எழுத்தாளர்: தஸ்லிம்
அவளை சுற்றி மனிதர்களின் குரல்களும் குழந்தைகளின் சிரிப்பும் விளையாட்டுமாக அந்த இடமே கூச்சல்களால் நிறைந்திருந்தது.. ஆனால் அது எதுவுமே அவள் கருத்தில் பதியவே இல்லை.. அவள் பழைய சம்பவங்களின் தாக்கத்தில் விழிகளில் வழியும் கண்ணீரை துடைக்கவும் தோன்றாமல் தனக்கு நேர்ந்ததை எண்ணிக் கொண்டிருந்தாள்.. அப்போது அவளுக்கு பதினான்கு வயது இருக்கும்.. தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தவள் தன் சித்தியிடம் சொல்ல,
அவரோ, “அதெல்லாம் இந்த வயசுல அப்படித்தான் இருக்கும்.. நீதான் கன்ட்ரோலா இருக்கணும்” என்று சொல்லிவிட்டாள்.. அப்போதிருந்து தன் உணர்வுகளை அவள் அம்மாவிடம் கூட வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை.. தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.. ஆனால் அவளுக்கு எங்காவது தன் உணர்வுகளை கொட்டி விட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்க. அவற்றை எல்லாம் தன் நாட்குறிப்பில்(diary) எழுதி வைத்துக் கொள்வாள்.. வருஷங்களும் கடந்தது..
ஒரு நாள் அவள் நாட்குறிப்புகள் அவள் அம்மாவின் கண்ணில் பட., அது என்னவென்று எடுத்துப்படிக்க தொடங்கியவருக்கு உலகமே சுழன்றது. கையில் இருந்த நாட்குறிப்பு கீழே விழுந்தது. கண்ணில் ரௌத்திரம் பெருகியது.. அப்போது உள்ளே நுழைந்த அவளுக்கு அவள் அம்மாவின் கையில் இருந்த குறிப்பேடு அவருக்கு அனைத்தும் தெரிந்து விட்டதை உணர்த்தியது..
“இதெல்லாம் என்ன? நீ எழுதிருக்குறது எல்லாமே உண்மையா?” என்று அவர் அவள் அருகில் வர.. அவளும் கலங்கிய கண்களோடு “ஆமாம்” என்று தலையாட்ட,
2 / 4
“அய்யோ நான் என்ன செய்வேன்.. இல்லை இதை நான் ஒருக்காலமும் அனுமதிக்க மாட்டேன்” என்று கத்திக் கொண்டே அவளை அடிக்கத்துவங்க..
“அம்மா நான் சொல்றதை கொஞ்சம் கேளுமா.என் உணர்வுகளையும் புருஞ்சுக்கோமா” என்று அடிகளை வாங்கியபடி அழுது கொண்டிருந்தாள். அப்போது உள்ளே நுழைந்த அவள் தம்பி வெற்றி, அதைப் பார்த்து விட்டு வேகமாக சென்று அவரை தடுத்து அவன் பக்கமாக இழுத்தவன், “ஏன்மா இப்படி அடிக்கிற? அப்படி என்ன நடந்ததுப் போச்சு” என்று அவரை சத்தமிட.
அவரோ, “என்ன நடந்துச்சா.. இந்த பாவி..” என்று சொல்ல வந்ததை நிறுத்தி மீண்டும் அவளை அடிக்க துவங்க.. அவரை தடுத்தவன், “முதல்ல என்னன்னு சொல்லுமா” என்று அவரை பிடித்து உலுக்க..
“அந்த அசிங்கத்தை எப்படி நான் என் வாயால சொல்லுவேன்.. இங்க பாரு” என்று அந்த நாட்குறிப்புகளை எடுத்து வந்து போட.. அதில் ஒன்றை எடுத்து படித்ததுமே அவனுக்கு விஷயம் முழுமையாக புரிந்து போனது. முகத்தை மூடி கொண்டு குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருக்கும் அவளை பார்த்தவன் அதை முழுவதுமாக படித்து முடித்தான்..
அவன் அம்மாவிற்கு கோபம் வந்ததை போல இவனுக்கு வரவில்லை.. மாறாக அவள் உணர்வுக் குவியல்களின் தாக்கத்தில் அவன் நின்றிருந்தான்.. அவனுக்கு அவளுடைய நிலைமையின் வீரியத்தை முழுதாக புரிந்துக்கொள்ள முடிந்தது..
“பார்த்தியா வெற்றி உன்னாலையும் இதை தாங்க முடியலைல” என்று மீண்டும் அவளை அடிக்க.
3 / 4
அவரைத் தடுத்தவன், “அம்மா அக்காவை அடிக்காத. இதுல அவ மேல என்ன தப்பு இருக்கு?” என்று சொல்லவும்., சடாரென்று நிமிர்ந்து அவனை பார்த்தவள், “வெற்றி” என்று அவனை இறுக கட்டிக் கொண்டு அழுதாள்.. இது கவலையினால் வந்த கண்ணீரல்ல.. தன்னையும் ஒரு உயிர் புரிந்து ஏற்றுக் கொண்டதே என்று சந்தோஷத்தில் வந்த ஆனந்தக்கண்ணீர்..
வெற்றி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்ற அவர்களின் அம்மா,”டேய் என்னடா சொல்ற.. அவன் உன் அண்ணன்டா.. அக்கான்னு ஏன்டா கூப்பிடுற அறிவுக்கெட்டவனே” என்று கத்த..
வெற்றி, “அம்மா இயற்கையாகவே அப்படியே அவளுக்காகுதுன்னா நம்ம என்ன பண்ண முடியும். நம்மளே அவளை ஒதுக்கி வச்சுட்டா அவளை யாரு சேர்த்துப்பா. நீ எப்படியோ., ஆனா நான் எப்பவும் அவளுக்கு ஆதரவா தான் நிப்பேன்” என்று சொல்லிவிட்டு அவளை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டான்..
ஆம், அவன் சுந்தர். இப்போ சுந்தரி. அவனுடைய அம்மா ஆரம்பத்தில் முறுக்கிக்கொண்டு இருந்தாலும் வெற்றி அவரை கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப்படுத்திவிட்டான். இப்பொழுது அவர் முழுமையாக மனம் மாறாவிட்டாலும் கூட சுந்தரியை ஒதுக்கி வைக்கவில்லை.. அதற்குப்பிறகு தன் தம்பியின் துணையோடு படித்து திருநங்கையாக முன்னுக்கு வந்தவளை வேலு திருமணம் செய்துக்கொண்டார்..
அவர்கள் தத்தெடுத்த குழந்தைக்கு தான் இன்று காதுக்குத்து. பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளை, “சுந்தரி இங்கே இருக்கியா. உன்னை எங்கெல்லாம் தேடுறது. எழுந்திருச்சு வா. அங்க எல்லாரும் உனக்காக காத்துட்டு இருக்காங்க” என்று உசுப்பவும் தான் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு அங்கிருந்து எழுந்தாள் சுந்தரி.
4 / 4
அவள் கண்ணீரை பார்த்தவன், “ப்ச் அழக்கூடாது” என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு அங்கு செல்ல., அங்கு ஹரிணியை மடியில் அமர்த்தி கொண்டு அமர்ந்திருந்தான் வெற்றி.
அவளைப் பார்த்து வெற்றி, “என்னக்கா எங்கப்போன? பாரு உன் பொண்ணு எவ்வளவு பாடுபடுத்துற என்னைன்னு” என்று சிரித்துக்கொண்டே சொன்னவன், “வா வந்து உக்காரு” என்று அவன் பக்கத்திலயே அவளை அமர்த்திக் கொண்டான்.
பெற்றத்தாயேப் புரிந்துக்கொள்ளாத அவள் உணர்வுகளை புரிந்து மதித்து, அனைத்திலும் உறுதுணையாக இருந்து அவளை உத்வேகப்படுத்தும் அவன் தம்பி வெற்றி என்றும் சுந்தரிக்கு பெற்றெடுக்காத தாய் தான்..
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!மேல் விபரங்களுக்கு:
மேல் விபரங்களுக்கு: