ஒரு நாள் போட்டி கதை: ரோஜா தோட்டம்

by admin 2
41 views

எழுதியவர்: அருள்மொழி மணவாளன்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு!

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அனிதாவின் காதுகளில் யாரோ கதவைத் தட்டுவது போல் சத்தம் கேட்டது.

கண்களை கசக்கி மணியை பார்க்க மணி இரவு 1:30 ஆகியிருந்தது. இந்நேரத்தில் யார் வருகிறார்கள் என்று நினைத்து கொண்டு கதவை திறக்க, கதவு ஏற்கனவே திறந்து வெறுமனே சாத்தியிருந்தது. அவளுக்கு நன்றாக நினைவிருந்தது கதவை தாழ் போட்டு விட்டு தான் வந்து படுத்தாள். 

யார் வந்திருப்பார்கள் என்று வெளி விளக்கை போட்டு பார்க்க, யாரும் வெளியே இருப்பது போல் தெரியவில்லை. மீண்டும் கதவை மூடும் போதுதான் பார்த்தாள் தாழ்ப்பாளில் இரத்தம் இருப்பதை. 

எப்படி இங்கு இரத்தம் வந்தது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் அனிதா. 

அனிதா 27 வயது இளம்பெண். பெற்றோரை இழந்தவள். தனியார் மருத்துவமனையில் செவிலியாக வேலை பார்க்கிறாள். 

தாய் தந்தை இறந்ததும் தன்னிடம் உள்ள பணத்திற்காகவும் சொத்துக்காகவும் வந்த சொந்தங்களை கண்டறிந்து, அவர்களை விட்டு விலகி தனியாக தங்களது இடத்தில் வசிக்கிறாள். 

அவளது அப்பாவும் அம்மாவும் இயற்கை விரும்பிகள். ஆகையால் ஊருக்கு வெளியே தனியே இடத்தில் அவர்களது தோட்ட  வீட்டை அமைத்து சுற்றி வீட்டிற்கு தேவையான காய்கறிகளையும் விளைவித்து வாழ்ந்து வந்தார்கள். ஒரே பெண் என்பதால் தைரியசாலியாக வளர்த்திருந்தனர் அவளது பெற்றோர்கள். 

அதன் விளைவாக பூட்டிருந்த கதவு திறந்து இருந்ததும், அதில் இரத்தம் படிந்திருந்ததையும் கண்டு, கொஞ்சம் கூட பயப்படாமல், தங்கள் வீட்டிற்குள் தன்னைத் தவிர யாரோ வந்துவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்டாள். 

நேற்று தோழி ஒருத்தி அவசர விடுமுறை எடுத்திருந்ததால், அவளது வேலையையும் பார்த்துவிட்டு வீட்டிற்கு காலதாமதம் ஆகத்தான் வந்திருந்தாள். வந்ததும் வெந்நீர் வைத்து குளித்து விட்டு, இரவு மருத்துவமனை கேன்டினில் சாப்பிட்டு விட்டதால், சமையல் பாட்டி செய்து வைத்த உணவை, காலையில் சாப்பிட பத்திரப்படுத்தி விட்டு, அப்படியே படுத்தவள் அசந்து கண்ணுறங்கி இருக்கிறாள். 

அதனால் தான் அவளுக்கு கதவை உடைத்த சத்தம் கேட்கவில்லை. பழைய காலத்து மாடல் வீடு. வராண்டாவில் ஓரத்தில் மாடிக்குச் செல்லும் படி இருந்தது. மாடிப்படி கைப்பிடியிடம் இரத்தம் படிந்திருந்தது. 

அப்படி என்றால் வந்தவன் மாடியில் தான் இருக்க வேண்டும் என்று கூர்மையான மருத்துவ ஆயுதம் ஒன்றை கையில் மறைத்து வைத்துக் கொண்டு, மெதுவாக தன் தொலைபேசியின் டார்ச் வெளிச்சத்தில், சத்தம் இல்லாமல் படிக்கட்டு ஏறினாள். 

மாடியில் இருந்த வராண்டாவில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை. அங்கு இருந்த அறை கதவு லேசாக சாத்தியிருப்பது தெரிந்தது. மூச்சை எடுத்துக்கொண்ட அனிதா சட்டென்று கதவை திறந்து மின் விளக்கின் சுட்ச்சை போட்டாள். 

அங்கிருந்த கட்டிலில் அரை மயக்கத்தில் கிடந்த ஒருவன் விளக்கொளியில் சட்டென்று எழுந்து, தன்னை பாதுகாத்துக் கொள்ள வந்த நபரை தாக்க முயன்றான். 

எதிரில் நிற்பது பெண் என்றதும் ஓங்கிய அவன் கை அப்படியே நின்று விட்டது. 

“யார் நீ? என் வீட்டிற்கு எதற்கு வந்தாய்?” என்றாள் ரத்தம் வழியும் அவன் கையை பார்த்துக் கொண்டே. 

ஒரு அன்னிய மனிதன், கையில் ஆயுதத்துடன் இருப்பதை கண்டு கொஞ்சம் கூட பயப்படாமல் தன்னிடம் கேள்வி கேட்டதில் ஆச்சரியமாக அவளைப் பார்த்து, “எனக்கு அடிபட்டுருச்சி. பக்கத்தில் இந்த வீடுதான் இருந்தது ஆகையால் தான் உள்ளே வந்து விட்டேன்” என்றான். 

“அடிபட்டால் டாக்டரிடம் தானே போக வேண்டும். அதைவிட்டு இங்கே ஏன் வந்தீங்க?” என்று கேட்டு கொண்ட கீழே சென்று, முதல் உதவி பெட்டியை எடுத்துக்கொண்டு விரைந்து அங்கு வந்தாள். 

அவன் அப்படியே சோர்வாக அமர்ந்திருக்க, “முதலில் ரத்தம் வழிவதை நிறுத்த வேண்டும் நான் பார்க்கிறேன்” என்று அவனது அருகில் சென்றாள். 

“ஏய், அங்கேயே நில்லு. என்கிட்ட வராதே” என்றான். 

“இங்க பாருங்க அண்ணா. நான் ஒரு நர்ஸ். என் எதிரில் ஒருவன் இரத்தம் வழியே நிற்கிற பொழுது, அவனுக்கு உதவி செய்யாமல் என்னால் இருக்க முடியாது” என்று தைரியமாக பேசி, அருகில் வந்து அவனது கையை ஆராய்ந்தாள். 

அவன் சட்டையின் கைப்பகுதியில் கிழிந்து ஓட்டை போல் இருந்தது. 

“சட்டையில் இருக்கும் ஓட்டையை பார்த்தால், கையில் அடிபட்டம் அது போல் தெரியவில்லையே? ஏதோ கூர்மையான ஆயுதம் குத்தியது போல் அல்லவா இருக்கிறது!” என்று சொல்லிக்கொண்டு முதல் உதவி பெட்டியில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து, அவனது சட்டையின் கைப்பகுதியை வெட்டி எடுத்தாள். 

பின்னர் காயத்தை சுத்தப்படுத்தி மருந்து வைத்து காட்டினாள். முடித்ததும் “நான் நினைத்தது போல் ரொம்ப ஆழமாக இல்லை என்றாலும், தையல் போட வேண்டிய அளவிற்கு தான் இருக்கிறது. அதனால் ரத்தம் அதிகம் போகிறது. தற்சமயத்திற்கு மருந்து வைத்து கட்டி இருக்கிறேன். 

நாளைக்கு ஹாஸ்பிடல் போய், நல்லா கிளீன் பண்ணிட்டு தையல் போட்டுக்கலாம், சரியா?” என்று கூறி “டீடீ இன்ஜெக்சன் போட வேண்டும். கொஞ்சம் பொறுங்க, நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு 

“ஏதாவது சாப்பிட்டீங்களா அண்ணா?” என்று கேட்டாள். 

அவளை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தவன், இல்லை என்று மறுப்பாக தலையாட்டினான். 

கீழே சென்று தனக்கு செய்திருந்த உணவை சுடவைத்து எடுத்து, ஊசியையும் எடுத்துக்கொண்டு வந்தாள். 

அவன் கையில் தட்டை கொடுத்து, “முதலில் சாப்பிடுங்க அண்ணா” என்றாள். 

அவனது கண்கள் கலங்கியது “ரொம்ப வலிக்குதா?” என்றாள் அவனிடம் இலகுவாக பேசி. 

இல்லை என்று மறுப்பாக தலையாட்டி, “என்னை இதுவரை யாரும் சாப்பிட்டியா? என்று கேட்டதும் இல்லை. இப்படி சாப்பாடு கொடுத்து, சாப்பிடுங்க என்று சொன்னதும் இல்லை. பாசமா அண்ணா என்று அழைத்ததும் இல்லை” என்றான் மேலே ஓடும் ஃபேனை பார்த்துக்கொண்டு.  

“ஃபேனை பார்த்தது போதும், சாப்பிடுங்க. நீங்க சாப்பிட்ட பிறகு தான் உங்களுக்கு டிடி போடணும்” என்று சொல்லிவிட்டு அவனது எதிரில் அமர்ந்து கொண்டாள். 

“எப்படி அடிபட்டது அண்ணா?” என்று அவன் முகம் பார்க்க, அவன் முகம் இருக்கியது. 

“அதை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறாய்?” என்றான் கோபமாக. 

“சரி சரி, கோபப்படாம சாப்பிடுங்க” என்று கூறி அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

“நீ தனியாக வா இருக்கிறாய்?” என்றான். 

‘நான் கேட்டதற்கு இவர் பதில் சொல்ல மாட்டாராம், இவர் கேட்டதற்கு மட்டும் நான் சொல்ல வேண்டுமாம்’ என்று அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, சாப்பாட்டை எடுத்து வாயில் வைக்கும் பொழுது, அவள் பதில் சொல்லாததால் நிமிர்ந்து அவளை பார்த்தவன். அவள் அவனை பார்த்துக் கொண்டு இருக்க, 

“கேள்வி கேட்டா பதில் சொல்லணும்” என்றான். 

‘நாம மட்டும் பதில் சொல்லனுமாக்கும்’ என்று நினைத்துக் கொண்டு, “இப்போ தனியா தான் இருக்கேன். ஆனால் பகல்ல ரெண்டு மூணு பேரு வேலைக்கு வருவாங்க” என்றாள். 

“என்னது? தனியாக இருக்கிற உனக்கு, ரெண்டு மூணு பேர் வேலைக்கு வேண்டுமா?” என்றான் ஆராய்ச்சியாக. 

அவளைப் பார்த்து தன் கதையை எளிமையாக சொல்லி முடித்தாள் “அப்பாவும் அம்மாவும் இறந்த பிறகு,  சொந்தங்களுடன் வாழ்வது எனக்கு பிடிக்க வில்லை அதனால் நான் இங்கு வந்து விட்டேன். இது எங்கள் இடம். சிறு வயதில் விடுமுறைக்கு இங்கு வந்து தங்குவோம். 

ஆகையால் எனக்கு இங்கு இருப்பது பிடிக்கும் இருக்கிறது. வீட்டை சுத்தி காய்கறி தோட்டங்களும், மலர் செடிகளும் வைத்து பராமரித்து வருகிறேன். அதன் மூலமும் சிறிது வருமானம் கிடைக்கிறது. அது மட்டும் அல்ல யாரும் இல்லாத, சொந்த பந்தங்களால் ஒதுக்கப்பட்ட நான்கைந்து பேரை நான் கவனித்துக் கொள்கிறேன். 

அவர்களில் யாராவது தினமும் இங்கு வந்து தோட்டத்தையும் வீட்டையும் கவனித்துக் கொள்வார்கள். எனக்கும் சாப்பாடு செய்து வைப்பார்கள் இப்படியே நாட்களை ஓடுது” என்றாள். 

அதற்குள் அவன் சாப்பிட்டு முடித்திருக்க, ஊசி போட்டு விட்டு “தூங்குங்கள், நாளைக்கு ஹாஸ்பிடல் போக வேண்டும்” என்று கூறி கீழே சென்று விட்டாள். 

மறுநாள் காலை சமையல் செய்யும் பாட்டி வந்து, அறைக் கதவை தட்டியதும் தான் எழுந்தாள். நேரம் அதிகம் ஆதிவிட்டதை உணர்வு வேகமாக மருத்துவமனை செல்ல தயாராகினாள். 

உணவு உண்ணும் போதுதான், “ஏன் பாப்பா? வெளி கதவை பூட்டாமலே தூங்கியிருக்க” என்றார். 

அப்பொழுதுதான் இரவு மாடியில் ஒருவன் இருந்தது நினைவுக்கு வர, “பாட்டி மாடில ஒரு அண்ணன் இருப்பாரு, அவருக்கும் டிபன் வேணும்” என்று சொல்லிவிட்டு மேலே சென்றாள். 

அங்கு காலியான அறை தான் இருந்தது. எங்கே சென்றார் என்று நினைத்துக் கொண்டு வேலைக்கு நேரம் ஆனதால் பிறகு பார்ப்போம் என்று பாட்டியிடம் சொல்லி விட்டு, தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். 

பேருந்து ஏறியதும் இருக்கையும் கிடைத்தது. உட்கார்ந்ததும் வழக்கம்போல தினசரியை எடுத்து வாசிக்க தொடங்கினாள்.

அதில் இருந்த ஒரு எச்சரிக்கைசெய்தியை படித்ததும் அவளது மனது ஒரு நொடி படபடத்தது. 

சைக்கோ தொடர் கொலை என்ற தலைப்பின் கீழ் உள்ள செய்தியை வேகமாக படித்தாள். வீட்டில் தனியாக இருக்கும் நபர்கள் வித்தியாசமான முறையில் கொலை செய்து வரும் சைக்கோ கொலைகாரன். தொடர்ந்து கொலைகள் நடந்தவண்ணம் இருக்கிறது. 

தனியே இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி இருந்தது. 

ஒருவேளை நேற்று வீட்டிற்கு வந்த அண்ணன் கொலைகாராக இருப்பாரோ? என்ற எண்ணம் வர மனது படபடத்தது. 

பயணம் முழுவதும் அதே எண்ணம் ஓட, அவன் கொலைகாரனாக இருந்தால் ஒரு கொலைகாரனுடனா நேற்று ஒரே வீட்டில் இருந்தேன் என்று தோன்றியது. 

பின்னர் மருத்துவமனை வந்ததும் வேலையில் கவனம் சென்றது. 

வேலை முடிந்து சாயங்காலம் வீட்டிற்கு சென்றதும், தோட்டகாரர் இருந்ததால், தோட்ட வேலை அவளை ஆக்கிரமித்தது. 

வேலை முடித்து தோட்டகாரர் சென்றதும், இரவு உணவை செய்துவிட்டு பாட்டியும் கிளம்பினார். கிளம்பும்போது “நேற்று போல் கதைவை திறந்து வைத்து விடாதே. ஒழுங்கா பூட்டிக்கோ” என்று எச்சரித்து சென்றார். 

அவர் அப்படி சொல்லி சென்றதும் அவளுக்கு நேற்றைய நினைப்பும் காலையில் படித்த செய்தியும் நினைவுக்கு வந்தது. உடனே கதவு நன்றாக சாற்றி விட்டு, மாடிக்கு சென்றாள். 

அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். நேற்று அவள் பயன்படுத்திய இரத்தக் கறை படிந்த பஞ்சுகள் அனைத்தையும் ஒரு மூலையில் தான் கவர் போட்டு வைத்து காலையில் சுத்தப்படுத்திக்கலாம் என்று நினைத்திருந்தாள். அவற்றை காணவில்லை. அறை முழுவதும் சுத்தமாக இருந்தது.

பின்புதான் நினைவுக்கு வந்து படிக்கட்டு கைப்பிடியையும் கதவின் உட்புறத்தையும் பார்த்தாள். அனைத்தையுமே சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. பாட்டி அதைப்பற்றி கேட்காததால், நேற்று வந்தவர் தான் சுத்தப்படுத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

மீண்டும் அறைச் சென்று அங்கிருந்த அலமாரியை ஆராய்ந்தாள். பின்னர் படுக்கையை சரிப்படுத்த, தலையணையின் கீழ் ஒரு நோட்டு இருந்தது. அலமாரியில் இருந்து எடுத்திருக்கிறார். அதை வேகமாக திறந்தால், நடுவில் ஒரு பகுதியில் அன்புள்ள தங்கைக்கு என்று எழுதியிருந்தது. தொடர்ந்து படித்தாள். 

அன்புள்ள பெயர் தெரியா தங்கைக்கு, 

அண்ணன் எழுதுவது. நேற்று உன் கண்ணில் தெரிந்த பாசத்தைக் கண்டு நான் நெகிழ்ந்து விட்டேன். உன்னை பற்றி எல்லாம் கூறினாய். ஆனால் உனக்கு என்னைப் பற்றி தெரியாதல்லவா? நான் ஒரு கொலைகாரன். ஆரம்பத்தில் பணத்திற்காக கொலை செய்தவன். பின்னர் கொலை செய்வது எனது பழக்கம் ஆகிவிட்டது. 

தனியாக இருப்பவர்கள் தான் என் இலக்கு. அப்படித்தான் ஒரு வாரமாக உன்னை கண்காணித்து, கொலை செய்வதற்காகத்தான் உன் வீட்டிற்கு வந்தேன். உன் தோட்டத்தில் உள்ள ஏதோ ஒரு கூர்மையான கம்பி தான் என் கையை குத்தி கிழித்தது. 

எத்தனையோ பேரை ஈவு இரக்கமில்லாமல் குத்தி கொலை செய்திருக்கிறேன். என் கையின் காயத்தை கண்டதும் உன் கண்ணில் தெரிந்த வலியில் என் இதயம் நொறுங்கி விட்டது. 

அது மட்டும் அல்லாமல் அண்ணா அண்ணா என்று நீ அழைத்த சொல், என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எதற்காக கொலை செய்ய ஆரம்பித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் இனிமேல் நான் எந்த கொலையும் செய்ய மாட்டேன். 

அதற்கு காரணம் எனக்கு நன்றாக தெரியும். என் தங்கை நீதான். இனிமேல் நான் எந்த கொலையும் செய்யாமல் திருந்பி வாழ்வேன். என்றாவது ஒருநாள் நல்ல நிலைக்கு வந்து, உன்னை நேரில் சந்திப்பேன். எனக்கு உன்னை பார்க்க தோன்றும் பொழுதெல்லாம் உன்னை பார்த்துவிட்டு, உங்கள் வீட்டின் ஒரு ரோஜா செடியை வைத்துவிட்டு செல்வேன். 

நான் திருந்தமாட்டேன் என்று நீ நினைத்தால், நேற்று உன் வீட்டிற்கு வந்ததை காவல்துறையிடம் தெரிவித்து விடு. 

இப்படிக்கு,

பெயர் தெரியாத தங்கைக்கு பெயர் சொல்லாத அண்ணன். 

முழுவதையும் படித்ததும் அவளது மனதில் ஒரு ஒரு அழுத்தமும் தோன்றியது. அது போல் ஒருவித தவிப்பும் தோன்றியது. தொடர் கொலைகாரனுடன் தான் நேற்று இரவு இருந்திருக்கிறேன். என்னால் அவர் கொலை செய்யாமல் திருந்தி விட்டேன் என்று சொல்லுகிறார். நம்பலாமா? வேண்டாமா? என்று எண்ணம் ஓட, 

கொலைகாரன் என்று யோசிக்கும் பொழுது நம்பிக்கை வரவில்லை. ஆனால் அண்ணன் என்று யோசிக்கும் பொழுது, அவளுக்கு தோன்றிய நம்பிக்கையில் அவள் வீட்டிற்கு வரும் ரோஜா செடிக்காக காத்திருந்தாள். 

இன்று அவள் வீட்டின் தோட்டத்தில் ஒரு பக்கம் ஒரு ரோஜா தோட்டமே இருக்கிறது.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!