ஒரு நாள் போட்டி கதை: மரணத்துக்குப் பின் மகிழ்ச்சி!

by admin 2
47 views

எழுதியவர்: வானவன்(ஆகாஷ்)

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு!

அன்றைய மாலை மற்ற நாட்களைவிட வேறுபட்டதாக இருந்தது. சுமிதா தன்னுடைய பெரிய வயிறை மெதுவாக தடவிக்கொண்டு, ஜன்னல் அருகில் நின்று தோராயமாக வெளியில் பார்வையிட்டாள். காற்று மெதுவாக வீசியது. அவள் குழந்தையை அடிக்கடி உணர்ந்தது, நெருங்கி வரும் பிரசவத்தைச் சுட்டிக்காட்டியது. அவளின் கணவர் மோகன், அந்த சமயத்தில் வீட்டில் இல்லை; வேலைகளை முடித்து வீட்டிற்கு வந்து சேரும் நேரம்.
சுமிதாவின் மனதில் ஒருவித குழப்பம். அவளுக்கு பிரசவ நாள் நெருங்கியதைவிட, முன்பு பலமுறை நடந்த சில காட்சி, மயக்கம் குறித்த மர்ம எண்ணங்கள் அதிகம். இரு முறை குழந்தையை அடைந்து தோல்வியில் முடிந்தது. இந்த மூன்றாவது முறை எப்படி இருக்கும்? குழந்தை எப்படி இருக்கும்? இம்முறை பிரசவம் எந்தப் பிரச்னையுமில்லாமல் சரியாக முடிவடையுமா? இத்தனை கேள்விகளும் அவளின் மனதில் சுற்றிக்கொண்டிருந்தன.

மேகங்கள் குறுகிப் பார்வைக்குப் பரிதாபமாக இருந்தன. சுமிதா டிவி பார்க்கும்போது, திடீரென வலியோடு வயிற்றில் பிடிப்பு வந்தது. “அது வலி தானா?” அவள் மனதில் குழப்பம். அவள் திடீரென வலியால் கத்த தொடங்கினாள். மோகன் வெளியிலிருந்து வந்து, அவளைப் பார்த்ததும், அச்சத்தில் அவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.

“சுமி! என்ன ஆச்சு? வலி தாங்க முடியலையா?” மோகன் அவளைத் தூக்கிவைத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தான். ஆம்புலன்ஸை அழைப்பதற்கு பதிலாக தன்னுடைய காரிலேயே அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், சுமிதாவின் பயம் அதிகமாகியது. அந்த வலி வேகமாக தீவிரமாகியது. “இந்த தடவை பிரசவம் எப்படி இருக்கும்?” என்ற ஏக்கம் அதற்குள் சுமிதாவை சுழற்றியது. மோகன் அவளைத் தன்னம்பிக்கையுடன் சௌகரியமாக வைத்திருந்தாலும், அவள் கண்களின்பின் மர்ம நிழல் போன்ற உணர்வு இருந்தது.

மருத்துவமனையில் பிரசவ வார்டில் சேர்த்தப்பின், மருத்துவரின் முகத்தில் பெரும் கவலை இருந்தது. அதே சமயம் அவரின் குழுவும் பிஸியாக வேலை செய்கின்றனர்.

“மோகன், உங்க மனைவிக்கு பிரசவ சிக்கல். குழந்தையின் தலை இன்னும் தலைகீழான நிலைக்கு சரியாக வரவில்லை. தொப்புள் கொடி கழுத்தைச் சுற்றி இருக்கிறது. இதனால் குழந்தை மூச்சு விடுவதில் சிரமம். சுமிக்கும் இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது என்றார் மருத்துவர்.

அந்த சொற்கள் மோகனின் மனதை முற்றிலும் சிதறடித்தது. கண்களில் நீர் சுரக்க தொடங்கிற்று. அவன் சுமிதாவின் அருகில் இருக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால், மருத்துவர் அவனை அனுமதிக்கவில்லை.

சுமிதா திணறிக்கொண்டு இருந்தாள்.  அவள் படுத்து இந்த பச்சை நிற மெத்தை வெள்ளை நிறமாக அவள் கண்களுக்கு தெரிந்தது. வெள்ளைப் பரப்புகளும் அவளது கண்முன்னே தோன்றியது. அவள் தன்னை உலகில் ஒரு துளியாய் உணர்ந்தாள். சுமிதா மெல்ல மெல்ல மரணம் என்பது என்னவாக இருக்கும் என்பதை அனுபவிக்க ஆரம்பித்தாள். தான் கரைந்து போவது போன்ற உணர்வு அவளை பீடித்தது. மற்றொருபுறம் வயிற்றுக்குள் உள்ள குழந்தையின் அசைவையும் மறக்க முடியாமல் அவள் அவ்விடத்தில் தள்ளாடியபடியே இருந்தாள்.

அப்போது, அந்த வெள்ளை பரப்பில் இருந்து ஒரு பெண் தெரிந்தாள். வெள்ளைப் புடவையில் இருந்த அந்தப் பெண்ணின் தோற்றம், இயற்கைக்கு மாறானவிதமாக சுமிதாவின் முன்னிலையில் வந்தது. இப்போது சுமிதா எந்தவித வலியையும் அனுபவிக்கவில்லை. தனக்கு என்னதான் நடந்தது என்று சுமிதா சிந்திக்க ஆரம்பித்தாள்.

அந்தப் பெண் சிரித்துக் கொண்டே, “நீ இங்கே இருக்கிறாய். உன் வாழ்க்கை எப்போதோ முடிவடைந்தது. இன்னும் மீதி உன் முடிவு. நீ இங்கேயே இருக்க விரும்புகிறாயா? அல்லது உன் குழந்தைக்காக திரும்பப் போகிறாயா?” என்று கேட்டாள்.

சுமிதா அதிர்ச்சியடைந்தாள். நான் மரணம் அடைந்துவிட்டேனா? இது உண்மையா? குழந்தை… அது என்ன செய்யப் போகிறது? இத்தனை கேள்விகளும் அவளது உள்ளத்தை சூழ்ந்தது.

அறையின் ஒரு மூலையில் நின்று கொண்டு தன் உடலை தானே காண்பது போன்ற உணர்வு எழுந்து, அச்சத்தில் அவள் வாய் குழறியது.

சுமிதா உயிரிழந்ததாக மருத்துவர் அறிவித்த அடுத்த நொடி, மோகன் ஒரு புறம் கதறி அழுது கொண்டிருக்கிறான்.

“நான்…” சுமிதா பேசத் தொடங்கினாள்.

ஆனால், அந்தப் பெண் சுமிதாவின் அருகில் வந்து, “நீ மிகவும் உறுதியான முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில் இருக்கிறாய். ஒரு நாள் மரணம் என்பது முழுமையான முடிவல்ல. உன் குழந்தையின் எதிர்காலம் உன்னோடு உள்ளது,” என்று எச்சரித்தாள்.

சுமிதா உடனடியாக தன்னுடைய குழந்தையின் அன்பு, எதிர்காலம், அதை வளர்ப்பது என்று எண்ணிக்கொண்டாள். அந்த அன்பு வெறும் பாசமாக அல்லாமல், உயிர் கொடுக்கும் அளவுக்கு வலிமையாக இருந்தது.

“நான் திரும்பவேண்டும். என் குழந்தையை வளர்க்க வேண்டும். நான் இதைத் தாண்டி போராடுவேன்,” என்று சொல்லியவள் திடீரென்று கைகளை மெல்ல அசைத்தாள்.

அங்கிருந்த மருத்துவர்கள் ஒரு நிமிடம் உறைந்து நிற்கிறார்கள். ‘திஸ் இஸ் மெடிக்கல் மிராக்கிள்’ என்று மருத்துவர் சொல்கிறார். மோகன் மகிழ்ச்சியோடு மேலும் தேம்பி தேம்பி அழுகிறான்.

அவளின் கண்களில் அசைவு வந்தது. மோகன் அவளை பிடித்து அழுதுகொண்டே, “சுமி! உனக்கு ஒன்னும் ஆகல! நம்ம குழந்தை பாதுகாப்பாக பிறந்தாச்சு!” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

“அவங்கள கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க. மத்தத அப்புறம் பேசிக்கலாம்” என்று மோகனை டாக்டர் வெளியேறச் சொல்கிறார்.

அவளது சுவாசம் மீண்டும் வழக்கமான நிலைக்கு வந்தது. மருத்துவரின் முகத்தில் சிறிய புன்னகை.

சுமிதா தன் குழந்தையைப் பார்த்தபோது, ஒரு வினாடி நேரத்தில் ஏற்பட்டது போல் உணர்ந்த மரணம் நிஜமாகவே நிகழ்ந்திருப்பதை உணர்ந்தாள்.

ஒரு நாள் மரணம்……….. ஆனால், குழந்தையின் உயிர்க்காக, சுமிதா புத்துயிர் தழுவினாள்.

அந்தப் போராட்டத்தின் மத்தியில், சுமிதா தன்னுடைய உயிரின் புதிய அர்த்தத்தைப் புரிந்துக்கொண்டாள். மரணத்தைச் சந்தித்தபின் திரும்பி வந்ததற்காக, அவள் வாழ்வில் ஒரு புதிய ஒளி கிடைத்தது. ஆனால் அந்த அனுபவம் குறித்து யாரிடமும் வெளியில் சொல்லவில்லை

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!