ஒரு பக்க போட்டிக்கதை: சுற்றுலா

by admin
50 views

எழுத்தாளர்: ஸ்ரீ.தாமோதரன்

     ஏங்க..! கண்ணம்மா நாளைக்கு நம்ம கூட வரமுடியாதாம் மனைவி கற்பகம், காலையில் வெளியில் கிளம்பி கொண்டிருந்த சுகுமாரிடம் சொல்ல எரிச்சலானான்.

     ஏனாம்? ஒரு வாரமா சொல்லிகிட்டிருக்கும் போது ஊம்..ஊம் னுதான சொல்லிகிட்டிருந்தா? நீ அவளுக்கு ரொம்ப இடம் கொடுத்திட்டே, வேலைக்காரங்களை அவங்க தகுதிக்கேத்த மாதிரிதான் மதிக்கணும், முணுமுணுத்தான் சுகுமாரன். ஏதோ இவன் பரம்பரையாய் பண வசதியுடன் இருந்தவன் போல். அவன் அப்பா, அந்த காலத்தில் வாயை கட்டி வயிற்றை கட்டி தன் விவசாய நிலங்களை விற்காமல் “வானம் பார்த்த பூமியாகவேனும் போட்டு வைத்து “மில்” வேலைக்கு சைக்கிளில் போய் கொண்டிருந்தவர் தான்.

     இன்று நிலங்களின் விலை தாறுமாறாக உயர பாதி அளவு நிலங்களை விற்றதினால் கிடைத்த பணத்தில் வந்த “கோடீஸ்வரன்” பட்டம். வெளேரென்ற வேட்டி, சட்டை, டவுனுக்குள் ஒரு ஆபிஸ் திறந்து “பைனான்ஸ்” போர்டு போட்டு உட்கார்ந்து கொண்டவன். விலையுயர்ந்த கார், ஒரு மாளிகை, குழந்தைகள் படிக்க நல்ல வசதியான “ஸ்கூல்”.

    கற்பகத்துக்கு உதவியாய் வீட்டு வேலை செய்ய, குழந்தைகளை கூட்டி வர என்று ஒரு வேலைக்காரியாக கண்ணம்மாளை ஏற்பாடு செய்து கொண்டான்.

     இந்த விடுமுறைக்கு குழந்தைகளை அழைத்து கொண்டு மைசூர்,கோவா, அப்படியே தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா வரை சென்று வர ஒரு வாரமாய் இவனும் கற்பகமும் திட்டமிட்டு கூட கண்ணம்மாளையும் உதவிக்கு கூட்டி செல்லவேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். கண்ணம்மாளிடமும் சொல்லியிருந்தார்கள். அவள் எப்பொழுதும் இரவு சமையலை செய்து முடித்து விட்டு எட்டு மணிக்கு வீட்டுக்கு சென்று விட்டு காலை ஆறு மணிக்கு வேலைக்கு வந்து விடுபவள். மூன்று தெரு தள்ளிதான் இருக்கிறது அவள் வீடு.

    இரவு ஒன்பது மணியிருக்கும், மறு நாள் காலையில் சுற்றுலா கிளம்புவதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த பொழுது அறை வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தான் சுகுமாரன். எதிரில் தயங்கி தயங்கி கண்ணம்மாள் நின்று கொண்டிருந்தாள்.

    அவளை கண்டவுடன் இவனுக்கு எரிச்சல் பற்றி கொண்டு வந்தது, எதுக்கு வந்தே? அதான் எங்களோட வரமுடியாதுன்னு சொல்லிட்டியில்ல,

    ஐயா…எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, கோபிச்சுக்காதீங்க, எனக்கு பதிலா என் பொண்ணு நாளைக்கு காலையில வந்துடுவா..

    உன் பொண்ணா? சின்ன பொண்ணாச்சே..!

    ஐயா வயது பதுமூணூ ஆச்சுங்க, எட்டாவது முடிச்சுட்டா, என்னைய விட எல்லா வேலையும் சுறுசுறுப்பா செய்யுங்க..

    ம்.ம்…மனைவியின் முகத்தை பார்த்தான், அவள், வச்சுக்குவோம், கூடமாட உதவிக்குத்தான, தலையாட்டினாள்.

     சரி நாளைக்கு காலையில அவளுக்கு இரண்டு “செட் டிரஸ்” மட்டும் கையில கொடுத்து “நேரத்துல” கொண்டு வந்து விட்டுடு.

     சரிங்கய்யா, மகிழ்ச்சியுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

    வீட்டில் இவளை எதிர்பார்த்து நின்றிருந்த மகளிடம் “ஐயா” சரின்னுட்டாரு, உன் “டிரஸ்” இரண்டு எடுத்து வச்சுக்கோ, பார்த்து பதவிசா நடந்துக்கோ, நாம அவங்க வீட்டுல வேலை செய்யறவங்கதான், இதை மனசுல வச்சுக்க. அவங்க ரொம்ப நல்லவங்க, ரொம்ப தொல்லை பண்ணமாட்டாங்க.

    “ஹை” அம்மான்னா அம்மாதான் மகிழ்ச்சியுடன் அம்மாவை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தாள் மகள், எப்படியோ நானும் ஸ்கூல் லீவுல “டூர்” போனேன்னு என் பிரண்ட்சுகிட்ட சொல்லுவேனே,

    மகிழ்ச்சியுடன் அங்கிருந்து ஓடியவளை ஆசையுடன் பார்த்தாள் கண்ணம்மாள், என் புள்ளையும் இந்த லீவுக்கு “டூர்” போறதுக்கு நான் உடம்பு சரியில்லைன்னு பொய் சொன்னாத்தான் என்ன? ஏன்னால அவ்வளோ செலவெல்லாம் பண்ணி எங்க அனுப்ப முடியும்?

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!