ஒரு நாள் போட்டி கதை: மாசில்லாமணி!!!!

by admin 2
60 views

எழுதியவர்: திவ்யா

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் ஆபாச நடிகரோடு! 

ஏன்யா, கவர் ஸ்டோரி கூட வேண்டாம். ஒரு பத்து வரில சின்ன கிசு கிசு கூடவா உனக்கு கிடைக்கல? ச்சே உன்கிட்ட சர்ட்டிபிகேட் இருந்து என்ன பயன் சரக்கு இல்லையே! என்னமோ போங்கய்யா எப்படி எப்படியோ காலப் புடிச்சு கையப் புடிச்சு கெஞ்சி வேலைய வாங்கிடறீங்க, அப்பறம் எங்க உசுர வாங்கறீங்க – ஏகத்துக்கும் திட்டித் தீர்த்தார் அந்த பிரபல நாளிதழ் எடிட்டர் ராமு என்ற ராமநாதன். எதற்கும் பதில் பேசாமல் அமைதியாக எடிட்டர் பேசி முடிக்கும் வரை நின்ற சீனு தன் அறைக்குத் திரும்பி நாற்காலியில் அமர்ந்தார். ஆனால் சீனுவிற்கு ராமு சார் மீது கோபம் வருவதற்கு மாறாக இரக்கம் வந்தது.  அவருந்தான் என்ன செய்வார்? நாளிதழ் பிரபலமாகும் வரை சினிமா விமர்சனம் முதல் சினிமா பிரபலங்கள் அந்தரங்கம் வரை எழுதி முடித்தாகி விட்டது. தடுக்கி விழுந்தால் எழ முடியாத அளவிற்கு சினிமாவை நோக்கி ஒரு பெருங்கூட்டம் எப்போதும் நிற்கிறது.

           இதில் சமூக ஊடகங்களும் தன் பங்கிற்கு டைம் பாஸிற்கு தொலைபேசியை உபயோகப்படுத்தியவர்களை கதாநாயகன் கதாநாயகிகளாக நம்ப வைத்து சினிமாவிற்கு இழுக்க பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. திரைக்கு வந்த படங்கள், ஓடிடியில் வெளியாகும் படங்கள், கிடப்பில் உள்ள படங்கள், முன்னணி நடிகர் நடிகையரின் படங்கள் என வரிசை கட்டிக் கொண்டு நிற்கும் சினிமாக்கள். இதில் முன்னணி, துணை என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்கள். இவ்வளவு பெரிய கூட்டத்தில் கிசு கிசுவிற்கா பஞ்சம் வந்து விடப்போகிறது? என எண்ணினாலும் மக்களின் ரசனைக்கு ஏற்ப ஏதும் கிடைப்பதில்லை என்பதே உண்மை. இதையும் தாண்டி அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதே கணிக்க முடியாமல் உள்ளது. 

           சிந்தைக்குள் சிறகடித்த நினைவுகளை ஓரங்கட்டி வைத்து விட்டு ஒரு முடிவிற்கு வந்தவராய் தோல் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார். கிளம்பியவர் சேர்ந்த இடம் சியாமளா என்ற நடிகையின் வீடு. சினிமாவில் அவருக்கு இருக்கும் பெயரில் பத்து சதவீதம் கூடப் பெறாத சிறிய வீடு அது. காலிங் பெல் ஒலித்த சில நொடிகளில் கதவு திறந்தது. கதவைத் திறந்தவர் சியாமளா தான். எவ்வித ஒப்பனையும் இன்றி சாதாரண புடவையில் எதிர்வீட்டுப்பெண் தோற்றத்தில் உறுத்தாத அழகில் இருந்தார். வாங்க, யார் நீங்க? என அவர் கேள்விகளை அடுக்கும் முன், நான் சீனு நாளிதலில் செய்தி சேகரிப்பாளர் உங்களிடம் நேர்காணல் எடுக்க வந்தேன் என்றார்.

           அவர் கவர்ச்சி உடையில் இருப்பார். பார்க்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தர்ம சங்கடமான நிலையில் அவரைப் பேட்டி காண வேண்டுமே என எண்ணியவருக்கு சியாமளாவின் உடை ஆச்சர்யத்தையும் தன்னைப் பற்றிய ஒரு அவமான எண்ணமும் தோன்றியது. அது என்ன? ஆபாச பாடல்களுக்கு நடனமாடும் ஒரு பெண் எப்போதும் அப்படியே இருக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன? தானும் அப்படி எதிர்பார்த்ததை எண்ணி ஒரு கணம் கூசிப் போனார். பின் சுதாரித்து நிமிர்ந்தவர் சியாமளா தண்ணீரோடு வருவதைக் கவனித்து வாங்கிக் குடித்தபடியே பேச எத்தனித்தார்.

              பேட்டி எடுக்கற அளவுக்கு நான் எதையுமே சாதிச்சிடலை சார் எனச் சிரிக்க, சினிமாவில் உங்களுக்குப் போட்டியாக எத்தனையோ பேர் வந்தும் இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கீங்களே இதைவிடவும் சாதனை வேண்டுமா? என்றவாறு பேனாவை எடுத்தவர் “இதோ கிளம்பிட்டேன் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஸ்பாட்டில் இருப்பேன் ” எனக் கூறி எழுந்த சியாமளாவை பாவமாகப் பார்த்தார். சியாமளாவோ உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நீங்கள் என்னோடு வந்து பேட்டி எடுக்கலாம் எனக் கூற, அது என் கடமை மேடம் என்றவாறு சியாமளாவைப் பின் தொடர்ந்தார் சீனு. ஆகா என்ன படமோ? என்ன சீனோ? எந்த மாதிரி உடை போட்டு ஆடப் போறாரோ? என எண்ணிக் கொண்டே பயணித்தவரின் எண்ணத்தில் மண்ணைப் போட்டது அந்தப் “புற்றுநோய் மறுவாழ்வு மையம்”. அவசரமாக உள்ளே போனவர் இரண்டு மணி நேரம் ஆகியும் வெளியே வரவே இல்லை.

              காத்திருந்த நேரத்தில் சில புற்றுநோய் பாதித்தவர்கள் தாங்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டதையும் அதிலிருந்து மீண்ட கதைகளையும் சொல்லிச் சென்றனர்.  என்னடா இது? போற  போக்கப் பார்த்தா நடிகையோட பேட்டிக்கு பதிலா புற்றுநோய் பத்திதான் நியூஸ் எழுதுவேன் போல, என நினைத்தவாறே கண்களைச் சுழல விட்டார் சீனு.

 அவ்வளாகத்தின் ஓரத்தில் ஒரு மரத்தடியில் நடுத்தரப் பெண்மணியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் நடிகை சியாமளா. அதைப் பார்த்தவுடன் அவர்களை புகைப்படமாக தன் கைப்பேசியில் பதிவு செய்தார். உடனே உள்ளே உள்ள அவசர புத்தி, “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகையின் கடைசி நாட்கள்” அல்லது ” பிரபல ஆபாச நடிகைக்கு புற்றுநோய்” என தலைப்புகளை யோசித்து அதற்கான செய்திகளையும் சேகரிக்க ஆரம்பித்து விட்டது. 

              உள்ளுணர்வு தடுக்க கற்பனைகளை மூட்டை கட்டி விட்டு அந்த நடிகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார். மேலும் சில நிமிடங்கள் கரைய புன்னகையுடன் சீனுவை நோக்கி வந்தார் சியாமளா. சாரி சார், உங்களுடைய நேரத்தை வீண்டித்ததற்காக! எனக் கூறி சற்று நிதானித்தார் சியாமளா. நோ ப்ராப்ளம் மேடம்! இட் ஹாப்பன்ஸ், எனச் சிரித்தபடியே அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற ஆர்வத்தில் காதைத் தீட்டினார் சீனு. சார் நீங்க தவறாக நினைக்கவில்லை என்றால் நான் இன்னொரு நாள் உங்களுக்கு பேட்டி கொடுக்கலாமா? இன்னும் இரண்டு மணி நேரம் இங்கே கொஞ்சம் வேலை உள்ளது என்ற சியாமளாவின் பதிலை சீனு எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் சுதாரித்து நோ ப்ராப்ளம் அட் ஆல் மேடம். ஐ வில் வெய்ட் ஃபார் யூ எனச் சீனு சொல்லவும் அதை ஆமோதித்தவாறே மீண்டும் அதே அறையில் புகுந்து மறைந்தார் சியாமளா. ம்ஹ்ம் நாமளும் ஏதோ ஒன்ன எழுதி பேர் வாங்கலாம்னு பார்த்தா எல்லாம் சதி பண்ணுதுகப்பா. அப்பா முருகா நீதான்பா எல்லாத்தையும் கடந்து வர எனக்கு துணையா நிக்கனும் என தன்னிச்சையாக வேண்டிக் கொண்டார் சீனு.

               என்னதான் மனசுக்குள் ஒரு கோபம் இருந்தாலும் சியாமளாவிற்கு புற்றுநோய் இருக்குமா? அப்படியே இருந்தாலும் அது என்னவாக இருக்கும்? எப்படி வந்திருக்கும்? அது எப்படி இத்தனை நாள் யாருக்கும் தெரியாமல் இருக்கும்? என்ற கேள்விகள் வண்டுகளாய் மண்டையைக் குடைந்தன. சரி சரி ஆனது ஆயிற்று இன்னும் இரண்டு மணி நேரம் தானே! ஒரு நாள் ஓய்வு எடுத்ததாக வைத்துக் கொள்வோம் என தன்னை சமாதானம் வேறு செய்து கொண்டார். வயிறு மணி அடிக்கவுமே இத்தனை நேரம் டீ கூட குடிக்காதது நினைவு வர சாப்பாட்டுக் கடையை நோக்கி நடந்தார் சீனு. 

          எதிரில் தெரிந்த உணவுக் கடையுள் நுழைந்து தேவையானதை ஆர்டர் கொடுத்து தோதான ஒரு இடத்தில் அமர்ந்தார். சொல்லி வைத்தாற் போல அந்த மையத்தில் பணிபுரியும் ஒரு ஆள் வந்து அருகில் அமர்ந்தார். அவரது உடையைக் கவனித்தவர் அவரிடம் மெதுவாக பேசத் தொடங்கினார். ஏம்ப்பா, மையத்துல எத்தனை பேர் இருப்பாங்க? என்றார். நூறு பேருக்கு மேல இருப்பாங்க என்றார் நிமிராமலேயே. ஓஹோ அப்போ மையம் நல்ல கவனிப்புல இருக்கு போலயே! எனக் கேட்கவும் ஆமாம் என்றார் அதே தொனியில். இங்கே நடிகைகள் கூட இருக்காங்க போல? என அவர் கேட்கவும் சற்றே நிமிர்ந்து சிரித்து விட்டு மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். அது அவரது ஆர்வத்தைத் தூண்ட நேரடியாகவே சியாமளா மேடம் என்ன பிரச்சினைக்காக உங்க மையத்துக்கு வராங்க? எனக் கேட்டு விட்டு சிறிது பணத்தை  உள்ளங்கையில் வைத்தார்.

             ஏன் சார்? அதக் கேட்டு உங்க பத்திரிக்கைல கண்டபடி எழுதி அவங்கள அசிங்கப்படுத்தி நீங்க பிரபலமாகனும் அதுக்குத்தானே? என்ற அவரின் பதிலால் சற்று தடுமாறி பின் நிதானித்து, அப்படி எல்லாம் இல்லங்க. உள்ளதை உள்ளபடியே எழுதனும் என்பது தான் என் எண்ணம். அதுதான் பத்திரிகை தர்மமும் கூட என்றார். ஆமாம் சார் உங்க தொழில் தர்மம் என் உள்ளங்கைல இருக்கு பாருங்க, எனக் கூறி வெறுப்பாய் சிரித்து விட்டு நான் இல்லைனா இன்னொருத்தன் காசுக்கு ஆசப்பட்டு கண்டதையும் சொல்லக்கூடும் அதனால நானே சொல்றேன். எல்லோரும் தான் வேலை செய்யறாங்க. சிலர் பிடிச்சு ஒரு வேலையை செய்வாங்க, சிலர் குடும்பத்துக்காகன்னு செய்வாங்க, சிலர் அவங்க வயித்துக்காக எதையும் செய்வாங்க, ஆனா சியாமளாம்மா எங்களுக்காகத்தான் சினிமாவில ஆபாசப் படங்கள், பாடல்கள்ல நடிக்கவும் ஆடவும் தொடங்கினாங்க என்றவரின் குரல் தழுதழுத்தது.

             அம்மா இல்லாம அப்பாவால வளர்க்கப்பட்டவங்க சியாமளாம்மா. அவரும் புற்றுநோயால பாதிக்கப்பட இந்த மையத்துல சேர்த்து கூடவே இருந்து கவனிச்சுகிட்டாங்க. புற்றுநோயோட கடைசி கட்டத்துலதான் அவங்க இங்க வந்து சேர்ந்தாங்க. அப்போ நானும் இங்க சிகிச்சைக்காக வந்திருந்தேன். அவங்க அப்பாவோட சேர்த்து எங்களுக்கும் ஆறுதல் சொல்றதும் உதவி செய்யறதும் என எல்லோருக்கும் ஒத்தாசையாக இருந்தாங்க. இந்த மையத்தோட பொறுப்பாளர் சிவபதம் அடைஞ்சதும் எல்லோரும் ஒதுங்கிக்கொள்ள தானாக முன்வந்து அந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டாங்க சியாமளாம்மா. எங்களோட சிகிச்சைக்காக எத்தனையோ இடங்கள்ல உதவி கேட்டாங்க. ஆனா பல இடங்கள்ல கைகொடுக்காம கையைப் பிடிச்சாங்க. அதனால வேற வழி இல்லாம சினிமாவிற்கு வந்தாங்க. அதனால ஒன்னும் கெட்டுடல சார் எங்கம்மா தங்கம் சார். குப்பைல கிடந்தாலும் வைரம் தரத்துல குறைஞ்சிடாது சார். எத்தனை பேர் தூற்றினாலும் மாசு படாத மாசில்லாமணி சார் அவங்க.  ஊர் உலகத்துக்கு வேணும்னா அவங்க ஆபாச நடிகையா இருக்கலாம் சார் ஆனா எங்களுக்கு அவங்க தான் நம்பிக்கையும் வாழ்க்கையும் கொடுத்த சாமி சார் என உணர்ச்சிவசப்பட்டவர் நானும் இந்த மையத்தாலயும் சியாமளாம்மானாலயும் தான் பொழச்சு உங்க முன்னாடி நிக்கறேன் சார் எனக் கூறி சற்று ஆசுவாசமாகி சரிங்க சார் நேரமாச்சு தேடுவாங்க என எழுந்தார். 

                  சார் நான் உண்ட சாப்பாட்டுக்கு தர்மம் செஞ்சிட்டேன். நீங்களும் உங்க தர்மத்தை செய்வீங்கன்னு நம்புறேன் என்று கூறிவிட்டு வேகமாக சென்றுவிட்டார். மையத்தில் ஒரு மரத்தடியில் அதே சிரிப்போடு யாரோ ஒரு முதியவருடன் பேசிக் கொண்டிருந்த சியாமளாவை தூரத்தில் இருந்து மானசீகமாக வணங்கினார். ஒரு நாள் வீண் என்று எண்ணி இருந்த சீனு இனி வாரத்தில் ஒரு நாளேனும் உபயோகமாக கழிக்க இங்கு வர வேண்டும் என எண்ணியபடியே தன் வண்டியை நோக்கி நகர்ந்தார்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!