து, வயலுக்கு நீர் பாய்ச்சி வானத்தைப் பார்த்து சப்தம் எழுப்பியது. அப்பொழுது வானில் இருந்து நீர் பாச்சிய வயலில் ஏதோ பொடி போல் பொழிந்தது.
அதில் மகிழ்ச்சியாக சத்தம் எழுப்பிய சிம்பா வேகமாக வந்து மணியையும் ராஜாவையும் முகர்ந்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தது. ராஜாவிற்கு அது சந்தோஷமாக இருப்பதை கண்டு அதன் தலையை தடவி “என்ன சிம்பா? ரொம்ப சந்தோஷமா இருக்க! எங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்காக இங்க வந்தியா?” என்றான்.
சிம்பா டைனோசரும் ஆமாம் என்று தலையாட்டி, மீண்டும் வானத்தைப் பார்த்து சப்தம் எழுப்பியது.
அந்த சத்தத்தில் ஆயிரக்கணக்கான மின்மினி பூச்சிகள் அங்கு தோன்றி, வயல்வலியை ரிங்காரமிட, அதன் வெளிச்சத்தில் ராஜாவிற்கும் மணிக்கும் டைனோ நாய்க்குட்டிக்கும் கண்கள் கூச, மூவருமே ஒன்று போல் கண்களை மூடி ஓரிடத்தில் ஒன்றாக கூடி அமர்ந்தனர்.
சற்று நேரத்தில் சிம்பா ராஜாவின் முதுகில் தன் தலையை வைத்து முட்டியது. அதில் கண் திறந்து ராஜாவும் மணியும், தங்கள் கண் முன்னால் நடந்திருந்த அதிசயத்தைத் கண்டு வியந்தனர்.
ஆம், சிம்பா டைனோசர் உழுது விளைவித்த நிலம் முழுவதும், நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. அதைக் கண்டு ஆச்சரியமடைந்த மணி அதை தொட்டுப் பார்த்தான். உண்மையிலேயே நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது.
சுற்றும் முற்றும் பார்த்த மணிக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வருடம் முழுவதும் கட்டினமான உழைப்பை கொடுத்தால் மட்டுமே இவ்வளவு விளைச்சலை பெற்றிருக்க முடியும். அது மட்டுமல்லாமல் நீர் பாசனத்திற்கு, உரம், வேலையாட்கள் என்று எவ்வளவோ பணம் செலவாகி இருக்கும். இது எதுவுமே இல்லாமல் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்தையும் நடந்ததை கண்டு ஆனந்த கூத்தாடினான் மணி.
ராஜாவிற்கு விவசாயம் பற்றி அவ்வளவு அறிவு இல்லாவிட்டாலும், நெல் விளைவதற்கு குறைந்தது எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியும். அவனுக்கும் அந்த இடத்தில் விளைந்து நிற்கும் நேற்கதிர்களை பார்த்து வியப்பாகவும் ஆச்சரியமாகவும் தான் இருந்தது.
சிம்பாவின் காலை பற்றி கொண்ட ராஜா, “ரொம்ப நன்றி சிம்பா. நீ எங்களுக்கு ரொம்ப உதவி செய்திருக்க. அப்பா இதை வயல் ஆக்க வேண்டும் என்று கடினமா வேலை செய்துவிட்டு இருந்தாரு. எங்களுடைய வேலையை நீ மிகவும் சுலபமாக்கி விட்டாய். ரொம்ப நன்றி சிம்பா” என்று அதன் காலை கட்டிக்கொண்டு நன்றி கூறிக்கொண்டு இருந்தான்.
விடிந்ததும் அறுவடை செய்துவிடனும், அதற்குறிய வேலைகளை இப்போதே வீட்டிற்கு போய் ஏற்பாடு செய்யனும் என்று நினைத்த மணியும், சந்தோசம் மிகுதியில் சிம்பாவின் மறுபுறம் அதன் காலை பிடித்துக் கொண்டு, “ரொம்ப நன்றி சிம்பா. என் மகன் கூறியது போல் தான், எனக்கு நீ ரொம்ப பெரிய உதவி செய்திருக்கிறாய். உனக்கு ரொம்ப நன்றி” என்று அதன் காலை பிடித்து, தன் மகனை கொஞ்சுவது போல் கொஞ்சினாரன்.
சிம்பாவும் அவனது முதுகில் தன் தலையால் செல்லமாக முட்டியது. மெதுவாக முட்ட ஆரம்பித்த சிம்பா, சிறிது நேரத்திற்கொல்லாம் வேகமாக வலிக்கும்படி முட்ட, வலியில் சிம்பா என்று துள்ளி எழுந்தான்.
“என்னடா சிம்பா? செம்பை வைத்து அடித்து அதுகூட தெரியலை. முப்பது வயசு ஆகுது. அப்பாக்கு ஒத்தாசையா இருக்கனும் என்று தோனாம, சூரியன் உச்சிக்கு வரும்வரைக்கு படுத்து தூங்கிகிட்டு இருக்க” என்று கையில் உள்ள செம்பை வைத்து தலையில் இடித்தார் அவனின் அம்மா.
“என்னது தூங்குறேனா? அப்போ நான் கண்டது கனவா?” என்று கண் திறக்க, கூடத்தில் இருந்த தூணை பிடித்தபடி படுத்து கிடப்பதை கண்டு அதிர்ந்து எழுந்தான் மணி.
எழுந்து சுற்றும் முற்றும் பார்க்க “ஐயோ சிம்பாவ காணும், ஐயோ ராஜாவையும் டைனோ வையும் காணும்” என்று பதறினான்.
“யாரை காணுமுனு தேடுற. அங்கே உன் அப்பா அறுவடை செய்யும் ஆட்களுக்கு காப்பி தண்ணி வாங்கி கொடுக்க கூட ஆள் இல்லாமல் தவிக்கிறாரு. நீ இங்கே யாரை தேடுற” என்று சொல்லியபடி வேலையாட்களுக்கு தேவையான காபியை தூக்கு வாலியில் ஊற்றினார்.
“அம்மா, பெரிய டைனோசர் மா சிம்பா, என் பையன் ராஜா நான் வளர்க்கும் நாய் டைனே” என்று வரிசையாக கூற,
“அடி கட்டையால, நாய் வளர்க்கிறானாம் நாய். உன்ன இங்க வளர்க்கிறது பெரிய வேலையா இருக்கு. இவர் நாய் வளர்க்கிறாராம், இவருக்கு ஒரு புள்ளையாம், முதல்ல ஒரு வேலை வெட்டிக்கு போயி பணம் சம்பாதிக்க பாரு. அப்பத்தான் எவளாவது உன்ன கட்டிக்க சம்பாதிப்பா. அதுக்கு அப்புறம் தான் உனக்கு புள்ளனு ஒன்னு வரும்” என்று கூறி “எழுந்து மூஞ்சி மொகறய கழுவிட்டு, இந்த காபி தண்ணிய கொண்டுபோயி வேலை செய்பவர்களுக்கு ஊற்றி கொடு. நான் சமையல் முடித்துட்டு வாறேன்” என்று அவனை விரட்டினார் மணியின் அம்மா.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.