ஒரு நாள் போட்டி கதை: புதிரான மேதினி

by admin 2
51 views

எழுதியவர்: அனுஷாடேவிட்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனோசரோடு!

“தன்வி எத்தனை தடவை சொல்றது என் பர்மிட் இல்லாமல் என் லேப்க்கு வரகூடாதுனு?” தனயன் தன்வீரை தந்தை ரித்விக் இப்படி கடிந்துக் கொள்வது புதிதல்ல.
இருந்தபோதிலும் பன்னிரெண்டு வயது பருவ வயதிலிருக்கும் தன்வீர்க்கு தகப்பனின் ஆராய்ச்சிக் கூடத்திலிருக்கும் தற்போதையக் கண்டுபிடிப்பு மீது அலாதி பிரியம்.
இருக்காதா பின்னே!
காலத்தை வென்று கடந்தக் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் காலப் பயணம் மேற்கொள்ளுமாறு கால இயந்திரம் அல்லவா வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்.
நாட்பட்ட தாடிக்குள் மறைந்திருக்கும் முகத்தில் விழிகள் மட்டுமே தெரிய அதில் தெரிந்த சினத்தைக் கண்டுகொண்டவன், “ரித்து டாடி பிளிஸ் நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இங்கேயே
இருக்கேனே?” கொஞ்சினான்.
“ஷட் அப் தன்வீ. இமிடியட்லி கெட் அவுட் ஆப் ப்ரம் மை லேப்” கோவ மிகுதியில் வார்த்தைகள் வாளாய் வெட்டியிருந்தன. சில தினத்திற்கு முன் எஞ்சியிருந்த ஆராய்ச்சிப் பணியை முடித்த ரித்விக் அதை செயலாக்க நினைத்து தன்னை அந்த இயந்திரத்தில் பொருத்திக் கொண்டு காலபயணம் மேற்கொள்ள அழுத்தானை அழுத்தினான்.
ஆனால் முழுமையடையாத இயந்திரம் நொடிப்பொழுதில் பழுது ஏற்படுத்த அதன் காரணமாக பரவெளிக்கும் நிகழ்வுக்கும் இடையே தொங்கு பாலம் போல் தொங்கியவனின் உடல் சக்தியை அனைத்தும் உறிஞ்சிய இயந்திரம் வெடித்து சிதறியிருந்தது.

அந்த காயங்கள் ஆறும் முன்னே மீண்டும் தன் ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தான். பழுதுகளைக் கண்டறிந்து கால இயந்திரத்தில் மாற்றம் செய்துக் கொண்டிருந்த வேளையில் தான் தன்வீர் உள்நுழைந்திருந்தான். மனையாள் மறைந்த வடுவே இன்னும் அப்படியேயிருக்க தெரிந்தே தன்
ஆருயிர் மகனை ஆபத்தில் தள்ள விளைந்திடுவானா விஞ்ஞான வித்தகன்? தனக்கும் அது ஆபத்து, தான் இல்லையேல் மகன் என்னச் செய்வான் என்பதை மட்டும் வசதியாக மறந்து போனான். அவன் எண்ணமெல்லாம் மனையாளைக் காண வேண்டும் என்ற பேரவா அல்லவா நிறைந்திருக்கிறது.
சிறிது நேர ஆராய்ச்சியின் முடிவில் மகிழ்ச்சியுடன் வெளியேறிய ரித்விக் கூடத்தின் நுழைவுவாயிலின் கதவிற்கான ரகசிய எண்ணை அழுத்தாமல் திறந்துப் போட்டு போயிருந்தான்.
இதுதான் சரியான வாய்ப்பு என்று எண்ணிய தன்வீர் புயல் வேகத்தில் ஆராய்ச்சிக் கூடத்தில் நுழைந்து கால இயந்திரம் இருக்கும் அறைக்குள் வந்து அதனை இயக்கிட ஆரம்பித்தான்.
நிழல் போலவே தந்தையின் ஆராய்ச்சியைக் கண்காணித்திருந்தவன் காலம் கனியும் வரை காத்திருந்தது ரித்விக் அறியாத ஒன்று. மணிக்கூண்டு போலிருந்த அந்த கம்பிகளுக்கு உள்ளே இரு பக்கமும் குடை போன்ற பெரிய ஒளி தாங்கி இருந்தது. அதற்கு நடுவே அமரும் படி ஒரு இருக்கையும் அதற்கு நேரேதிரேக் காலத்தையும் நேரத்தையும் மாற்றிக் கொள்ள கடிகார அமைப்பிலான வடிவமைப்பும் இருந்தது.
வலப்புறம் பயணம் முடிந்து மீண்டு வர பயணம் மேற்கொள்ளும் முன் எடுத்துச் செல்லவென கைக்கடிகார வடிவில் ஒரு பொருள் இருந்தது. இடப்புறம் கதிர்வீச்சுகளைக் கட்டுப்படுத்தவென ஒரு அமைப்பை உருவாக்கியிருந்தான் ரித்விக்.
மேலோட்டமாக பார்வையிட்ட தன்வீர் கைக்கடிகாரப் பொருளையும் எடுக்கவில்லை காலத்தையும் சரியாக அழுத்தவில்லை.

ஆராய்ச்சி முடிந்து ஒருமுறை செயல்படுத்தி அதில் வெற்றிப் பெற்ற சந்தோஷ மிகுதியில் வெளியே சென்ற தந்தை மீண்டும் வருவதற்குள் தன் வேலையை முடிக்க வேண்டும் என்ற பதட்டத்தில் சரியான காலத்தினைத் தேர்ந்தெடுக்கத் தவறியிருந்தான்.
கால இயந்திரம் அதன் வேலையைச் செவ்வனே செய்தது. விண்வெளிக்கும் காலத்திற்குமான பரவெளி (வார்ம்கோல்) உருவாக, மின்னல் கீற்றுகள் குறுக்கு நெடுக்காக வெட்டி அதன் நுண்ணிடை வழியே ஈர்த்துக் கொண்டு அணுவாக பிழிந்தபடி தன்வீரை அவன் தேர்ந்தெடுத்தக் காலத்தில்
சேர்ந்திருந்தது கால இயந்திரம்.
“ஆஆஆஆஆ” என்ற அலறலுடன் கீழே பொத்தென்று விழுந்தவன் பரபரப்புடன் எழுந்தமர்ந்து “அம்மா … ம்மா…. ம்மாஆ எங்கே இருக்கீங்க? “ என்று கத்தி கொண்டே ஓடினான். உடலெங்கும் வலியின் ஆட்சி
இருந்தபோதும் தன் அன்னையைக் காணும் ஆவலில் வலியை தூசியாய் தட்டி ஓடினான்.
“த்தக் த்தக்….. த்தக் த்தக்”
சத்தம் வந்த திசையைப் பார்த்தவன் சப்தநாடியும் அடங்கிடும் அளவுக்கு அதிர்ச்சியில் செய்வதறியாது நின்றிருந்தான். அந்த சத்தம் அவனுக்கு பேராபத்து விளைவிக்கவும் தயங்காதே.
ஆம்! அங்கு ஒரு பெரிய உயிரினம் ஒன்று வானத்தை எட்டி விடுமோ மலையை மிஞ்சி விடுமோ என்றளவில் நின்றிருந்தது. உச்சியில் உச்சிமுற்களோடு நீண்ட வாலோடு பருத்த உடலமைப்புடன்
இருந்த அரிய அவ்வுயிரினம் நடந்து வந்து சத்தம் தான் “த்தக் த்தக்” என்று கேட்டிருந்தது.

செடிகொடிகள் பூக்கும் பூந்தாவரங்கள் அதிகமாக இருந்தும் அவை சூறையாடப்பட்ட தொல்பழங்காலத்தில் கால் பதித்திருந்தான் சிறுவன் தன்வீர்.
தாவர உண்ணியா? ஊனுண்ணியா? என்று மனதோடு பேசிக்கொண்ட தன்வீர் ஆபத்து தன்னை நெருங்கும் முன் ஒளிந்து கொண்டான்.
கால் நெருப்பாகச் சுட்டது. குனிந்து கால்களை பார்த்தவன் “ஐயோ என் ஷூஸ் எங்கே போச்சுனு தெரிலயே” என்றவன் நிழல் தேடி அலைந்தான். கதிரவனின் கடும் கதிர்கள் வெம்மையாக எங்கும் பரவியிருக்கக் காய்ந்து போன செடிகொடிகளுடன் நீர்நிலைகளும் இல்லாமல் பாலைவனமாகக்
காட்சியளித்த அந்த வனம் அச்சுறுத்தலைத் தந்தது தன்வீர்க்கு. அப்பொழுது தான் திரும்பி செல்லும் வழியறியாது வந்த தன் முட்டாள் முந்திரித் தனத்தை நினைத்து மனம் வருந்தினான்.
சிறிது தூரம் கடந்ததும் சின்ன சின்னதாக மலைக்குன்றுகள் தென்பட அங்கும் வித விதமான உயிரினங்கள் காணப்பட்டன. கங்காருவின் பெரிய உருவம் ஒன்று நிற்பது போல அவ்வுயிரினம்
இருகால்களில் நின்று குன்றுகளின் ஒரு புறத்தில் இருந்து துருத்தியிருந்த இலைகளைப் பிய்த்து இழுத்துத் தின்றுக் கொண்டிருந்தது. வியப்பின் உச்சத்தில் இருந்த தன்வீர் பார்வையை திருப்ப அங்கு
முதுகெல்லாம் முற்கள் முளைத்தது போல வால் வரை இருந்த முற்கள் கொண்டு திமிங்கலம் போல இரு திமில் கொண்ட மற்றொரு உயிரினத்தை காயப்படுத்தித் தன் உணவை பறித்து கொள்ள முயற்சித்தது.

பற்களெல்லாம் குருதி வடிய நின்றிருந்த அதனை பார்க்கவே பயங்கரமாக தெரிய உடல் நடுங்கியது பொடியனுக்கு. கால்களை பின்புறமாக நகர்த்தி திரும்பி பார்க்காமல் ஓடினான். மூச்சு வாங்க அவன் நின்றிருந்த இடம் சிறிய நீர்நிலை நிரம்பிய குட்டை. தாகத்திற்கு தண்ணீர் அருந்தலாம் என்று குட்டையில் மெதுவாக இறங்கி தெளிந்த நீரை கையில் எடுத்து பருகிய நொடி நேரத்தில் தண்ணீருக்குள் இருந்து ஒரு வித்தியாசமான பறவையினம் மேலே வந்து பறந்துச் செல்ல விதிர்விதிர்த்து போன தன்வீர் “அம்மா” என்றுக் கதறி அழுதான். அவனுக்கு புரிந்தது தான் வந்து இருக்கும் கால பயணம் துணுச்சாரை
எனப்படும் டினோசர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் என்று. தப்பிச் செல்ல வழியும் இல்லை உயிர் வாழ வழியும் இல்லை. அவன் அழுகிறச் சத்தம் கேட்டுப் பறந்துச் சென்ற பறவை மீண்டும் வந்து அவன் முன் நின்று உற்றுப்பார்த்தது. பட்டன் தட்டியது போல அழுகையை நிறுத்தியவன் செய்வதறியாது முழிக்க அந்த தெரோபொடா டினோசர் பறவைக் கூச்சலிட்டு தன் கூட்டாளியை அழைத்தது புதிய உணவொன்று
கிடைத்தது எனும் செய்தியோடு. தெரோபொடா திரும்பிய நொடி நேரத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய பாலகன் எடுத்தான் ஓட்டம். ஓடிக் களைத்தவன் மூச்சு வாங்க நின்ற இடம்
சௌரோபோடா எனப்படும் டினோசர்கள் வகையை சேர்ந்தக் கூட்டம் வாழும் இடம். அவை ஒவ்வொன்றும் யானையை விட ஐந்து மடங்கு பெரியதாக இருந்தது. மூச்சுக் காற்றின் சத்தம் கூட கேட்காத அளவுக்கு அங்கிருந்து சாதுர்யமாக நகர்ந்த தன்வீர் பட்டுப் போன மரத்தின் கிளை நிழலில் தஞ்சம் அடைந்து அமர்ந்துக் கொள்ள வயிற்றில் ஏதோச் செய்தது. இத்தனை நேரம் ஓடியதில் பசியுணர்வை அறியவில்லை இப்பொழுது உணரவும் கண்ணில் நீர் நிறைந்து விழிப்படலத்தை மறைத்தது. அதன் வழி ஒன்றிரண்டாகத் தெரிந்த உருவம் அருகே வருவது போலத் தெரிய இமைகளைச் சிமிட்டி கண்ணீரை வடிய விட்டவன் விழிகளைத் திறந்து பார்க்க ஆர்னிதோபோட் எனப்படும்
வாத்தினை ஒற்ற டினோசர் விழிகளில் ஆர்வத்துடன் இவனை நோக்கி வந்தது. ஓடிய களைப்புடன் பசியும் கூட்டணிச் சேர்ந்துக் கொள்ள வாடி வதங்கிய தேகத்துடன் மெதுவாக எழுந்தவன் அந்தப் பட்டு போன மரத்தின் நடுவே இருந்த இடுக்கின் வழியே உள்நுழைந்து ஒளிந்துக் கொண்டான்.
ஏமாற்றம் அடைந்த ஆர்னிதோபோட் அந்த இடுக்கின் வழி நுழைய முயற்சிக்க அதன் தடித்த பருமனான உருவம் அதற்கு உதவவில்லை. கோவத்தில் வந்த வழியே போய்விட்டது. எத்தனை மணி நேரம் அப்படியே
இருந்தானோ பசி களைப்பின் தாக்கத்தில் உறங்கியிருந்தான். திடீரென தான் இருக்கும் இடம் பெயர்ந்து விழுவது போலதான பிரம்மையில், உணர்வு வந்த பாலகன் விழிகளை மலர்த்திப் பார்க்க அதிர்ச்சியில் உறைந்து போனான். அங்கு செரடாப்சியா தன் கொம்பை வைத்து மரத்தைத் தாக்கி கொண்டிருந்தது.
அவ்வப்போது நுகர்ந்து பார்த்து தனக்கான இரை இங்குள்ளது என்று குறிப்புணர்ந்து செயல்பட்டது.
பயத்தில் உறைந்த தன்வீர் செய்வதறியாது தவித்து அரற்றி “அம்மா அம்மா ரித்து டாடி” என்றுக் கதறிட ஆரம்பித்தான்.
“ச்சடாக்… ட்ர்ர்ர்… த்தடக்” இரண்டு செரடாப்சியா டினோசர்கள் எதிரெதிர் பக்கம் நின்று தாக்கியதில்
ஏற்கனவே பட்டுப் போய் இருந்த மரம் மீதமிருந்தத் தன்னுயிரை நீத்து மண்தரையில் பொத்தென்று விழுந்து மாய்த்தது. நடநடுங்கி போனான் சிறுவன் தன்வீர். முடிந்த மட்டும் ஓடிஓடி களைத்த
பாலகன் இதற்கு மேல் ஓட முடியாது என்று எண்ணி ஓரிடத்தில் நின்றான். எதிரெதிர் திசையில் துரத்தி வந்த செரடாப்சியா நின்றிருந்தது. செரடாப்சியாவின் கண்கள் இரண்டும் ஜொலித்திட வாயைத் திறந்து வைத்து இரு பக்கம் இருந்தும் கொம்புகள் கொண்டுக் குத்திக் கிழித்திட நெருங்கி வந்தது தன்வீரை.

இங்கு வெளியேறிய ரித்விக் தன் வதுகையவளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களையும், பூக்களையும் தேடி வாங்கி வந்தவன் வீட்டிற்கு விரைந்தான்.
“தன்வி கண்ணா எங்கே இருக்க? அப்பா உனக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். இங்கே வா”
வீடெல்லாம் தேடியும் காணாதவன் ‘எங்கே போயிருப்பான்?’ என்று யோசிக்கத் தொடங்க பொறித் தட்டியது. உடனே ஓடோடி தன் ஆராய்ச்சிக் கூடத்திற்கு சென்றுப் பார்க்க தான் சந்தேகம் கொண்டது சரியென்பது போல அங்கு கால இயந்திரத்தின் வெளியே விழுந்துக் கிடந்த தன்வீரின் ஷூக்களையும் அது பயன்படுத்தப்பட்டிருப்பதற்குச் சாட்சியாக 1 என்று இயந்திரம் காட்டிக் கொடுக்க உடனே பயணத்தின் முகவரி மற்றும் மீண்டு வருவதற்கான கைக்கடிகாரம் அனைத்தும் எடுத்துப் பத்திரப்படுத்தியவன் தானும் பயணம் மேற்கொள்ள இயந்திரத்தை உயிர்ப்பித்தான். அடுத்த நொடி பரவெளித் தோன்ற அதனுள் அணுவாக நுழைந்து தன்வீர் இருக்குமிடம் வந்திருந்தான். ஓர் நொடியில் உடலின் அனைத்துச் சக்திகளையும் திரட்டி வேகமாக ஓடி வந்தவன் தன்வீரின் இடபுறக் கையை இழுத்துக் கொண்டு கீழே விழ, வலப்புறக் கையையும் ஒரு ஆதிவாசிப் பெண் பிடித்தபடி அவர்களோடு கீழே விழுந்திருந்தாள்.
செரடாப்சியா இரண்டும் நேரேதிரே மோதிக்கொள்ள அதன் கொம்புகளால் காயபட்டுக் குருதிச் சொட்டக் கத்திகொண்டே அவ்விடம் விட்டு ஓடியிருந்தது.
நிம்மதி பெருமூச்சு விட்ட ரித்விக் தன் மகனை ஆரத்தழுவி முத்தமிட்ட பின்னே அருகில் இருந்தப் பெண்ணை பார்த்தான். அதிசயித்து அதிர்ந்து தான் போனான்.

அவள் சாட்சாத் அவனின் மனைவி தன்வீரை பெற்றெடுத்த அன்னை. இருவரையும் இதழ் விரியா புன்னகையுடன் பார்த்திருந்தவள் சிறு தலையசைப்புடன் எழுந்து அவர்கள் கூட்டத்தினர் இருக்கும் குகை நோக்கி நடந்தாள்.
இவர்களும் பின்னேச் சென்றார்கள். அங்கு இவளைப் போன்று ஏனையவர்களும் இலைதழைகளை ஆடைகளாக உடுத்தி அவர்கள் மொழியில் பேசிக்கொண்டனர். தன் மனைவியானவளையே உற்று
நோக்கியவன் தான் கொண்டு வந்திருந்த பூவை அவளிடம் தந்தான். மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் புன்னகைக்க மட்டும் செய்தாள். அனைவரிடமும் நன்றி உரைத்தவன் அங்கிருந்து உடனடியாக தன்வீரை
இழுத்துக் கொண்டு மீண்டும் தன் ஆராய்ச்சிக் கூடத்திற்கே வந்திருந்தான். “ஐம் சாரி டாடி. எல்லாம் என் மிஸ்டேக் தான். அம்மாவை பாக்கனும் என்ற ஆசையில் பிராப்பரா யூஸ் பண்ண தெரியாம இப்படியான ஆபத்தில் போய் மாட்டிக்கிட்டேன்”
“சரிடா கண்ணா. தூங்கி ரெஸ்ட் எடு. நடந்தத மறந்துடு” என்றவன் தனதறைக்குச் சென்றிருந்தான்.
பயணம் மேற்கொள்ளும் போதே அலைபேசியில் புகைப்பட அழுத்தானை ஆன் செய்தவன் அங்கிருந்து புறப்படும் வரை நடந்தவைகளை பதிவுச் செய்திருந்தான்.
கால பயணம் செய்யலாம் ஆனால் அங்கிருப்பவர்களை தொந்திரவு மற்றும் மனமாற்றம் என்று எந்த ஒரு மாற்றமும் செய்யக் கூடாது. அது காலத்தை மேலும் சிக்கலாக்கும் என்பதால் இப்படியொரு வழியைக்
கடைபிடித்திருந்தான். பதிவினைப் பார்த்துப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தான். தன்னவளின்
புகைப்படத்தினை நெஞ்சோடு அணைத்தபடி உறங்க ஆரம்பித்தான்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!