ஒரு நாள் போட்டி கதை: பிரம்மம்

by admin 2
108 views

எழுதியவர்: உ. ராஜேஷ்வர்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு !

அவள் என்னை கைப்பேசியில் அழைத்ததும்,
நா தளதளக்க, தான் கருவுற்றிருப்பதை மெல்லியக் குரலில் கூறியதும்,
பதினொரு வருடங்களாக எந்த சொல்லுக்காக காத்திருந்தேனோ, அச்சொல் மூளையை அறைய,
உரோமத்து துளையெல்லாம் பூச்சொரிந்ததும்,
கூனிக்குறுகி நடந்த வீதியெல்லாம், பாரதி போல் மிடுக்கிட்டு நடந்ததும்,
சிறு நோவும் இன்றி, விழிக்கு இமையாய் அவளை பாதுகாத்ததும்,
கடந்தோடிய மூன்று திங்களில், படவரியில் தான் பார்த்து களிப்புற்ற “BABY-MOON” என்ற “சேய்-
நிலவிற்கு” என்னை அவள் ஆயத்த படுத்தியதும்,
மூணாரில் ஒரு தனி வீட்டையே இரண்டு நாட்களுக்கு பதிவு செய்துவிட்டு, இந்த மகிழுந்தில் என்
தோளோடு தோல் சாய்ந்து, விழிகள் மூடிய மென் உறக்கத்திலும் அவள் தன் வயிற்றின் மீது கைகளை
கோர்த்துக் கொண்டிருப்பதும்,
மகிழுந்தின் கண்ணாடித் துளைகளின் ஊடே கூதிர்க் காற்று என் நெற்றியோடு
உறவாடிக்கொண்டிருப்பதும், ஒருவித இன்பப் பெருமிதத்தை எனக்கு வாரிக் கொடுத்தது. இப்பேற்பட்ட
அகச்சூழல், ஆண் என்ற பாலினத்தின் தனிச்சொத்து.
மூணாரின் தென்கோடி மலைச் சரிவில், நாங்கள் பதிவு செய்திருந்த வீட்டின் முற்றத்தை அடைந்தோம்.
பகலவன் மலைகளுக்கு அப்பால் மறைந்துகொண்டிருந்தான். எங்களை அழைத்து வந்த மகிழுந்து
மறுநாள் காலையில் வருவதாக கூறியபடி, வளைந்து நெளிந்து கிடந்த பருவதத்தின் பாதையில் ஒருசில
வினாடிகளில் மறைந்து போனது.
குளிர் அவ்வளவாக இல்லை, இருப்பினும் நாங்கள் தடித்த கம்பளிச் சட்டைகளை அணிந்திருந்தோம்.
எங்களை வரவேற்க ஒரு ஆணும் பெண்ணும் தயாராகக் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களின்
முகத்தில் வழக்கமான வரவேற்புப் புன்னகை மினுக்கிட்டது. அந்த பெண் நடுத்தர வயதுடையவள்,
அந்த ஆடவனோ அவளுடைய தமையனாக இருக்கலாம். பருத்த தோள்களை உடைய அவன் எங்கள்
உடைமைகளை எடுத்துக்கொண்டு புன்முறுவலோடு எங்களை வரவேற்றான்.
“எத்ற மாசம் அக்கா?”, என் மனைவியின் தோள்களில் கைவைத்தபடி அந்த பெண் மலையாள நெடியில்
வினவினாள்.
பெரும்பாலும் அவர்களுடைய உரையாடல் மலையாளம் கலந்த தமிழில் தான் தொனித்தது. அவர்கள்
எங்களுக்காக தயார் செய்திருந்த இரவு உணவும் கேரள உணவு வகைகள் தான், புட்டு மற்றும்
கடலைக்கறி, மிளகு தூக்கலான சன்னா கறி, கிழங்கு உப்புமாவு, பப்படம் தோரன் என பட்டியல்
நீண்டது.
இரவு உணவிற்கு பின்பு சில மணிநேரம் நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தோம். அண்டை கிராமத்தில்
அவர்கள் வசித்து வருவதாக கூறினார்கள், பூர்வீகம் கேரளத்தின் எர்ணாக்குளம் அருகே சிறிய
கிராமமாம். தனக்கு திருமணமாகி ஒரே மாதத்தில் கணவன் இறந்துவிட்டதாக அப்பெண் கூறும்
பொழுது, அவள் கண்கள் நனைந்தது. என் மனைவி அவளை சிறிது ஆறுதல் படுத்தினாள்,
அப்பெண்ணின் தமையனும் அதன் பிறகு திருமணம் செய்துகொள்ளவில்லையாம். வீட்டில் வயதான
தாய் இருப்பதாகவும், அவரை கவனித்துக்கொண்டும், இங்கே வந்து போகும் ஆட்களுக்கு
சமைத்துக்கொண்டும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருப்பதாக அவள் கூறினாள்.

ஒட்டுமொத்த உரையாடளிலும் அவளுடைய தமையன் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே
பேசியிருப்பான். பெரும்பாலும் அவனுடைய கண்கள் வெளியே அந்தகாரம் பூசிக்கொண்டிருந்த மலைச்
சரிவில் நிலைக்குத்தி இருந்தது.
“நன்னாயி உறங்கும் அக்கா!, என்தென்கிலும் அத்தியாவிஷயம் உண்டெங்கில், இ வாக்கி டாக்கி
உபயோகிச்சு எங்கள வளிக்கும்”, என்று கூறியபடி கைகளில் வைத்திருந்த வாக்கி டாக்கியை என்னிடம்
அவள் நீட்டினாள்.
உடன் இருப்பீர்கள் என்று நினைத்ததாக என் மனைவி அவர்களிடத்தில் கேட்டுவிட்டாள். கூப்பிடும்
தூரத்தில் தான் அவர்களின் குடில் இருப்பதாகவும், வீட்டில் தாய் தனியாக இருப்பதாகவும், ஏதும்
அவசரம் என்றால் உடனே தான் வருவதாகவும் அந்த ஆடவன் உரக்கக் கூறினான்.
அதற்கு மேல் எங்களால் அவர்களை கட்டாயப்படுத்த முடியவில்லை, எக்காரணத்தைக் கொண்டும்,
கதவை திறந்து வெளியே வரவேண்டாம் என்ற அவர்களின் ஆலோசைனைக்கிணங்க, எங்களுக்கென
ஒதுக்கபட்டிருந்த அறைக்குள் நுழைந்தோம்.
அந்த வீடு முழுவதுமே “இந்தோ சார்சனிக்” கட்டுமான அமைப்பை ஒத்திருந்தது. எப்போதோ
வெள்ளைக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட தனி வீடாக இருந்திருக்கலாம். நூற்றைம்பது ஆண்டுகால
வரலாறை தாங்கியபடி நின்றிருந்த அந்த வீட்டின், ஒவ்வொரு அங்குலமும் கலைநயம் மிகுந்து
ஜொலித்தது. நாங்கள் தங்கவிருந்த அறையும் எங்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது,
இட்டாலியன் விளக்குகள், வண்ண வண்ண ஓவியங்கள், சிற்ப வேலைபாடுகளோடுக் கூடிய தேக்குமரக்
கட்டில், நீண்ட இறக்கைகளை உடைய மின்விசிறி என அனைத்தும் அந்த அறையில் ஆச்சரியம் தான்.
பயணக் களைப்பினால் மனைவி ஒருசில நிமிடங்களிலேயே உறங்கிப்போனாள். எனக்கு ஏனோ
உறக்கம் தலைகாட்டவில்லை. புது இடம் என்பதாலா? இல்லை வழக்கத்திற்கு மாறான குளிரா?
என்னவென்று துளியும் விளங்கவில்லை.
முதல் சாமத்தை கடந்துகொண்டிருந்த போது மெல்லியதாக உறக்கம் கண்களை இறுகப் பற்றியது.
வெளியே துளியும் ஓசையில்லை, பூரண அமைதி, அவ்வபோது ஆந்தைகள் அலறும் ஓசை மட்டும்
காற்றில் மிதந்து வந்தது. எருமையின் ரோமங்களில் நெய்யப்பட்ட பெரிய கம்பளி, எங்களை அந்த
கடுங்குளிரில் இருந்து காப்பாற்றியது. அவ்வபோது மனைவி புரண்டு படுக்கும் அசைவினை என்
தசைகள் உரிந்துகொண்டது. அதைத்தவிர அந்த இரவின் அழுத்தத்தில் வேறு எந்த அசைவும் இல்லை.
ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும் அந்த ஒற்றை கணத்தில்,
தடித்த!,
அடர் கருப்பு நிறத்தில்!,
நீண்டு நெளிந்து!, புதியதாய் தோலுரித்த சர்ப்பம் ஒன்று என் மீது படர்வதாய் உணர்ந்தேன்.
உடல் தன்னிச்சையாக தூக்கிவாரி போட்டது. பெருத்த ஓசையில் அலறியடித்து எழுந்து விளக்குகளை
ஒளிரவிட்ட போது, அங்கு என்னையும் மனைவியையும் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. நான்
பதறிப்போனதில் அவளும் பயந்து விழித்துகொண்டாள். நடந்தவற்றை அவளிடம் விளக்கிக்கூறினேன்,
அவள் கனவாக இருக்கும், தண்ணீர் குடித்துவிட்டு படுக்குமாறு அறிவுரை கூறிவிட்டு மீண்டும்
படுக்கையில் சரிந்தாள்.
மற்றொருமுறை உறக்கம் பிடிக்க ஒருசில நிமிடங்கள் பிடித்தன. மறுபடியும் அதே சர்ப்பம், இம்முறை
மிகவும் கோரமாக என் மனைவியிடம் திரும்பியது. அப்போது அவள் நிறைமாத கர்பணியாக
காட்சியளித்தாள். அவளுடைய பெருத்த வயிற்றை கவ்விப்பிடித்து, தன் தசைகள் முறுக்கேற அவளை
முழுவதுமாக சுற்றி வளைத்தது. அக்காட்சி நீள்வதற்குள் நான் மிரண்டு எழுந்தேன்.
இம்முறை பெரிதாக ஓசை எழுப்பவில்லை. என்னவள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அவளின்
தூக்கத்திற்கு சிறிதும் பாதகமின்றி மெல்ல அவ்விடம் விட்டு நீங்கி, நீண்ட பால்கனி பகுதிக்குள்

நுழைந்தேன். குளிர் வாட்டிவதைத்த போதும், கனவில் கண்ட காட்சிகள் கொடுத்த நடுக்கத்தைவிட,
கூதிர் குறைவாகவே தெரிந்தது. கண்களுக்கு முன்னே படர்ந்து விரிந்திருந்த அந்த மலைத் தொடரில்
ஆங்காங்கே சில மின்னொளிகள் பிரகாசித்து மறைந்தன. நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து
இப்படியொரு இயற்கைச் சூழலில் அகப்பட்டு வதைபடுவதும் ஒரு தனிசுகம் தான் என மனம் சட்டென
குதூகலித்தது.
அருகே கிடத்தபட்டிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி, கம்பளியைக் கொண்டு அவையங்களை
மறைத்து, கண்களை மட்டும் வெளிகாட்டியபடி ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக உறங்கிப்போனேன்.
இரண்டாம் சாமத்து போழ்தில் திடீரென மனைவி அலறும் சத்தம் செவிகளை அறைந்தது. மீண்டும்
கனவோ என திடுக்கிட்டு எழுகையில், மற்றொருமுறை அவளுடைய அலறல் அந்த பழைய கட்டிடத்தை
அசைத்து பார்த்தது. அவளுடைய குரலில் பயமும், அழுகையும் கலந்திருந்து என் ரத்தத்தை உறைய
வைத்தது. செய்வதறியாது நாலு கால் பாய்ச்சலில் அறைக்குள் ஓட்டம்பிடித்தேன். அங்கே அவள்
கட்டிலின் மேலே கைகளை குவித்தபடி, உடல் முழுவதும் நடுங்க, ஓங்கி அழுதபடி
அலறிக்கொண்டிருந்தாள். அருகே கழிவறையின் கதவுகள் திறந்து கிடந்தன.
மின் விளக்குகள் அனைத்தையும் ஒளிரவிட்டேன். நடுங்கிக்கொண்டிருந்த என்னவளின் கைகளை இறுக
அனைத்து, முதலில் அவளை நிதானத்திற்கு அழைத்து வந்தேன். அந்த பெரும் அழுத்தத்தின் நகர்வில்
என்னவென்று கூறுமாறு அவளிடம் மன்றாடினான். ஒரு சில நொடிகள் கழித்து, சிறிது நிதானித்தவள்
கழிவறையின் பக்கம் தன் கைவிரல்களை சுட்டிக்காட்டினாள். என்னையும் அவ்விடம் போக வேண்டாம்
என தடுத்து நிறுத்தினாள். இருப்பினும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல கழிவறையின்
கதவினை ஒருபக்கமாக தள்ளிவிட்டு பார்த்தபோது, ஒருகணம் என் மூச்சு நின்றுபோனது.
கழிவறையின் இருக்கையை சுற்றி ஆள் உயரத்திற்கு படமெடுத்தபடி, அடர் கருநீலத்தில் ராஜ நாகம்
ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதன் கண்கள் நேரே கதவுகளுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த என்
மீது அசைவின்றி பற்றியிருந்தது. உடல் நடுக்கமுற துவங்கியது, நிதானித்து கதவை தாளிடுவதற்குள்
“ஷ்ஷ்ஷ்ஷ்” என சீறியபடி முன்னேறியது. செய்வதறியாது, கட்டிலுக்கு மேலே தாவிகுதித்து
மனைவியோடு சிலையானேன். கழிவறையில் இருந்து வெளியேறிய அந்த ராஜநாகம் பதினைந்து
அடிக்கும் மேலே இருக்கும். எங்கள் கட்டிலுக்கும், வாசலுக்கும் இடையில் நிறுத்தபட்டிருந்த அலமாரிக்கு
பின்புறமாக நுழைந்துகொண்டது.
வாழ்நாளில் இதுவரையிலும் இப்படியொரு ராஜநாகத்தை நாங்கள் இருவருமே கண்டதில்லை. அந்த
கணம் என்ன செய்வதென்றும் தெரியவில்லை. வெளியே செல்ல துளியும் வாய்ப்பில்லை. அவ்வபோது
வாசலின் இடைவெளி வரை வெளியே வந்து எங்களை பார்த்து படமெடுத்தபடி மீண்டும் அந்த
அலமாரிக்குள் நுழைந்துகொண்டது அந்த கொலைகார நாகம். அலமாரியில் வைத்திருந்த வாக்கி
டாக்கியை எடுப்பதற்கு மனம் துணியவில்லை. கடவுளே இப்படிப்பட்ட சூழலில் எங்களை
தள்ளிவிட்டாயே என மனைவி ஒருபுறம் பிதற்றிக்கொண்டிருந்தாள்.
இதிலிருந்த தப்பிக்க ஒரே வழி தான் உள்ளது, மனைவியின் காதுகளில் முணுமுணுத்தேன்.
என்னவென்று நடுங்கியபடி வினவினாள்.
அதை கொலை செய்வது!
இல்லை அது பாவம்! வருத்தத்தோடு கூறினாள்.
இன்னும் விடிவதற்கு பலமணி நேரம் உள்ளது, இப்படியே நம்மால் பாதுகாப்பற்ற சூழலில் விழித்திருக்க
முடியாது.
ஆக, கொலை தான் ஒரே தீர்வு! என தீர்க்கமாகக் கூறினேன்.
வேறுவழியின்றி அவளும் ஆமோதித்தாள்.
கட்டிலுக்கு அருகே இருத்த பெரிய மரச்சட்டம் ஒன்றை எடுத்து கைகளில் இருகப்பற்றிக்கொண்டேன்.

நேரம் நெருங்கியது,
அது அலமாரிக்குள் நுழைந்து சுதாரிக்காத வேளையில், ஒரே பாய்ச்சலில் அதன் தலை மீது அந்த தடித்த
மரச்சட்டத்தை வைத்து அழுத்தினேன். அதன் வால் பகுதி அலமாரியை சுற்றி வேகமாக அடித்தது.
இடைவிடாது துடிதுடித்தது. ஒருவழியாக அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு அதன் அசைவு
முழுவதுமாக அடங்கியது.
எங்களுக்கு ஓரளவிற்கு நடுக்கம் குறைந்தது! வாக்கி டாக்கியில் அவர்களை இந்த அர்த்த சாமத்தில்
அழைக்க வேண்டாம், விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என மனைவி கூறியதை அடுத்து அந்த
முயற்சி கைவிடப்பட்டது. உறக்கம் துளியும் வரவில்லை. அந்த இரவு முழுவதும் இருவரும் அசைவின்றி
கட்டிலில் இறுக கட்டியணைத்தபடி அமர்ந்திருந்தோம்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மரச்சட்டம், அதன் தலையை நசுக்கியபடி சுவரோடு சுவராக
ஒட்டிக்கிடந்தது.
ஒருவழியாக சோம்பல் முறித்தபடி, தன் கதிர்களை நீட்டி நெளித்துக்கொண்டு கதிரவன் பிரகாசிக்க
துவங்கியிருந்தான். விடியும் பொழுதில் என்னவள் உறங்கிப்போயிருந்தாள். அந்த சூரிய வெளிச்சத்தில்
இறந்து கிடந்த ராஜ நாகத்தின் நீளம் தெளிவாக புலனானது. அசைவின்றி கிடந்த அந்த சர்ப்பம்
இறந்தபோதும் அதன் தோற்றத்தில் அச்சுறுத்தியது.
வாக்கி டாக்கி சிணுங்கியது. அந்த ஆடவன் வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்தான். என் மனைவியை
கட்டிலில் மெல்ல சாய்த்து படுக்கவைத்துவிட்டு, வாயிலின் ஒரு ஓரமாக வெளியேறினேன். அவனிடம்
நடந்தவற்றை கூறினேன்.
உங்கள் யாருக்கும் ஏதும்? அவன் வினவினான்.
இல்லை, ஆனால்!
அந்த கொலையை விளக்கினேன். சரி போனது போகட்டும். இங்கு ராஜநாகத்தை கொள்ளுவது
சட்டப்படி குற்றம், இருப்பினும் அதை நான் பார்த்துகொள்கிறேன், என்று கூறியபடி ஒரு பெரிய
சாக்குப்பையை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தான். நான் வெளியே நின்றுகொண்டேன்.
சத்தமின்றி அதனை வாரியெடுத்துக்கொண்டு, சாக்குபையை இருகக்கட்டியபடி வெளியேறினான்.
அவன் முகம் இருண்டிருந்தது. அந்த வீட்டின் பின்புறம் சென்று அதனை புதைத்துவிட்டு மீண்டும்
உள்ளே பிரவேசித்தான். அப்போதும் அவன் முகம் பெருமளவில் வாடியிருந்தது.
என்ன ஆனது? ஏதும் பிரச்சனையா? என்றேன்.
“நீங்க ஒரு தெவசம், மரணிச்ச கர்பிணியோடு கூடியுண்டு!” என்றான்.
புரியவில்லை? என்றேன்.
நேற்று முழுவதும் நீங்கள் மரணித்த கர்பிணியோடு இருந்துள்ளீர்கள் என்று உரக்கக் கூறினான்.
ஒரு கணம் அவன் சொல் கேட்டு என் மனம் நடுங்கியது.
“ஆ சர்ப்பத்தின் வயித்தில் ஆறு முட்டைகள் உண்டென்கிலும், ஒன்னு கூட தப்பிக்கல சாரே!”,
என்றுரைத்து அவன் அவ்விடம் விட்டு நீங்கினான்.
ஒருபுறம் அழுகை தொண்டையை கவ்வியது! முந்தைய தினம் என்னை படமெடுத்து பார்த்த அந்த முகம்,
அதன் பதட்டம் அனைத்துமே தாய்மையின் பரிதவிப்பு என நெஞ்சில் அறைந்தது!
துக்கம் மேலிட, அறையின் உள்ளே பிரவேசித்தேன். அங்கே என் மனைவி ஆழ்ந்து
உறங்கிகொண்டிருந்தாள். ஒருபுறமாக சாய்ந்து படுத்திருந்த அவள், தன் வயிற்றை இரு கைகளாலும்
இறுக பற்றிக்கொண்டு, மிகவும் கவனமாகவே உறங்கிக்கொண்டிருந்தாள்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!