எழுத்தாளர்: லீலா ராமசாமி
பக்கத்து வீட்டுப் பச்சிளம் குழந்தை பசியில் அழுவது கேட்டு மீனாவுக்குப் பால் சுரந்து மேலாக்கு நனைந்தது.
“பவானி! அந்தக் குழந்தை ஏன் இப்படி அழுவுது? அதோட அம்மா எங்கே போயிட்டாங்க?”
“அந்தக் குழந்தை பிறந்து ரெண்டு மாசந்தான் ஆகுது. அவங்க அம்மாவுக்கு மார்புல தீக்காயம் பட்டுட்டதால அந்தக் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியலை. அந்தக் குழந்தை வேற எதுவும் சாப்பிடுறதும் இல்லை. அதான்
பசியில அழுவுது.”
என்றாள் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த பவானி.
உள்ளே சென்று சற்று நேரம் கழித்து வெளியே வந்த மீனா பவானியிடம் ஒரு சிறிய பால் புட்டியைக் கொடுத்து, “இதைத் கொண்டு போய் அந்தக் குழந்தைக்குப் புகட்டச் சொல்லு. இது தாய்ப் பால்தான்.” என்று அனுப்பினாள்.
அந்தக் குழந்தையின் அழுகைச் சத்தம் நின்றது. பவானி வந்து மகிழ்ச்சியுடன், “மீனாம்மா! குழந்தை ரொம்பப் பசியில நீங்கக் குடுத்ததை ஆவலாக் குடிச்சிட்டுத் தூங்குதும்மா. அவங்கம்மா கண்ணுல தண்ணியோட கையெடுத்துக் கும்புட்டாங்க.”
“சரி அப்பப்போ என்னால முடியும் போது குடுக்கிறேன். கொண்டுபோய் அந்தக் குழந்தைக்குக் குடு.”
“மீனாம்மா! நீங்க ரொம்பப் பெரிய புண்ணியம் செய்றீங்க. ஒரு பச்சை உசுரக் காப்பாத்துறீங்க.”
******
தூங்கிக் கொண்டிருந்த மீனாவின் குழந்தையை அவளுடைய மாமியார் ஜெயா தூக்கிச் சென்றார். அவருடைய கையில் பால் புட்டி இருந்தது.
“அம்மா! குழந்தை இப்பத்தான் எங்கிட்ட வயிறாரப் பசியாறி தூங்குறான். இப்போ ஏன் அவனுக்குப் பசும் பால் ஊட்டப் போறீங்க?”
மீனா தன் மாமியாரிடம் கேட்டாள்.
“குழந்தை பசி மயக்கத்தில தூங்குறான். நீயே ஒடிஞ்சி விழற மாதிரி இருக்கே. இதுலே பக்கத்து வீட்டு குழந்தைக்கு வேற பால் தானம் பண்றே? உங்கிட்ட எப்படி பால் ஊறும்? எம் பொண்ணுங்க நல்லா புஷ்டியாக இருப்பாங்க. அவங்க யாருக்குமே பால் இல்லை. அவங்க குழந்தைகளுக்கு எல்லாமே பசும்பால் ஊட்டித்தான் வளத்தேன். இந்தப் பேரனை விட்டுடுவேனா?”
குழந்தைக்கு வயிறு நிரம்பி இருந்ததால் குழந்தை பால் புட்டியின் நிப்பிளை நாவால் விலக்கினான்.
ஜெயா ஒரு பாலாடையை எடுத்து குழந்தையை மடியில் கிடத்தி பாலைப் பாலாடையில் ஊற்றிக் குழந்தைக்குப் புகட்டினார்.
ஒரு நிலையில் குழந்தை எல்லாப் பாலையும் விசையுடன் வெளியில் வாந்தி எடுத்தான்.
மீனா அவசரமாகக் குழந்தையை வாங்கித் தோளில் சாய்த்து முதுகை மெதுவாகத் தட்டி நீவி விட்டாள்.
பிரசவத்தின் போது மீனாவுக்கு நன்றாகத் தாய்ப்பால் சுரப்பதற்கு மீனாவின் தாய் ஏதேதோ பத்திய முறையில் சமையலும் மருந்தும் செய்து கொடுத்திருந்தார்.
மீனாவின் மாமியாருக்கு அவள் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதில் நம்பிக்கையே இல்லை.
அடுத்த நாள் குழந்தையையும் மீனாவையும் பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் ஜெயா. குழந்தை பால் புட்டியின் நிப்பிளை விலக்குவதையும் பாலாடையில் புகட்டினால் வாந்தி எடுப்பதையும் பற்றிக் கூறி ஆலோசனை கேட்டார்.
மருத்துவர் மீனாவைச் சோதித்துப் பார்த்து விட்டு அவளிடம் சில கேள்விகளைக் கேட்டு விபரங்களைத் தெரிந்து கொண்டார்.
பின்பு ஜெயாவிடம் விளக்கினார்.
“மீனாவுக்கு நல்ல தாய்ப்பால் சுரப்பு இருக்கு. குழந்தைக்குப் போகச் சில சமயங்களில் மேலாக்கு நனையுதாம். அந்த அளவுக்கு நல்லா தாய்ப்பால் சுரக்குது.
இப்போதைக்கு நீங்க தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு குடுத்துட்டு வரச் சொல்லுங்க.”
“மீனா ஒல்லியா இருக்காளே.. அவளுக்கு அவ்வளவு பால் சுரக்குமா?”
“ஒல்லியா இருக்கிறதுக்கும் பால் சுரப்பதற்கும் சம்பந்தமில்லைமா.
உங்க பேரனுக்குப் போக மீதிப் பாலைத் தானம் பண்ணலாம். எத்தனையோ பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் இல்லாமல் இறந்து போயிடறாங்க. அந்த மாதிரி குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தானம் கொடுக்கலாம்.”
“டாக்டர்! என் மருமக என் பேரனுக்கு வேண்டிய அளவு தாய்ப்பால் கொடுக்கட்டும். அப்படியும் பால் அதிகமா சுரந்தா தாராளமா வேற குழந்தைக்கும் தானம் பண்றதுக்கு நான் சம்மதிக்கிறேன். அது ஒரு பச்சைக் குழந்தை இறந்து போறதைத் தடுக்குமே.”
ஜெயாவும் மீனாவும் திருப்தியுடன் வீடு திரும்பினார்கள். குழந்தை தூக்கத்தில் சிரித்தான்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: