எழுத்தாளர்: குட்டி பாலா
” சுந்தரம், மறக்காமல் வெள்ளிக்கிழமை சாயந்திரம் பார்ட்டிக்கு வந்துவிடு” என்று வாசலில் நின்று வழியனுப்பினாள் ராஜி.
“அக்கா, நம் ஜானகி பிறந்தநாளுக்கு வராமல் இருப்பேனா. அவசியம் வந்து விடுவேன்” என்றார்.
எதிர் வீட்டு ஜன்னல் அருகே நின்றுகொண்டிருந்த கண்ணனின் செவிகளில் இந்த உரையாடல் தேனாக விழுந்தது.
ஆறு மாதங்கட்கு முன் எதிர் வீட்டில் குடியேறியவர்கள் ராஜி குடும்பத்தினர். ராஜி, அவள் கணவர், மகள் மூவர் மட்டுமே இருப்பது கண்ணனுக்கு தெரியும். அந்தப் பெண்ணும் கண்ணன் வேலை பார்க்கும் ஒலிம்பியாவில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள் என்பதும் தெரியும். சென்னைக்கு புதிது என்பதால் மகளை தினமும் பேரூந்தில் அனுப்ப ராஜியும் வருவாள். அவளுடன் தனியாக சந்தித்து பேசிட வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அவனது சுபாவம் தடுத்தது. தன் தாயாரிடம் புகார் செய்தால் விவகாரம் ஆகிவிடும் என்றும் பயம்.
இன்று அவள் பெயர் ஜானகி என்பதையும் வெள்ளிக்கிழமை அவளின் பிறந்தநாள் என்பதையும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சியடைந்தான்.
வெள்ளிக்கிழமை. ஒரே பேருந்தில் பயணித்து ஒலிம்பியாவை அடைந்தனர். வழக்கமாக லிஃப்ட்டில் ஐந்தாவது தளத்தில் வெளியேறும் கண்ணன் அன்று அவளுடனே எட்டாவது தளத்திற்கு வந்தது அவளுக்கு வியப்பாக இருந்தது. ஆனால் எதுவும் கேட்கவில்லை. லிஃப்டிலிருந்து வெளியே வந்ததும் அவளை நெருங்கி “எக்ஸ்கியூஸ் மீ. பார்ட்டிக்கு வர முடியாது. இந்தப் பரிசை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ஒரு அட்டைப் பெட்டியை அவள் கைகளில் திணித்துவிட்டு படிகளில் இறங்கி வேகமாக சென்றுவிட்டான்.
இரவு 11 மணிக்கு வீடு திரும்பியவன் தாயிடம் “எதிர்வீட்டு பார்ட்டிக்கு போயிருந்தீர்களா?” என்றதற்கு “”அழைப்பில்லையே”
என்ற பதில் கேட்டு மௌனமானான். சனி ஞாயிறு விடுமுறை என்பதால் அவள் பதிலை தெரிந்து கொள்ள முடியாதே என்று கவலையோடு தூங்கிவிட்டான்.
ஞாயிறு காலை 10 மணியளவில் வெளியே புறப்பட்டவனிடம் தாய் சுசிலா “3 மணிக்கு பெண் பார்க்கப் போகிறோம். சீக்கிரமாக வந்துவிடு” என்றதும் “பெண் யாரம்மா? திடீரென்று சொல்லுகிறாய்” என்று எரிச்சலோடு கேட்டான். “போவோம். உனக்கு பிடித்தால்தான் மேற்கொண்டு பேச்சு. வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டேன்”
என்றதும் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே போனான்.
சரியாக 3:00 மணிக்கு இருவரும் புறப்பட்டனர். வீட்டைப் பூட்டும்போது “கேஸ் பையன் வருவான். சாவியை எதிர் வீட்டில் கொடுத்துவிட்டு போவோம்” என்ற சுசிலா எதிர்வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். கதவைத் திறந்த ராஜி அவர்களை வரவேற்று உட்கார சொன்னாள். வெளியே தயங்கி நின்ற கண்ணனை சுசீலா உள்ளே வந்து உட்காருமாறு கண் ஜாடையில் சொல்லவும் வந்து உட்கார்ந்தான்.
“ரம்யா” என்று ராஜி அழைத்ததும் பட்டுப்புடவை சரசரக்க வெளியே வந்தவளைப் பார்த்து திகைத்த கண்ணனிடம் “நீ ஜானகி என்று நினைத்து பரிசு கொடுத்தது இந்த ரம்யாவுக்குத்தான். ஜானகி என்பது அவள் அப்பா ஜானகிராமன். வெள்ளிக்கிழமை பார்ட்டியில் ரம்யா மட்டும் எல்லோர் முன்னிலையில் நீ செய்த காரியத்தை சொல்லியிருந்தால் நம் மானம் போயிருக்கும். பின் நாங்கள் கலந்து பேசியபோதுதான் தெரிந்தது-ஆறு மாதமாக அவளும் உன்னை கவனித்திருக்கிறாள் என்று. சரி. இப்போது சொல் ‘ரம்யா ஓகேவா” என்றதும் “உன் விருப்பம் அம்மா. எப்போதுமே எல்லாமே என்
நல்லதுக்குத்தான் என்பாயே” என்று வழிந்தான் கண்ணன்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!ள
மேல் விபரங்களுக்கு: