எழுதியவர்: பூமலர்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு
மெதுவாகக் கண்களைத் திறந்த நான், இருள் சூழ்ந்த அறையின் உள்ளே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், நாற்காலியில் அமர்ந்து இருப்பதை உணர்ந்து துணுக்குற்றேன். இருள் பழகுவதற்காக கண்களைத் தட்டித் தட்டி விழித்து, கை கால்களை அவிழ்க முயல, மெல்லிய கயிராக இருந்தாலும், கை கால்களை அசைத்தால் சதையை அறுக்கும் படி இருந்ததை உணர்ந்து பயந்தேன். “யாராவது இருக்கீங்களா? எதுக்கு என்னைக் கட்டி வச்சு இருக்கீங்க? யாராவது வாங்க. எனக்கு பயமா இருக்கு” என்று கத்தினேன். ஆனாலும் எந்த மாற்றமும் இல்லை. சிறிது யோசிக்க, வேலை முடிந்து கிளம்பிப் பேருந்து நிலையம் சென்றதும், அவ்வழியே சென்ற ஆட்டோவில் ஏறியதும் மட்டுமே நினைவில் வந்தது. அதன் பின் இப்பொழுது தான் கண்களைத் திறக்கிறேன்.
மீண்டும் பயத்தில் அழத் தொடங்க, சட்டென அறையில் வெளிச்சம் பரவியது. அழுகை நிற்க, எதிரில் பார்த்தேன். ஒரு ஆள், கருப்பு முகமூடி அணிந்து, உடல் முழுதும் கருப்பு அங்கியால் மூடி, பெரிய பூட்ஸ் அணிந்து நின்று இருந்தான். கிட்டத்தட்ட ஆறு அடி உயரம் இருப்பான். அவன் ஒரு கையில் நீண்ட மெல்லிய கம்பியும், மற்றோர் கையில் மருந்துடன் கூடிய ஊசியும் வைத்துக் கொண்டு இருந்தான். கைகளில் கையுறை அணிந்து இருந்ததால், உடலின் ஒரு பாகமும் தெரியவில்லை.
“யார் நீங்க? என்னை எதுக்கு கடத்திட்டு வந்து கட்டி வச்சு இருக்கீங்க?”
“இதுவரைக்கும் நாலு பேரும் கேட்ட அதே கேள்வி. புதுசா கேக்க மாட்டியா?”
குரல் கரடு முரடாக இருந்தது.
“என்ன வேணும் உங்களுக்கு? எனக்கு அம்மா மட்டும் தான். பணக்காரங்க இல்ல நாங்க. என்னை விட்டுருங்க”
“நான் பணம் வேணும் ன்னு கேக்கலியே”
“அப்போ என்னை எங்கயாவது விக்க போறீங்களா? ப்ளீஸ். விட்டுருங்க. நான் யாருக்கும் எந்த பாவமும் பண்ணுனது இல்ல”
“நிஜமாவா? இது வரைக்கும் பாவமே பண்ணுனது இல்லையா?”
“ஆ.. ஆ.. மா”
“ஓஹ். ஆனா எனக்கு அப்படித் தோணலியே”
“நிஜமா நம்புங்க. நான் எந்த தப்பும் பண்ணுனது இல்ல. எங்க அம்மா சொல்றத தான் கேப்பேன் “
“நிஜமாவே தப்பு பண்ணலையா? இதுக்கு முன்னாடி இங்க வந்தவங்களும் இப்டி தான் சொன்னாங்க. ஆனா கடைசில செஞ்ச தப்பை எல்லாம் ஒத்துக்கிட்டு செத்துப் போயிட்டாங்க”
“செத்து… போய்ட்டாங்களா?… நிறைய பேரா?….”
“ஆமா! நாலு பேர்”
“நான் நிஜமாலுமே தப்பு பண்ணலங்க. என்ன விட்டுடுங்க ப்ளீஸ் “
இப்பொழுது அருகில் வந்தவன், “அதையும் பார்க்கலாம்” என்று கூறி வலது பக்கம் இருந்த நுரையீரலில் அந்த நீண்ட கம்பியைக் கொண்டு வேகமாகக் குத்தினான். குத்தியது சிறிய கம்பியாக இருந்தாலும், கூர்மையாக இருந்ததால் வேகமாக சதையைக் கிழித்துக் கொண்டு என் நுரையீரலைத் துளைத்தது. மூளையில் மரண வலி உரைக்க, கண்கள் விரிய அவனைப் பார்த்தேன். ஆ என்று கத்த வாயைத் திறப்பதற்குள் கம்பியை வேகமாக இழுத்தவன், என் வலது புஜத்தில் ஊசியை வேகமாக குத்தி, மருந்தை இறக்கினான். கண்களில் பயம் படர, கண்ணீர் தெறிக்க அவனை வேதனையுடன் பார்த்தேன்.
“என்ன பாக்குற. உடனே சாக மாட்ட. சின்ன ஓட்ட தான் போட்டு இருக்கேன். இன்னும் குறைஞ்சது நாலு மணி நேரமாவது ஆகும் நீ சாக ஆரம்பிக்க. வலிக்காம இருக்க மருந்தும் குடுத்து இருக்கேன். கொஞ்சம் கொஞ்சமாதான் ரத்தம் போகும். அதுக்குள்ளே நீ செஞ்ச தப்போ பாவமோ என்னன்னு சொல்லிட்டா, இந்த வலில இருந்து விடுதலை கிடைக்கும். ஒரு மணி நேரம் கழிச்சு தான் வலிக்க ஆரம்பிக்கும். அப்புறம் உன்னால யோசிக்க கஷ்டமா இருக்கும். சீக்கிரம் யோசிச்சு சொல்லு”
“நான் எந்த தப்பும் பண்ணல. எதுக்கு என்ன கொள்ளுற?”
“இப்டியே சொல்லி நேரத்தை நீ தான் வீணாக்குற. முதல் பொண்ணு 2 மணி நேரத்துல ஒத்துக்கிட்டா. விடுதலை கொடுத்துட்டேன். ஆனா மூணாவது பையன் தான் ஆறு மணி நேரம் எடுத்துக்கிட்டான். வலி அதிகமாகி, மூளை யோசிக்க முடியாம போய், கஷ்டப்பட்டு செத்தான். அப்புறம் உன் இஷ்டம். யோசிச்சு சொல்லு. நீ செஞ்சதுல இது தப்பா இருக்கலாம் ன்னு நீ நினைக்கிறதை
சொல்லு. அது தப்பா இல்லையா ன்னு பாப்போம்”
“எதுக்கு இதெல்லாம் கேக்குற? எங்க வீட்ல தேடுவாங்க. போலீஸ் க்கு போவாங்க. நீ தான் மாட்டுவ. நீ பண்ணுறதே தப்பு ன்னு உனக்குத் தெரியாதா? உனக்கு நீயே தண்டனை குடுக்க வேண்டியது தான. நீயே தப்பு பண்ணிட்டு நிறைய பேர கொன்னு இருக்க “
“இதெல்லாம் எதுக்கு கேக்குறேன்? தெரியல. என் மனசு கேக்குது. தப்பு ன்னு எதை எல்லாம் நினைக்கிறாங்க ன்னு தெரிஞ்சுக்க சொல்லுது. ஒரு தப்பு யார் செஞ்சாலும் தப்பு தான் ன்னு எல்லாரும் சொல்ற ஒரு தப்பு. அது எதுன்னு கண்டுபிடிக்க சொல்லுது. நான் கேட்ட வரைக்கும் ஒருத்தனுக்கு தப்புன்னா இன்னொருத்தன் சரின்னு சொல்றான். அதை தான் தேடிகிட்டு இருக்கேன். போலீஸ் பிடிக்கிறதா இருந்தா முன்னாடியே பிடிச்சு இருப்பாங்க. எனக்கு பயம் இல்ல. இது தப்பு ன்னு உனக்கு தான் தோணுது. எனக்குத் தோணலியே. அதைத்தான தேடிகிட்டு இருக்கேன்”
ஒரு நாற்காலியை எதிரில் போட்டு அமர்ந்தான்.
“நான் எதுவும் பண்ணலியே. சின்னப் பொண்ணா இருக்கும் போது, என் பிரண்ட் வீட்டுல அழகான பொம்மை இருந்துச்சு. நான் கேட்டேன். குடுக்க மாட்டேன் ன்னு சொல்லிட்டா. எனக்குக் கோவம் வந்துச்சு. அவ உள்ள போன அப்போ, அந்த பொம்மையை பிச்சு போட்டுட்டேன். அவங்க வீட்டு நாய் கிட்ட போட்டுட்டேன். அந்த நாய் தான் கடிச்சிடுச்சு ன்னு சொல்லிட்டேன். அவ அழுதா. ஆனா நான் பத்து வயசில பண்ணுனது. தெரியாம பண்ணிட்டேன். அவ்ளோ தான். ப்ளீஸ் விட்டுடு. நான் வேணா அவ கிட்ட உண்மைய சொல்லி மன்னிப்பு கேக்குறேன்”
“அவ்ளோ தானா. தப்பே பண்ணலன்னு சொன்ன. இப்போ இத தப்பு ன்னு நீயே சொல்ற. அதே மாதிரி இன்னும் தப்பு இருக்கும். யோசிச்சு சொல்லு”
“ஒரு மணி நேரம் ஆகிடுச்சு. மருந்தோட வீரியம் குறைய ஆரம்பிச்சு இருக்கும். வலி தாங்க முடியலைன்னா அதுக்கும் நீ தான் காரணம். நேரத்தை கடத்துற”
“ப்ளீஸ் என்னை விட்டுரு. நான் எதுவும் பண்ணல. எனக்கு எதுவும் தப்பு செஞ்சதா ஞாபகம் இல்ல”
எதிரில் எந்த வித உணர்ச்சியும் இல்லை. என் மூளை வேகமாக யோசிக்கத் தூண்டியது.
“நான் காலேஜ் படிக்கும் போது ஒரு என் கூட படிச்ச பொண்ணுக்கு ஒருத்தன் லவ் லெட்டர் குடுத்தான். அவளுக்கும் பிடிச்சு இருந்துச்சு. ஆனா அவன் நல்லவன் இல்லை. ஏற்கெனவே ரெண்டு பொண்ணுங்கள லவ் பண்ணவன். எங்க சீனியர். அவ கிட்ட சொன்னா புரிஞ்சுக்க மாட்டா. அதான் நானே அவன் கிட்ட போய் அவ பிடிக்கல ன்னு சொல்லிட்டான்னு கட் பண்ணிட்டேன். இவ கிட்ட அவன் எனக்கும் லவ் லெட்டர் குடுத்தான்னு சொல்லிட்டேன். அவளும் கோபமா அவனைத் திட்டிட்டு, படிக்க ஆரம்பிச்சுட்டா. ஒரு வேளை அவனோட ஆளா நீ? இல்ல அவனே தானா? நான் நல்லது தான பண்ணேன். இது தப்பு இல்லையே”
“நான் தப்புன்னு சொல்லலியே. நீயே தான் ஒரு வேளை இது தப்போன்னு நினச்சு சொல்ற. அப்போ உன் மனசுல இது நூறு சதவிகிதம் சரி ன்னு தோணல இல்லையா?”
“இல்ல. நீ என்னைக் குழப்புற. என் பிரண்ட் ட காப்பத்த தான் செஞ்சேன். அது தப்பு இல்ல” கத்தினேன் நான். காயத்தில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறியதை பார்த்து அமைதியானேன். என் உடலின் வெப்பம் அதிகரித்ததை உணர முடிந்தது. வியர்வை வழியத் தொடங்கியது. மூச்சு விடவும் சிரமம் ஆகியது. கண்கள் மங்களாகத் தெரிவது போலத் தோன்ற, தலையை உலுக்கிக் கொண்டேன்.
“உணர்ச்சிவசப்பட்டு கத்தினா ரத்தம் அதிகமா போகும். இந்நேரம் உனக்கு ஜுரம் வந்து இருக்கும். இது நீ செஞ்ச தப்பு இல்லைனா, வேற என்ன? சீக்கிரம் யோசிச்சு சொல்லு”
“வேற என்ன? வேற என்ன? எனக்குத் தெரியல. வேற எதுவும் இல்ல. ப்ளீஸ். விட்டுறு. எனக்… கு.. ரொ..ம்ப.. வலி… க்கு…து…”
“நீ தான் நேரத்தை ஓட்டுற. மூணு மணி நேரம் தான் ஆகி இருக்கு. இன்னும் 4 மணி நேரம் ஆகும் நீ சாக. மரண வலி இன்னும் வரவே இல்ல. நேரம் இருக்கு. சீக்கிரம் சொல்லு”
திடீர் என எனக்கு வாந்தி வரும் போலத் தோன்ற, எச்சில் முழுங்கினேன். ஆனாலும் முடியாமல் பொளக் என வாந்தி வர, என் வாய் முழுதும் ரத்தமாக ஒழுகியது. பயந்து நான் எதிரில் பார்க்க, எந்த வித அசைவும் இன்று அமர்ந்து இருந்தான் அவன்.
“எதுக்கு இப்டி பண்றன்னு தெரியல. எனக்கு ரொம்ப முடியல. வலி உயிர் போனா தான் நிக்கும் னா ப்ளீஸ் என்னை இப்போவே கொன்னுடு. என்னால முடியல” அழுகையை அடக்க முடியாமல் அழுகிறேன் நான். ஆனால் சிறிய அசைவு கூட இல்லாமல் இருக்கிறான் அவன். அவ்வளவு தான் என் வாழ்க்கை என்று தோன்றுகிறது எனக்கு. இப்பொழுது ஒரே எண்ணம் இந்த வலியை அனுபவிக்காமல் இருக்க மரணமே மேல் என்று தோன்ற, மனம் அமைதி ஆகிறது. மூளை பொறுமையாக சிந்திக்கிறது. வலி போய் விட்டதா? எப்படி என்னால் அமைதியாக யோசிக்க முடிகிறது? எனக்குள் நானே கேட்டுக்கொள்கிறேன். என் புருவ முடிச்சை அவன் கவனித்து இருக்க வேண்டும்.
“அனைவதற்கு முன்னால் விளக்கு பிரகாசமாக எரியும் என்று தெரியுமா உனக்கு? அந்த நிலையை நீ அடைந்து விட்டாய்” என்று பொறுமையாகக் கூறுகிறான் அவன்.
நான் விரக்திப் புன்னகையை உதிர்க்கிறேன்.
“நான் தப்பு ன்னு நினச்சு எதையும் செய்யல. ஆனா ரெண்டு மாசம் முன்னாடி ஆபீஸ் ல ஒரு வேலைய ஒழுங்கா செய்யாம விட்டுட்டேன். தெரியாம தான் செஞ்சேன். ஆனா கேள்வி வரும் போது, புதுசா சேந்த பையன் தான் தப்பு பண்ணிட்டான் ன்னு எல்லாரும் சொன்னாங்க. நான் தப்பு பண்ணி இருக்க மாட்டேன் ன்னு நம்பினாங்க. நானும் அமைதியா இருந்துட்டேன். வழக்கமா இது மாதிரி தப்புக்கு சும்மா எச்சரிக்கை பண்ணி விட்டுருவாங்க. அன்னைக்கின்னு பாத்து எங்க பெரிய பாஸ் வந்துட்டாரு. அந்த பையன் வேலை போய்டுச்சு. நான் லீவுல இருந்ததுனால இதெல்லாம் எனக்குத் தெரியாது. அடுத்த நாள் தெரிஞ்சும் நான் சொல்லல. பயந்துட்டேன். என் மனசாட்சி க்கு இது தான் தப்புன்னு தோணுச்சு. இப்போ சொல்லிட்டேன். அவனா நீ? அதுக்கு தான் பழி வாங்குறியா?”
“அவன் யார் ன்னு எனக்குத் தெரியாது. நான் யாருக்காகவும் பழி வாங்க வேண்டியது இல்ல. உன் மனசுக்கு இது தான் பெரிய தப்புன்னு தோணுச்சுனா தப்பு தான். தப்பே செய்யல ன்னு சொல்லிட்டு, இப்போ இவ்வளவு சொல்லுற. கவலை படாதே. உனக்கு விடுதலை தருகிறேன்” என்றவன் எழுந்து நின்றான்.
என் கண்கள் மங்களாக தெரிந்தன. தலை ஒரு பக்கம் தொங்க, நிமிர்த்த முடியவில்லை. மூச்சு விடவும் முடியவில்லை. வாய் வழியாக சின்ன சின்ன மூச்சுக்களை வாங்கிக் கொண்டு இருக்கிறேன். ரத்தம் வெளியேறியதை விட, உடலின் உள்ளேயே சேர்ந்து என் வயிற்று பகுதியை உப்ப வைத்து இருக்கிறது. என்னால் உணர முடிகிறது. என் மரணம் நெருங்குகிறது. அவனும் நெருங்குகிறான்.. விடுதலை கொடு என்று கெஞ்சுகிறேன் கண்களினால். என் தலை முடியைப் பிடித்து தலையை உயர்த்தியவன், தன் முகமூடியக் கழற்றினாள். ஆம்! கழற்றினாள். என் கண்கள் விரிகின்றன. அவள் அந்த ஆட்டோ ஓட்டியவள். என் கழுத்தில் சரக்கென ஒரு கோடு இழுத்தாள் கத்தியைக் கொண்டு. இன்னும் சில நொடிகள் தான்.
“நீ விரும்பிய விடுதலையைக் கொடுக்கிறேன். ஆனாலும் என் தாகம் தணிக்கும் பதிலை நீயும் சொல்லவில்லை” என்று கூறுகிறாள். மூளை அந்த வார்த்தைகளை உணர்வதற்குள் மையான அமைதியில் அமிழ்ந்து விட்டேன்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.