எழுத்தாளர்: எம்.கே.மதன் குமார்
பாலத்துக்கு அடியில் ஒரு இளைஞன் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தான்.
போலீஸார் அந்த இடத்தை வளையமிட்டிருந்தார்கள்.
வந்து நின்ற ஜீப்பிலிருந்து இறங்கிய ஏட்டு ஒரு வயதான தம்பதியை இறக்கி இளைஞன் பிணமாக கிடக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வதைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
இருவரும் கதறி அழுதபடி அவர் பின்னால் போனார்கள்
இன்ஸ்பெக்டருக்கு அவர்களைப் பார்க்கவே பாவமாகயிருந்தது
அந்த வயதான தம்பதியினர் நேற்று மாலைதான் ஸ்டேஷனுக்கு வந்து தங்களின் ஒரே மகனை நான்கு நாட்களாக காணவில்லை என்று அழுகையுடன் புகார் செய்திருந்தார்கள்.
விரைவில் கண்டுபிடித்து தருவதாக ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
ஆனால், காலையில் இங்கு ஒரு சடலம் கிடப்பதாக தகவல் வந்தது.வந்து பார்த்தால் அவர்கள் கொடுத்த புகைப்படமும், அடையாளங்களும் இந்த உடலுக்கு பொருந்திப் போனது
ஏட்டுவை அனுப்பி அவர்களை அழைத்து வரச் சொன்னார்
ஏட்டு வேகமாய் அவரிடம் வந்தார்
‘’டிரஸ் ஒத்துப்போவது.. ஆனா இது எங்க மகன் இல்லைன்னு சொல்றாங்க ஸார்..’’
இன்ஸ்பெக்டர் முதலில் திகைத்து, பிறகு நிம்மதியானார்.
அவர்களிடம் போனார்.
பெரியவர் தெளிவடைந்திருந்தார்.அந்த அம்மாள் இறந்துக் கிடந்த இளைஞனை பார்த்தபடி இன்னும் அழுதுகொண்டே இருந்தார்.
இன்ஸ்பெக்டர் கேட்டார்.
‘’ஏம்மா அதுதான் உங்க மகன் இல்லைன்னு சொல்லிட்டீங்களே அப்புறம் ஏன் அழுதுகிட்டே இருக்கீங்க..’’
அழுகையோடு அந்த தாய் சொன்னாள்.
‘’என் மகன் இல்லைதான் ஆனால் இவனும் என்னைப் போல ஒரு தாய்க்கு பிள்ளையாதானே இருப்பான்.. அந்த தாயை நினைச்சிதான் அழறேன்..’’
எவ்வளவு ஈரமான வார்த்தைகள். இன்ஸ்பெக்டர் நெகிழ்ந்து நின்றார்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: