எழுதியவர்: அ.கனிஷ்கர்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் நெருப்புக் கோழியோடு!!
அலுவலகம் முடிந்து, முதலில் வீட்டுக்கு வந்த ராகவனுக்கு, வாடியிருந்த வருணனின் முகத்தை பார்த்ததும் ,நெஞ்சில் ஒரு பதட்டம் ஊடுருவியது.. என்னாச்சு வருண் ஏன் ஒரு மாதிரி இருக்கே பள்ளிக்கூடத்துல எதுவும் பிரச்சினையா.. டீச்சர் எதுவும் திட்டிட்டாங்களா..
அதெல்லாம் இல்லப்பா, என்றவாறு, ராகவன் வாங்கி வந்திருந்த ஆரஞ்சு பழங்களில் ஒன்றை எடுத்து தோலுரித்தவன்… பள்ளிக்கூடத்துல அடுத்தவாரம் வளர்ப்பு பிராணிகள் பத்தின கட்டுரைப்போட்டி நடக்குது ப்பா.. அதுல எழுதி ஜெயிக்கிற முதல் ரெண்டு பேரு, மாநில அளவிலான போட்டியில் கலந்துக்கலாமாம், எங்க வகுப்பில் இருக்குற எல்லாருமே பேரு குடுத்துட்டாங்க… அவுங்க வுங்க வீட்ல வளர்க்குற நாய், பூனை ,கிளி , புறா, கோழி மீனுன்னு எழுதப்போறாங்களாம்…
நல்லா எழுதட்டுமே சந்தோசம் தானே நம்ம நண்பர்கள் ஜெயிக்கிறதும் நாம் ஜெயிக்கிற மாதிரிதானே…
ஆனால் எனக்கு.. நான் எதை எழுதறது… நம்ம வீட்ல தான் எந்த பெட் அனிமல்சும் இல்லையே… நானும் எவ்ளோ நாள் கேட்டுப்பாத்தேன், நீங்க வாங்கியே குடுக்கல… அதுதான் இன்னும் நான் என் பேரைக்குடுக்கல.
பெட் அனிமல்ஸ், நம்ம வீட்ல இல்லாதது தான் உன் கவலையா வருண், வளர்ப்பு பிராணிகள் எல்லாத்துக்கும், நம்மல மாதிரியே உயிர் இருக்கும்னு உனகக்கும் தெரியும் தானே.. நமக்கு மாதிரியே அதுங்களுக்கும், நேர நேரத்துக்கு பசிக்கும் , அந்த நேரத்துக்கு அதுங்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லைன்னா பாவம் இல்லையா…
வீட்ல நானும் அம்மாவும் வேலைக்கு போய்விடுவோம், நீ ஸ்கூலுக்கு போயிடுற, யாரு இங்கே இருந்து அதை கவனிக்க முடியும்.. டிபன் பாக்ஸ்ல சாப்பாடு குடுத்தா, நீ மதிய நேரத்தில் திறந்து சாப்பிட்டு விடுவே… நாயுக்கும் பூனைக்கும், டிபன்ல சாப்பாடு வச்சா, திறந்து சாப்டமுடியுமா…. வேணும் போது சாப்பிடுனு சொல்லி தட்டுல போட்டு வச்சா.. சாப்பாடும் சீக்கிரம் கெட்டுப்போய், உடல் நிலை பாதிக்கப்பட்டா, அது பாவம் இல்லையா… நீயே யோசிச்சுப்பாரு…
அப்புறம் எப்படிப்பா என் நண்பர்கள் நிறைய பேரு வீட்டுல, பெட் அனிமல்ஸ் இருக்குது அவுங்க மட்டும் எப்படி வளர்க்கிறாங்க… அவுங்க வீட்ல, தாத்தா பாட்டி அத்தை மாமான்னு யாராவது பெரியவுங்க வீட்ல
இருப்பாங்க, அவுங்க பாத்துப் பாங்க …. உனக்கு பெட் அனிமல்சை பத்தி கட்டுரை எழுதனும்னா … முதல்ல பள்ளிக்கூடத்துல கட்டுரை போட்டிக்கு உன் பேரை பதிவுசெஞ்சிரு….. இந்த வார லீவ் நாட்கள்ல சின்ன தாத்தா ஊர்ல போய் விடுறேன், அங்க நீ, ஆடு, மாடு ,க, கிளி, புறானு எதுகூட வேணும்னாலும் பழகலாம். அதுக்கு பின்னாடி நீ எந்த அனிமல் பத்தி எழுதனும்னு ஆசைபப்டுறியோ அதைப்பத்தி எழுது
ஹை… சின்ன தாத்தா ஊருக்கு போறோமோ, ரொம்ப ஜாலி, ஜாலி, என்று குதித்தபின், ரொம்ப நன்றிப்பா என்றாவாறு மகிழ்வுடன் வீட்டுப்பாடங்களை படிக்க ஆரம்பித்தவனின் மனம், வரும் சனிக்கிழமைக்காக ஏங்க ஆரம்பித்தது…
சின்ன தாத்தா வீட்டின் முன் பெரிதாக இருந்த கொட்டத்தில், ஒருபுறம் பசுமாடுகளும், அதன் கன்றுகளும் ஒன்றை ஒன்று கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்க , மறுபுறம் வெள்ளாடுகளின் மடியில், குட்டிகள் முட்டி முட்டி பால் குடித்துக் கொண்டிருக்க, சேவல்களும் கோழிகளும் இரை இருக்கும் இடங்களை தேடித்தேடி ஓடி கால்களால் கிளறி கொத்திக்கொண்டிருந்தன…
உனக்கு விளையாட, கிளி, புறா, காடை , கௌதாரினு ஏதாவது குஞ்சுகள் வேணுமா தம்பி என்றவாறு அருகில் வந்தார், சின்னத்தாத்தா வீட்டிலா வேலை செய்யும் கந்தன் மாமா. அதெல்லாம் இங்கே கிடைக்குமா… மாமா..
ஏன் கிடைக்காம, நம்ம தோட்டத்திற்கு மேற்கு பக்கத்துல கொஞ்சம் தூரமா போனா… பரந்து விரிஞ்சு கிடக்குற ராஜாக்காட்டுக்குள்ள பெரிய சோலைக் காடு இருக்கும், அதுல ஏகப்பட்ட பறவைகளும் விலங்குகளும் வாழ்ந்து கிட்டு வருது .. ரெண்டு நாளைக்கு முன்னே கூட, ஒரு பட்டுப் போன பனைமரத்துல ஒரு கிளிக் குஞ்சு, எட்டி எட்டி பார்த்ததை, அந்த வழியாக போன் நான் பார்த்தேன் அங்கே என்னை கூட்டிகிட்டு போறீங்களா மாமா…
போலாம் போலம்.. பயமில்லாத தைரியசாலியா நீ இருந்தா சொல்லு, தோட்ட வேலைகள் முடிஞ்சதும், தாத்தாகிட்ட சொல்லிட்டு போலாம் தம்பி ….
தாத்தா கிட்ட இப்பவே சொல்லிடுறேன்… நீங்க சீக்கிரமா வயல் வேலையை முடிச்சிட்டு வாங்க மாமா, என்றவாறு தாத்தாவிடம் ஓடினான் வருண். கந்தன் மாமாவுக்கு தோட்டத்தில் நிறைய வேலை இருக்கு, நாம் ரெண்டு பேரும் ராஜாக்காட்டுக்கு போலாமா… வேண்டாம் தாத்தா, நீங்க எப்படி பனைமரத்துல ஏறி, கிளிக் குஞ்சு பிடிப்பீங்க…
அந்த ராஜாக்காட்டுக்கு மேற்கு பக்கத்தல ஒரு தாத்தா இருக்காரு, நாங்கள் எல்லாம் அவரை லண்டன் தாத்தானு சொல்லுவோம். வெளிநாட்டுலயே ரொம்ப வருஷம் வாழ்ந்தவரு, நிறையை சம்பாதிச்ச காசோடோ இங்க வந்து பெரிய தோட்டம் வாங்கி, ஆட்களை வச்சு விவசாயம் பாக்குறதோட, நிறைய வளர்ப்பு பிராணிகளும் வளத்துகிட்டிருக்காரு, வா போய் பார்த்துவிட்டு வருவோம் … லண்டன் தாத்தா பழகுவதற்கு இனிமையான வராக இருந்தார் , பேசும் தமிழில் அதிகமாக எளிமையான ஆங்கில வார்த்தைகள் கலந்து கிடந்தன, வீட்டை சுற்றி இருந்த பெரிய இடத்தின், வலதுபுறத்தில் விலங்குகளுக்கான குடில்களும், இடதுபுறம் பறவைகளுக்கான கூண்டுகளும் இருந்தன. லண்டன் தாத்தா ஒவ்வொன்றை பத்தியும், விரிவாகவும் விளக்கமாகவும் சுவராஸ்யமாகவும் சொல்லிக்கொண்டு வந்தது , அருணுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் குதுகாலமாகவும் இருந்தது.
அங்கு வளர்க்கப்பட்டு வந்த ஒவ்வொரு பிராணிகள் பற்றியும், விளக்கமாக வருண் கேட்க, லண்டன் தாத்தாவும் தெளிவாக புரியும் படி விளக்கிக் கொண்டு வந்தார். தென்புறம் இருந்த , பிரமாண்டமான கூண்டில் இருந்து இரண்டு பெரிய பறவைகளைக் பார்த்தும், ஹை.. நெருப்புக் கோழி என்றவாறு பக்கத்தில் ஓடினான் வருண். ஓ… யூ ஆல்ரெடி க்நோஸ் எபவ்ட் ஆஸ்ட்ரிச்சா…
தெரியும் தாத்தா… உலகத்துல வேறு எந்த பறவைக்கும், இவ்வளவு நீளமான கால்களும், கழுத்தும் கிடையாது, என்றவன் இதை இங்கு வளர்ப்பதற்கு அரசாங்கத்திடம் அனுமதி வாங்கியிருக்கீங்களா தாத்தா என்றான். உங்களுக்கு சட்டம் கூட தெரியுமா தம்பி, என்று சிரித்தவாறு வருணனின் முதுகில்
தட்டிக்கொடுதத்வர், இங்குள்ள அனைத்து பிராணிகளும், முறையான அனுமதி வாங்கி வளர்க்கப்படும் உயிரனங்க தான், அதுமட்டும் இல்லை, இங்கே வாராவாரம் ஒரு கால்நடை மருத்துவர் வந்து எல்லா விலங்குகளின் ஆரோக்கியத்தையும் சோதனை செஞ்சி கிட்டு போறார்.
தீக்கோழிகளின், மேல் அன்னத்தில் இருந்து ஒரு கயிறும் தொங்கிக்கொண்டு இருக்க, இவர்களை பார்த்த மகிழ்ச்சியில் குளுங்குளுங் என் கூவியவாறு, தான் நீண்ட கால்களால் அங்கும் இங்கும் பரபர வென, நடை போட்டுக்கொண்டிருந்தது.
இதுக்கு நான் க்ரைன்ஸ் கொடுக்கலாமா தாத்தா …. தாராளமாக கொடுக்கலாம் , பக்கத்தில இருக்கிற ஸ்டோர்ரூம்ல தான் இவைகளுக்கு தேவையான, ‘புட் க்ரைன்ஸை’ வச்சிருக்கோம், என்றவாறு பக்கத்து அறைக்கு சென்றார். அங்கே ஒவ்வொரு பிராணிகளுக்கு தேவையான உணவுவகைகளை தனித்தனியாக
சேமித்துவைத்திருந்தனர். கலவையாக வைத்திருந்த முழுத் தானியங்களை லண்டன் தாத்தா எடுத்துக்கொண்டு வருவதை பார்த்ததும், சந்தோசத்தில், அவைகள் அங்கும் இங்கும் தன் நீண்ட கால்களை வைத்து நடனம் ஆடுவதைப்போல் நடந்ததை பார்க்கப் பார்க்க வருணுககு பரவசமாக
இருந்தது. கூண்டின் கதவுகளை திறந்து கொண்டு உள்ளே சென்றதும், பயம் கலந்த பரவசம்
அடைந்தவன், தாணியங்களை உணவுத்தட்டுக்களில் வைக்க அவை கொத்திக் கொத்தி உண்ண ஆரம்பித்தது… வருணனை விட உயரமாகவும் உருவத்தில் பெரியதாகவும், இருந்த உடம்பை தொட்டும் பார்த்து குதுகாலித்தான் வருண்.
வருண் வாஞ்சையாக அந்தநெருப்புக்கோழிகளை பார்த்த போது, அது தன் கழுத்தை வான் நோக்கி உயர்த்தி நீடடிய பின் இனிமையான குரலில் கூவ ஆரம்பித்தது. அதைப்பார்த்து சிரித்த லண்டன் தாத்தா.. வருணனை தடவிக் கொடுத்து, இந்த ரெண்டு ஆஸ்ட்ரிச்சும் உன்னை ப்ரெண்டா ஏத்துகிச்சாம்.. என்று சொன்னதும் உள்ளுக்குள் மகிழ்ந்து போனா வருண், அதன் நீண்ட கழுத்தை பிடித்து வருட ஆரம்பித்ததும் உடலை சிலிர்த்துக்கொண்டது.. இதை வெளியில் கூட்டிகிட்டு போலாமா தாத்தா..
போலாம் அதுக்காகத்தான் அந்த கயிறு போட்டிருக்கு, எனக்கு வயசாயிருச்சி இல்லையா, என்னை சில சமயங்களில் இழுத்து போட்டுரும்… கொஞ்சம் நேரத்தில் மாரிமுத்து வருவான், அவன் கிட்ட சொல்லி வெளியில் கூட்டிகிட்டு போகச் சொல்வோம் என்றுவாறு இருவரும் வெளியே வர … இன்னும் கொஞ்சம் நேரம் இருங்களேன் என்பது போல், ஏக்கமாக அந்தக் கோழிகளின் பார்வை இருந்தது.
வருணுக்கும் பார்வை முழுவதும், அந்த நெருப்புக் கோழியின் அழகிய நீண்ட கழுத்தின் மீதும், அதன் கண்களில் தெரிந்த ஏக்கத்தின் மீதும் இருக்க…. தாத்தா இந்த நெருப்புக் கோழிக்கு எதுவும் பேர் வச்சிருக்கீங்களா…
நான் வளர்க்கிற எல்லா உயிரினங்களுக்கும் பேர் வச்சிருக்கேன்… பேர் சொல்லி அழைக்கும் போதுதான் அதுங்களுக்கும், நமக்கும் இடையே இருக்கிற பந்தம் வெளிப்படும். ஆண் நெருப்புக் கோழிக்கு நெட்டீ … ங்கிற பேரும் பெண்கோழிக்கு ப்யூட்டி… ங்கிற பேரும் வச்சிருக்கேன் உனக்கு பிடிச்சிருக்கா..
நெட்டீ… ப்யூட்டி என்று மனதுக்குள் சொல்லிப்பார்த்தவன், பேரு அருமையா வச்சிருக்கீங்க என்றவாறு, ஆண் கோழியை பார்த்து, நெட்டீ… என்றதும்.. நெருக்கத்தை வெளிப்படுத்தும் மொழியில் சந்தோஷமாக கூவியது நெட்டி..
வருணனின் எண்ணங்கள் நெருப்புக் கோழியையே சுற்றிச் சுற்றி வர, வருணனின் தாத்தவோ நேரமாச்சு, எல்லாம் பாத்தாச்சுன்னா போலாமா என்றார். தாத்தா நான் சாயங்காலம் வரை இங்கேயே இருந்து, லண்டன் தாத்தா கூட இன்னும் நிறைய பேசித்தெரிஞ்சுகிட்டு வரட்டுமா… என்று அந்த இடத்தைவிட்டு வெளியே வர மனம் இல்லாதவனாய் கெஞ்சினான்.
ஆமாம் வீரய்யா.. உன் பேரன் ஆசைப்படு மாதிரி இன்னிக்கு பூராவும் இங்கேயே இருக்கட்டும்… நாளைக்குத்தானே இவனோட பாதர் வர்ராரு, அதுவரையிலும் கூட இங்கேயே இருக்கட்டும். சின்னப் பையன் ஆசைப்படுறான்ல நான் பத்திரமா பாத்துக்கிறதோட, இங்க இருக்குற எல்லா அனிமல் பத்தியும் டீடெய்லடா சொல்லிக் குடுக்கிறேன்…
வேண்டாம் தாத்தா, எனக்கு இன்னிக்கும் நாளைக்கும் ஆஸ்ட்ரிச்ச பத்தியும், அதோட எப்படி நாம பழகனும், அதுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது… எதிரிகள் கிட்ட இருந்து எப்படி அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். அப்படிங்கிற விபரத்தையும், அது எப்படி முட்டை போட்டு, அடைகாத்து குஞ்சு பொறிக்கும்னு சொல்லுங்க தாத்தா என்றான் உற்சாகம் பொங்க…
இவன் எப்பவும் இப்படியேதான், வள வளன்னு பேசினாலும் விசயத்தோடு மட்டும் தான் பேசுவான் .. சரி… வருண் லண்டன் தாத்தாவை தொந்தரவு செய்யாம அவருக்கு நேரம் கிடைக்கும் போது, உனக்கு வேணுங்குற தகவல்களை கேட்டுத் தெரிஞ்சுக்கோ… நான் இப்போ வீட்டுக்கு போறேன், உனக்கு போதுமான தகவல் அந்த நெருப்புக் கோழியை பத்தி கிடைச்ச பின்னாடி, எனக்கு போன் பண்ணி சொன்னால், உடனே நான் வந்து கூட்டிகிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார் சின்னத்தாத்தா.
என்ன கேட்டே ஆஸ்ட்ரிச்சோட முட்டை பத்திதானே… பொதுவாக இதுங்க பாலைவனத்துலயும், வறண்ட நிலங்களிலும் தான் அதிகமாக காணப்படும், தன்னோடு முட்டைகளை கண்ணுக்குள்ளே ஆழமாக குழி தோண்டி, அதற்குள் பாதுகாப்பாக முட்டைகளை வைத்து, ஆண் கோழியும் பெண் கோழியும் மாறி மாறி அடைகாக்கும். இந்த கோழிகளோட முட்டை சுமாரா ஒன்றரை கிலோ எடை கொண்ட குட்டிப்பாறை
மாதிரி இருக்கும். சுருக்கமா சொல்லனும்னா, ஒரு தீக்கோழியோட முட்டை, நாற்பது கோழி முட்டைகளுக்கு சமமாகும். தாத்தா சொன்ன தகவல்களை கவனமாககேட்டு தனது மூளைப் பகுதிகளில் நன்றாக சேமித்து வைத்துக் கொண்டிருந்த போது மாரிமுத்து மாமா வந்தார்.
மாரிமுத்து வேலையெல்லாம் முடிஞ்சதா… முடிஞ்சதுங்க ஐயா…
இந்த தம்பிக்கு, கொஞ்சம் நேரம் நெருப்புக் கோழிகள் கூட வெளையாட்டு காட்டிட்டு என்னோட ரூமுக்கு கூட்டிட்டு வரயா.. சரிங்க ஐயா…
நான் உள்ளே போய் லன்ச் சாப்புட்டுட்டு, கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன், என்றவாறு கிளம்பிப்போனார் லண்டன் தாத்தா. மாரிமுத்து மாமாவுடன் சென்ற வருணுக்கு, நெருப்புக் கோழியின் மீது சவாரி செய்வது எப்படி என்றும் ,அதற்கு கட்டளையிட வேண்டிய உச்சரிப்பு மொழிகளையும்,
எளிமையாக சொல்லிக்கொடுத்த தோடு அவற்றுக்கு பிடித்த உணவுகள், மற்றும் பிடிக்காத உணவுகள் பற்றிய விவரங்களையும் சொல்லிக்கொடுத்தார்.
கவனமாக கேட்டுக்கொணட வருண்… தீக்கொழிகளின் கால்களை தொட்டு பார்க்க போனான்.
பார்த்து பார்த்து என்ற மாரிமுத்து.. தீக்கோழிகளின் கால்கள், ரொம்ப ரொம்ப வலுவான தாகும். மணிக்கு எழுந்து கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும், எதிரிகளை ஒரே உதையில் வீழ்த்தவும், இந்தக் கால்கள் தான் அவைகளுக்கு பக்கபலமாக இருக்கும் ஆயுதம் என்றார்.
இரவு வரை மாரிமுத்து மாமாவுடனும், நெருப்புக் கோழிகளுடனும் பொழுதை கழித்துத்கொண்டு இருந்தவன், அவற்றின் மொழியை புரிந்தது கொண்டான். ஆபத்து சமயத்தில் எழுப்பும் ஒலிக்கும், சந்தோசத்தில் எழுப்பும் ஒலிக்கும், இடையே உள்ள வித்தியாசத்தையும், அவற்றை பழக்குவற்காக சொல்லும் வார்த்தைகளையும் நன்றாக உள்வாங்கி கொண்டு மாரிமுத்து மாமாவிற்கு நன்றி சொன்னான் வருண்.
இரவு உணவிற்கு பின் நீண்ட நேரம் லண்டன் தாத்தாவுடன் மகிழ்ச்சியாக நெருபப்உக்கோழிகள் பற்றி பேசிக்கொண்டிருந்தவன், குட்நைட் சொல்லிய பின், பக்கத்து அறையில் இருந்த ஜன்னல் வழியாக நெருப்புக் கோழிகளுக்கு டாட்டா காட்டியவாறே படுத்து உறங்கினான்.
நடு இரவுப் பொழுதில், ஆபத்துக் காலத்தில் எழுப்பும் ஒலியில் நெருப்புக் கோழிகள் கூவுவதை கேட்டு விழித்துக்கொண்டு சுற்றிலும் பார்க்க , அந்த இருட்டு கண்களுக்கு பழகிய பின் நான்கைந்து திருடர்கள் , லண்டன் தாத்தா வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவதை பார்த்த திடுக்கிட்டவன், எழுந்து தாத்தாவின் அறைக்கு போக, அந்த அறையை திருடர்கள் வெளிப்பக்கமாக பூட்டியிருந்ததை பார்த்ததும் அதிர்ந்தான்.
நிலைமையை உணர்ந்து கொண்ட வருண், உடனே வெளியே வந்து, நெருப்புக்கோழிகள் அடைந்திருந்த கூண்டின் சாவியை எடுத்து வந்து திறந்தவன், ஆண் கோழியின் மீது லாவகமாக ஏறி அமர்ந்தவாறு, அதன் கயிற்றைப்பிடித்து சுண்டி ஹே..ஹே.. என்றதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் திருடர்களை நோக்கி பாய்ந்தது… கூடவே பெண் கோழியும் ஆக்ரோசத்தோடு வெளியே வந்து, ஒவ்வொரு
திருடர்களாக விரட்டி விரட்டி, தன் கால்களால் உதைத்தும், அலகினால் கொத்தி யும் தாக்க, அவர்கள் வலி பொறுக்க இயலாமல் கத்தி மயங்கி விழுந்தனர்..
உடனே சமயோசிதமாக செயல்பட்டு, குதிரை லாயத்தில் இருந்த கயிறை எடுத்து, திருடர்களின் கைகால்களை கட்டியவன் வீட்டிற்குள் வந்து லண்டன் தாத்தாவின் அறையில் பூட்டியிருந்த, பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தான்.. அங்கே லண்டன் தாத்தா முற்றிலும் சுய நினைவின்றி மயங்கி கிடக்க, ஜன்னலுக்கு அருகில் மயக்கமருந்து குப்பி கிடந்தது . அவரின் படுக்கைக்கு அருகில் இருந்த போனை எடுத்து, சின்னத்தாத்தாவிற்கும், மாரிமுத்து மாமாவிற்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் சொல்ல, அடுத்த அரைமணி நேரத்தில் அந்த இடமே விளக்கு வெளிச்சத்தாலும், போலீஸ்காரர்களாலும் நிறைந்து
கிடந்தது. அந்த மாவட்டத்தில் அடிக்கடி திருட்டு நடத்திக் கொண்டிருந்த கொள்ளைக்கூட்டத்தினரை, கூண்டோடு மடக்கி பிடித்த வருணைப் பற்றிய செய்தி காட்டுத் தீயாக பரவ, காலை விடியும்போதே பத்திரிகை நிருபர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் லண்டன் தாத்தாவின் வீட்டில் கூடிய விட்டனர்.
நிருபர்கள் மாறி மாறி வருணைப்பாராட்டிய படி இருக்க… இந்த திருடர்களை மடக்கி பிடித்தது நான் மட்டும் இல்லை எனக்கு ரொம்ப உதவியாகவும் திருடர்கள் வந்ததை தன் அபயக்குரலால் எனக்கு உணர்த்தியது இந்த நெட்டியும், இந்த பியூட்டியும் தான், என்று நெருப்பேக்கோழிகளை அணைத்துக்கொண்டான். கேமிராக்கள் நெருப்புக் தோழிகளுடன் இருந்த அவனை மாறி மாறி படம் பிடித்துக்கொண்டு இருந்தது.
டேய் வருண்… இன்னும் என்ன தூக்கம் காலையில் சீக்கிரம் கிளம்பி சின்ன தாத்தா ஊருக்கு போகனும்னு சொன்னேனே …
மறந்துட்டியா சீக்கிரம் எந்திரிச்சி கிளம்பு.. என்று அப்பா அவனை உசுப்பியது கண்டு கண்விழித்த வருண் , என்னது ஒரு நாள் முழுவதும் நெருப்புக்கு கோழிகளுடன் பொழுதை கழித்தது எல்லாம் கனவா என்று, தன் தோலை கிள்ளிப் பார்த்து, பின் சிரித்தான். முப்பது நாட்கள் கழித்து, பள்ளிக்கு சென்ற வருணனின் அப்பா ராகவனின் கைகளை பிடித்து குலுக்கிய பிரின்ஸிபல், உங்கள் மகன் வருண் எழுதின ‘ லண்டன் தாத்தாவும் நெட்டியும்’ ங்கிற கட்டுரை , மாநில அளவுல முதல் பரிசை வாங்கியிருக்குது சார்..
வரும் குடியரசுதின விழாவுல, முதல்வர் கையால உங்க மகனுக்கு பரிசு குடுக்கப்போறாங்க, அதற்கான கடிதம் தான் இது, என்று ஒரு கவரை குடுக்க அந்த அறையில் கூடியிருந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியின் குதுகாலம் பரவிக் கிடந்தது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.