எழுதியவர்: பார்த்தசாரதி மீரா
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு!!
லாஸ் ஏஞ்சல்சில் இருந்து விமானம் புறப்பட்டதிலிருந்தே கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் நாடியா. அருகிலிருந்த சிறு பெண் நிறைமாத கர்ப்பிணி … முகம் முழுதும் பதற்றம் அப்பியிருந்தது.
ஊரைச் சுற்றிக் காட்டுத்தீ பரவியதில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு மக்களைப் பாதுகாப்பாக வெளியேறிக்கொண்டிருந்த அமெரிக்கப் போலீஸ் மிகவும் செயலாற்றுவதில் முனைப்பாக இருக்க….
அந்த கர்ப்பிணிப் பெண்ணைச் சட்டென்று நாடியாவுடன் நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏற்றிவிட்டனர்.
மரவீடுகளே அதிகமுள்ள அமெரிக்காவின் பல பகுதிகளைச் சுற்றியுள்ள வீடுகளிலும் இந்தக் காட்டுத்தீ பரவுதலும், அதை ஒட்டிய மக்கள் வெளியேற்றமும் சகஜம்தான்.
அமெரிக்கா ஒரு சொர்க்கபூமி , அங்கு வாழ்வோரெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் என்று எண்ணுபவர்கள், அவர்களின் இந்த மாதிரியான இயற்கைச் சீற்றச் சூழ்நிலைகளையும் உணரவேண்டும் .
வாழ்வின் நிலையாமைத் தன்மையை உணர்த்த இயற்கையின் சீற்றத்தால் உருவாகும் பேரிடர்களையும், விளைவாய்ச் சம்பவிக்கும் கோரத் தாண்டவங்களையும் மீறிய உரத்த சாட்சி ஒன்று உண்டா என்ன?
ஒரு வேளை நிறைமாதமாக இருப்பதால் தவிக்கிறாளோ? வேறு ஒருவரும் கூட வந்த மாதிரியும் தெரியவில்லை. தன்னால் முடிந்த அளவு உதவும் எண்ணத்துடன் , ‘ஹாய்… யூ சீம் டு பி வெரி ரெஸ்ட்லெஸ்… ரிலாக்ஸ் ப்ளீஸ் … மே ஐ ஹெல்ப் யூ … என்று பேச்சுக் கொடுத்தாள்.
வாய் திறந்து பதில் பேசாமல் … நாடியாவின் உள்ளங்கையைத் தன்னிச்சையாய் அழுத்தமாய்ப் பற்றியது அந்தப் பெண்ணின் கரங்கள்.
விமானப் பணிப்பெண்ணின் உதவியுடன் அவளுக்குத் தெம்பு வருவதற்குக் கொஞ்சம் ஆரஞ்சு ஜூஸும் பிறகு லைட் புட்டும் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்தாள் நாடியா .
நாடியாவின் குடும்பம் நியூயார்க்கில் இருந்தது. ஒரு முக்கிய வேலை நிமித்தம் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து வேலையை முடித்துக்கொண்டு அவள் ஊர் திரும்பவும் .. அவசரநிலை அறிவிக்கப்படவும் சரியாக இருக்க …தான் பத்திரமாக இருப்பதாக கணவன் மாத்யூஸுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டாள்.
விமானம் தரையிறங்கியவுடன் பத்திரமாக இந்தப் பெண்ணை அவர்கள் பாமிலியிடம் சேர்த்துவிடவேண்டும்… எண்ணிக்கொண்டாள் நாடியா.
விமானம் நியூயார்க் ஏர்போர்ட் வந்துசேர்ந்தபோது அந்தப் பெண் சற்றே தெளிவடைந்திருந்தாள்.
ஏர்போர்ட் பார்மாலிடீஸ் எல்லாம் முடிந்தவுடன் ….இயல்பாக ..நீங்கள் எங்கே போகவேண்டும்… இந்தியில் கேட்டுவிட்டு சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டாள் நாடியா ..ஆனால் அந்தப் பெண்ணின் முகம் ஒளிர்ந்தது.
நீங்கள் இந்தி..யா என்று கேட்டவள் , என் பெயர் ஷிவானி … அதோ அங்கே லவுஞ்சில் சற்று நேரம் உட்கார்ந்து பேசலாமா … கண்கள் கெஞ்சின .
ஷிவானி பேசத் தொடங்கி …சொன்ன கடந்து சென்ற நிகழ்வுகளை உள்வாங்கவே அதிர்ச்சியாகிவிட பேச்சின்றி ஊமையாகிப்போனாள் நாடியா.
நான் மும்பை மாதுங்காப் பகுதியைச் சேர்ந்தவள் . என் தாயாருடன் வசித்து வந்தேன். திடீரென்று அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன் .
இதயவால்வு பழுதடைந்திருப்பதாகவும் சிகிச்சைக்கு ஐந்து முதல் பத்துலட்சம் வரை தேவைப்படுவதாகவும் சொல்ல …என்ன செய்வது என்ற குழப்பம்..
அப்பத்தான் நா வேலை பார்த்துக்கிட்டிருந்த கம்பெனியில ஒரு நண்பர் ‘செராகேட்’ மதருக்கான விளம்பரம் பத்திச் சொன்னாரு ..
ஷிவானியின் மனம் அந்த நாளுக்குச் சென்றது .
‘எனக்குத் தெரிஞ்சவங்கதான் …. நீ பயப்பட வேண்டியதில்ல… அவங்க பூர்விகமும் நம்ம வசிக்கிற மும்பையைச் சேர்ந்ததுங்கறதாலே… இந்திமொழி பேசுற குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணா இருந்தா வசதியா இருக்கும்னு நெனைக்கிறாங்க…உனக்குச் சரின்னா நா அவங்ககிட்டப் பேசுறேன், சொன்ன நண்பரிடம்,
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல பய்யா . எனக்கிருக்கிற ஒரே ஆதரவு எங்கம்மாதான் .. நீங்க பார்த்து ஏற்பாடு பண்ணுங்க.. ஆனா அம்மாவுக்குத் தெரியவேணாம் ..
அம்மா, ஆபீஸ்ல முக்கியமான பிராஜக்ட் விஷயமா அமெரிக்கா அனுப்புறாங்க. உங்க உடல் நிலையைக் காரணம் காட்டி மறுத்துப் பார்த்துட்டேன் . கேட்க மாட்டேங்கறாங்க.
பய்யா , என் கூட வேலை பார்க்கிறவரு..நம்ம வீட்டு நிலைமையை எடுத்துச் சொன்னேன் . உங்க ஆப்பரேஷனும் முக்கியம் ..தள்ளிபோட முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு , இவரு உங்க கூடவே இருந்து கவனிச்சிக்கறேன்னு சொல்லியிருக்கார், சரியாம்மா …
என்னமோ ஷிவானிம்மா …என்னாலே உனக்குத்தான் எவ்வளோ கஷ்டம். உனக்கொரு நல்ல வாழ்க்கையைக் கூட இந்த அம்மாவாலே அமைச்சுத் தரமுடியலியே….தாயின் தவிப்பை உணர்ந்து அருகே அமர்ந்து அவளை ஆறுதல் படுத்தும் விதமாக அணைத்துக் கொண்டாள் ஷிவானி .
இவர்கள் நிலைகண்டு நெகிழ்ந்த ஷிவானியின் நண்பன், மாஜி என்னை உங்க மகனா நினைச்சிக்கோங்க … ஷிவானி பெஹனோட வாழ்க்கை இனி என் பொறுப்பு சரியா… தங்கள் தாய் மொழியிலேயே பேசும் ஒருவன் உதவிக்கு வந்தது நிம்மதியைத் தர ….
கண்களில் நீர் நிறைய அவனை நோக்கித் தாய், மகள் இருவருமே கை கூப்பினர்.
பாஸ்போர்ட், விசா ஏற்பாடெல்லாம் துரிதகதில நடந்தது .
மும்பை ஏர்போர்ட்டில் …
ஷிவானி, மாஜியை நா கவனமாப் பார்த்துக்கிறேன் . நீ போற வேலைய நல்லபடியா முடிச்சிட்டுத் திரும்பிவாம்மா . …
இப்படிச் சொல்லும்போது அவள் திரும்பிவரவே போவதில்லை என்பது நண்பனுக்குத் தெரியுமா என்ன?
லாஸ் ஏஞ்சல்ஸ் ….
விமானநிலையம் வந்து ஷிவானியை அழைத்துப்போய் அவள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த அந்தத் தம்பதியை ஷிவானிக்கு நிரம்பவே பிடித்துப்போயிற்று.
தன்னிலைக்கு மீண்டவள் …
என் பிரென்ட் சொன்னா மாதிரி , கணவன், மனைவி ரெண்டு பேருமே என்கிட்டே பிரியமா இருந்தாங்க .
விந்தணு வங்கியிலேருந்து மெசேஜ் வந்ததும் என்னை ஆஸ்பிட்டல் பார்மாலிடீஸ்காக கூப்பிட்டுப் போனவங்க , இன்னொருபுறம் என் நண்பன் மூலமா அம்மாவோட சர்ஜரிக்கான பணத்தைக் கட்டி நா திரும்பிவர்ற வரைக்கும் அம்மாவ கவனிச்சுக்க ஆளும் ஏற்பாடு பண்ணிட்டாங்க .
மும்பைல அம்மா சர்ஜரி நல்லபடியா முடிஞ்சு வீடு திரும்ப… இங்க என்னோட கர்ப்பமும் கன்பார்ம் ஆச்சு.
இப்ப நிறைமாசம்…. நல்லபடியாக் குழந்தையைப் பெத்துக் கொடுத்துட்டு … அதுவும் ஆண், பெண் ரெட்டைக் குழந்தைங்க வேற. பிரசவம் முடிஞ்சு குழந்தைங்கள ஒப்படைச்சிட்டு ஊர் திரும்பிடலாம்னு பார்த்தா ரெண்டு நாளைக்கு முன்னாடி தலைல இடி விழுந்தா மாதிரி ஊருலேருந்து அந்த சேதி ..
அவள் மனம் மீண்டும் கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்க …
‘ஷிவானி …இந்த மாதிரி சமயத்துல உங்கிட்ட சொல்லக்கூடாதுதான் .ஆனாலும் அது எங்களுக்கு சுயநலமாப்பட்டுது ..அதான்…மென்று விழுங்கி ஒருவழியாய் ….அவள் தாய் திடீர் மாரடைப்பால் இறந்தது குறித்தும் , மேற்படி காரியங்களை முடித்தது குறித்தும் கூறக் கதறினாள்.
டெலிவரிக்கப்புறம் , நீ எங்களோடவே இருக்க ஏற்பாடு பண்ணிடறோம் .
நண்பன் போன் செய்து …எந்த நேரத்துல உன்னோட அம்மாவ மாஜின்னு சொன்னேனோ … நானே அவங்களுக்கு இறுதிக் காரியம் பண்ணும்படியா ஆயிடுச்சி… இந்தியில் தழுதழுத்தபடியே கூறிய நண்பன்…
ஷிவானி, இனிமே நம்ம ஊருக்கு வந்து என்ன பண்ணப்போற …அப்படியே வந்தாலும் மாஜி ஞாபகமாவே இருக்கும் , அங்கே அவங்ககூடவே இருந்துடும்மா …நல்லாப் பார்த்துப்பாங்கன்னு நா உனக்குத் சொல்லத் தேவையே இல்ல…நா அடிக்கடி போன் பண்ணுறேன்… நீ எதையும் நெனைச்சுக் கவலைப்படாம உன் ஹெல்த்தப் பார்த்துக்கோம்மா …..
நிகழ்தருணத்திற்கு மீண்டவள் விழிகளில் நீர் நிறைய.. என்ன வச்சுக் காப்பாத்தறோம்னு சொன்ன அவங்க அடுத்த நாளே காட்டுத்தீக்கு இரையாகப்போறோம்னு கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க.
திடீர்னு பரவின காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் குடியிருப்புகளைச் சூழ ..என்னை முதல்லே வெளியேத்தினவங்க , தப்பிக்கிறதுக்குள்ளே… மேலும் பேச முடியாமல் தொண்டை அடைத்துக்கொள்ள…
ரிலாக்ஸ் ஷிவானி… இந்தச் சின்ன வயசுல உனக்குத்தான் எவ்வளோ சோதனை .இப்பத்தைக்கு நீ எங்க அபார்ட்மெண்டுக்கு வந்துடு, மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ..
ரொம்ப தேங்க்ஸ் தீதி .அவங்க கொடுத்த பணத்துல கொஞ்சம் வச்சிருக்கேன் .செராகேட் மதரா என் வயித்துல சுமந்தாலும் , என் மூலமா இந்த உலகத்தைப் பார்க்கப்போற இந்தக் குழந்தைகளை அனாதைகளாக்க எனக்கு விருப்பமில்லே .
டெலிவரி முடிஞ்சு நார்மலானவுடனே நானும், குழந்தைகளும் மும்பை திரும்ப ஏற்பாடு செஞ்சு குடுத்தீங்கன்னா உங்களுக்குப் புண்ணியமாப் போகும் .
ஒரு அநாதைதானே, அனாதைகளுக்கு ஆதரவா இருக்க முடியும்…இந்த முறை ஷிவானி விம்முகையில் டெலிவரி பெயின் வந்துவிட ..துரிதகதியில் செயல்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தாள் நாடியா.
பிரசவம் எதிர்பாராமல் சிக்கலாகியதில் ஷிவானி இறந்துவிட்டதாகக் கூறி இரட்டைக் குழந்தைகளைக் கொண்டு வந்து காண்பித்தாள் செவிலி.
சில மணிநேரப் பழக்கம்தான் என்றாலும் நடந்த அசம்பாவிதத்தை நினைத்து கண்கள் நீரால் நிறைய …ஏதோ ஒரு பாரம் இதயத்தைப் பிசைந்தது நாடியாவுக்கு.
கூலிக்குச் சுமந்ததுதானே என்று எண்ணாமல் தனது துயரமான சூழ்நிலையிலும் குழந்தைகளின் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டவள் இல்லாமலே போய்விட்டாளே… இறைவா உனக்குக் கருணையே இல்லையா?
மாத்யூசுக்குப் போன் செய்து விவரங்கள் கூறி.. தான் வந்து சேரத் தாமதமாகும் என்றாள்.
அடுத்து என்ன செய்வது என்று ஒரே குழப்பம் நாடியாவுக்கு.
மனதில் திடீரென்று ஒரு ‘பளிச்’ எண்ணம் மின்னல் போல் தோன்றி மறைவதற்குள் நண்பன் விஷ்ணுவின் மனைவி அம்ருதாவுக்குப் போன் செய்தாள்.
நாடியா ..என்ன திடீர்னு? ஹவ் ஆர் யூ ? நல விசாரிப்புகள் முடிந்தவுடன் ..
அம்ரும்மா ..விஷ்ணு போன வேலை என்னாச்சு?
பெயிலியூர்தான் நாடியா. தானம் செய்யப்பட்ட இவரோட விந்தணுவை ஒரு கப்பிள் ஆல்ரெடி முறையாப் பெற்று , அந்த கர்ப்பத்தைச் சுமக்குற பெண் இப்ப நிறைமாசமாம்…
ஊம் ..என்ன பண்ணறது.இவருக்கு இப்படி ஒரு விபத்து நடந்திருக்க வேண்டாம் .விதிப்படிதான் வாழ்க்கைன்னு ஏத்துக்கிட்டு அடாப்ட் பண்ணிக்கலாம்னா கேட்கமாட்டேங்கறாரே ..புலம்பினாள் அம்ருதா.
அவளைச் சமாதானப்படுத்திய நாடியா … அவனோட வலி அவனுக்கும்மா, நா அவன்கிட்டப் பேசறேன், உங்க ரெண்டு பேருக்கும் ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன்.
சுருக்கமாக அந்த ரெட்டைக் குழந்தைகள் பற்றிய விவரங்கள் சொல்லி …விஷ்ணுவிடமும் பேசிச் சமாதானப்படுத்தி .. இருவரையும் தான் இருந்த ஆஸ்பிட்டலுக்கு வரவழைத்தாள் நாடியா .
ஆஸ்பிட்டல் பார்மலிடிஸ் முடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.
விஷ்ணு… நாடியாவிடம்…
ஊம் …எப்படியாச்சும் டொனேட் பண்ணின என்னோட ஸ்பெர்ம் செல்ஸ் மூலமா குழந்தை பிறக்கணும்னு போராடினேன் .நடக்கல.
ஆனா இந்தக் குழந்தைங்களக் கையிலே ஏந்தறப்போ … வேற லெவல்ல பீல் ஆகுது… தேங்க்ஸ் எ லாட் நாடியா.
முறைப்படி நாங்கதான் பாரேன்ட்ஸ்ன்னு கூடிய சீக்கிரமே ரிஜிஸ்டர் பண்ணிடறேன்.. விஷ்ணு சொல்ல…
நாடியாவைக் கட்டிப்பிடித்து முத்தம் பதித்து ஆனந்தக் கண்ணீருடன் தன் நன்றியை வெளிப்படுத்தினாள் அம்ருதா.
தங்கள் வீடு நோக்கிப் பயணித்த நாடியா ..’ஷிவானி உன் குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்துவிட்டேன். உன் ஆன்மா சாந்தியடையட்டும் … என்று மனமுருமப் பிரார்த்தித்தவளுக்கோ ..மற்றவர்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை …குழந்தைகள் உரிய இடத்தை அடைந்துவிட்டதை…
இறைவன் போடும் முடிச்சைப் பார்த்தீர்களா? சிக்கல்களை விளைவிக்கும் அவனுக்கு மட்டுமே தெரியும் எவ்விதம் அந்தப் புதிரை விடுவிப்பது என்று …
எங்கே வாழ்க்கை தொடங்கும்..அது எங்கே எவ்விதம் முடியும்…. பாதையெல்லாம் மாறி வரும்…. தத்துவக் கவிஞன் கண்ணதாசனின் வரிகள்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.